Tuesday, July 5, 2011

பதிவர் சக்தி

சக்கை எதுக்கு மொக்கை எதுக்கு
சரக்கு இருக்கையிலே-வெட்டி
குப்பை எதுக்கு கூளம் எதுக்கு
ஞானம் இருக்கையிலே

வித்தை தெரிந்த பதிவர் இங்கே
நிறைய இருக்கிறோம்-எனவே
முத்தைப் போல மின்னும் பதிவு
நிறையப் பண்ணுவோம்

பதிவர் நிறைய பெண்கள் இருக்க
பண்பாய் எழுதுவோம்-மூத்த
பதிவர் இங்கு நிறைய இருக்க
பணிவாய் எழுதுவோம்

புதிய பதிவர் நிறைய எழுத
ஊக்கம் கொடுப்போம்-அவர்கள்
உரிய இலக்கை எட்ட நாளும்
வாக்கும் அளிப்போம்

நொடியில் உலகை சுற்றும் வலிமை
பதிவுக்  கிருக்குது-எதையும்
எளிதாய் மாற்றும் சக்தி  வலிய
பதிவுக் கிருக்குது

எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம்
பதிவுக் கில்லேங்க-அதனால்
பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
புரிந்து கொள்வோங்க

சக்தி கூட சக்தி கூட
பொறுப்பும் கூடணும்-அந்த
ஸ்பைடர் மேனின் கருத்தை நாமும்
மனதில் கொள்ளணும்

கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
பதிவு எழுதுவோம்-புதிய
சக்தி யாக பதிவர் உலகை
மாற்ற முயலுவோம்





44 comments:

தமிழ் உதயம் said...

அறிவுரையாக அல்லது ஆலோசனையாக எடுத்து கொள்ளலாம். சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.அறிவுரையாக அல்லது ஆலோசனையாக எடுத்து கொள்ளலாம். சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.

Gopi Ramamoorthy said...

\\கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
பதிவு எழுதுவோம்\\

சரியாகச் சொன்னீர்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பதிவர் நிறைய பெண்கள் இருக்க
பண்பாய் எழுதுவோம்-//

//எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம்
பதிவுக் கில்லேங்க-அதனால்
பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
புரிந்து கொள்வோங்க//


அருமையான ஆரோக்கியமான அனைவருமே அவசியம் பின்பற்ற வேண்டிய வரிகள்.

சபாஷ். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி நன்றி
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் vgk

RVS said...

பதிவர் நீதி!
நன்றாக இருக்கிறது சார்! ;-))

சுந்தர்ஜி said...

எல்லாவற்றையும் படித்துவிட்டதாய்ச் சொல்லிகொள்ளும் மேதாவிகளிடமும் இல்லை இந்தப் பொறுப்பு.

எழுதுகிற எல்லோரும் கடைப்பிடிக்கவேண்டிய நீதி.

அருமை ரமணியண்ணா.

MANO நாஞ்சில் மனோ said...

எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம்
பதிவுக் கில்லேங்க-அதனால்
பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
புரிந்து கொள்வோங்க//

ஐய்யய்யோ குரு பின்ரீன்களே.......!!! மிக சரியாக சொன்னீங்க குரு....!!!

Avargal Unmaigal said...

நீங்கள் கவிதையாய் சொன்னதை நான் ஒரு நல்ல கட்டுரை பதிவாக போட்டுள்ளேன். நேரம் கிடைத்தால் நீங்களும் உங்கள் ஃப்லோவர்களும் வந்து படியுங்கள், நன்றீ

http://avargal-unmaigal.blogspot.com/2011/07/blog-post_04.html வலைப் பதிவுகளில் ஆபாசங்கள் மற்றும் பின்னோட்டங்கள் ( ஒரு கண்ணோட்டம்

கவி அழகன் said...

சரியாய் சொன்னிங்க
நாம முன்னேற இன்னும் கனக்க இருக்கு
நல்ல ஊக்கம் தரும் வரிகள்

ஸாதிகா said...

ஆஹா..என்ன அருமையா சொல்லி இருக்கீங்க.அனைவரும் பதிவுலக நட்புக்கள் அனைவரும் உணர்ந்து,புரிந்து கவிதை வரிகளைப்போல் நடந்தால் மிக ஆரோக்கியமான பதிவுலகம் ஆகி விடும்.
//எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம்
பதிவுக் கில்லேங்க-அதனால்
பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
புரிந்து கொள்வோங்க
// ஒவ்வொரு பதிவரும் இதனை கணினி முன் ஒட்டி வைத்துக்கொள்ளப்படவேண்டிய வாசகங்கள்.

சத்ரியன் said...

//எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம்
பதிவுக் கில்லேங்க-அதனால்
பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
புரிந்து கொள்வோங்க//


ஆமா...ஆமா...!ஆமா..!

(என்ன தான் கிளிப்பிள்ளைக்காட்டம் எடுத்துச் சொன்னாலும், எங்க ஏறுது?!!)

A.R.ராஜகோபாலன் said...

சம்மட்டி அடியை
கவிதையாய் தந்துளீர்கள்
ரமணி சார்
இன்று பல பதிவுகள்
தினமலர் , ஜூனியர் விகடனின்
மறு பதிப்பாக இருக்கிறது.
இது போன்ற பதிவுகளை
பதிவர்கள் தவிர்க்கவேண்டும்
என்பதே என் ஆசையும்

எங்களைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு
ஊக்கமும் ஆக்கமும் தரும்
நீங்கள் அற்புத
அறவுரையை
அறிவுரையாக தந்திருப்பது
மிக சிறப்பு

பிரணவன் said...

கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
பதிவு எழுதுவோம்-புதிய
சக்தி யாக பதிவர் உலகை
மாற்ற முயலுவோம். . .
புதிய சக்தியாக நிச்சயம் மலருவோம் sir. . . அருமையான படைப்பு . . .

முனைவர்.இரா.குணசீலன் said...

இன்றைய வலையுலகிற்குத் தேவையான சிந்தனைக் கவிதை ..

அருமை.

கோவை2தில்லி said...

அருமை சார். நல்ல கருத்துக்கள்.

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

எல்லோரும் பின் பற்ற வேண்டிய நல்ல கவிதை ,
உங்கள் கவிதைகளில் இருந்து எனக்கானதை நான் எடுத்துக்கொண்டேன் பாஸ்
நன்றி பாஸ்
கவிதைக்கு வாழ்த்துக்கள்

Rathnavel said...

அருமையான பதிவு.
எல்லோரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
உங்களது பதிவை என் பேஸ் புக்கில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

சாகம்பரி said...

எனக்கே எனக்காக பொருந்தக்கூடிய சில வரிகளுக்கு நன்றி. பதிவுலகம் என்னும் மாஸ் மீடியா சிறப்பாக அமைக்கும் முயற்சியில் என்னுடைய பங்களிப்பும் உண்டு.

இராஜராஜேஸ்வரி said...

சரக்கு இருக்கையிலே-வெட்டி
குப்பை எதுக்கு கூளம் எதுக்கு
ஞானம் இருக்கையிலே//

ஞானம் இழையோடும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

புதிய பதிவர் நிறைய எழுத
ஊக்கம் கொடுப்போம்-அவர்கள்
உரிய இலக்கை எட்ட நாளும்
வாக்கும் அளிப்போம்
தங்களின் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த கருத்துரைகளுக்கு நன்றி.

vidivelli said...

கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
பதிவு எழுதுவோம்-புதிய
சக்தி யாக பதிவர் உலகை
மாற்ற முயலுவோம். . .


வாழ்க வாழ்க அண்ணன் வாழ்க....
அருமையான் நடையில்
அறிவுபூர்வமாக சிந்திக்கவைக்கும் உங்கள் படைப்பு மிக மிக அருமை...
வாழ்த்துக்கள்...

நாய்க்குட்டி மனசு said...

மிகச் சரியாக சொல்லி உள்ளீர்கள். நான், பதிவில் உள்ள விஷயம் கசக்கிறதென்றால் பின்னூட்டம் தவிர்ப்பேன்

raji said...

அருமையான பதிவுலகத்திற்கு தேவையான கவிதை.
மெட்டுடன் கூடிய பாடல் போல் உள்ளது.இசையுடன் சேர்த்து
பதிவை திறக்கும் பொழுது பாடுவது போல் அமைக்கலாமே

VENKAT said...
This comment has been removed by the author.
VENKAT said...

///வித்தை தெரிந்த பதிவர் இங்கே
நிறைய இருக்கிறோம்-எனவே
முத்தைப் போல மின்னும் பதிவு
நிறையப் பண்ணுவோம்///

மீண்டும் மீண்டும் சினிமா பற்றிய செய்திகள். ஆரைத்த மாவை மீண்டும் அரைக்கும் அரசியல் அலசல்கள், ஒரிஜினல் விஷயங்களைக் காட்டிலும் இவைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருப்பதும், எதற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற ஆதங்கமும் வெளிப்படும் வரிகள்.
முத்து என்ற சொல்லாட்சி மிகச்சரியாக அமைந்திருக்கிறது.

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
அருமையான ஒரு கவிதையினக் காலத்திற்கேற்றாற் போல தந்திருக்கிறீங்க.

காத்திரமான படைப்புக்களைப் பகிரும் போது தான், வலையுலகத்தினூடாக எம் எழுத்துக்கள் மெருகேற்றப்படும் என்பதன் யதார்த்ததினை உணராதவர்களுக்கு உங்கள் பதிவு உணர்த்தி அல்லது உரைத்து நிற்கிறது

நாய்க்குட்டி மனசு said...

அருமையான பதிவுலகத்திற்கு தேவையான கவிதை.
மெட்டுடன் கூடிய பாடல் போல் உள்ளது.இசையுடன் சேர்த்து
பதிவை திறக்கும் பொழுது பாடுவது போல் அமைக்கலாமே //
raji said
it is really a good idea

புலவர் சா இராமாநுசம் said...

ஒவ்வொ வரியிலும் எதுகை மோனை
உயிராய் இருக்குங்க-நல்ல
செவ்வரி தன்னில் செம்மொழி தாகம்
செழிப்பாய் இருக்குங்க

உண்மை உண்மை வரிகள் தோறும்
உணர்த் திருக்கிங்க-பதிவர்
தன்மை களை தெளிவாய் அள்ளி
தெளி்த் திருக்கிங்க

எடுத்துக் காட்டு வேணாங்க இங்கே
எல்லாவரியும் தேனாங்க-இரமணி
அடுத் தடுத்து எழுதுங்க இது
அரியசேவை ஆகுங்க

புலவர் சா இராமாநுசம்

கந்தசாமி. said...

///நொடியில் உலகை சுற்றும் வலிமை
பதிவுக் கிருக்குது-எதையும்
எளிதாய் மாற்றும் சக்தி வலிய
பதிவுக் கிருக்குது
//// அனைத்து வரிகளும் அருமை,... எழுத கட்டுபாடுகள் தடைகள் அற்ற சுதந்திர ஊடகமான பதிவுலகில் பதிவர்கள் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் ...

அமைதிச்சாரல் said...

கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருக்குமிடத்தில்தான் கட்டுப்பாடோடு நடந்துக்கணும்... அருமையா சொல்லியிருக்கீங்க..

மனோ சாமிநாதன் said...

அருமை! அருமை!!

ஒவ்வொரு வ‌ரியும் ஒரு வைர‌ம்! எந்த‌‌ வ‌ரியைப் பாராட்டுவது என்று குழம்பி நிற்கின்றேன் நான்! பதிவர்களுக்கு இருக்க வேன்டிய பொறுப்புணர்ச்சியை இதை விட யாரும் அழகாய்ச் சொல்ல முடியாது! உங்களின் வலைத்தளத்தின் தலைப்பே அதை எப்போதும் ஒரே வரியில் அழகாய்ச் சொல்லிக்கொன்டிருக்கிறது! இருந்தாலும் இந்தக் கவிதை மிக அருமை!‌

இராஜராஜேஸ்வரி said...

சக்தி கூட சக்தி கூட
பொறுப்பும் கூடணும்-அந்த
ஸ்பைடர் மேனின் கருத்தை நாமும்
மனதில் கொள்ளணும்

மாலதி said...

//எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம்
பதிவுக் கில்லேங்க-அதனால்
பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
புரிந்து கொள்வோங்க//கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருக்குமிடத்தில்தான் கட்டுப்பாடோடு நடந்துக்கணும்... அருமையா சொல்லியிருக்கீங்க..

இராஜராஜேஸ்வரி said...

நண்பர்களைப்பற்றி பதிவிட வேன்டுகோள் விடுக்கிறேன் ஐயா. கவிதையாய் சிறப்பாய் எதிர்பார்க்கிறோம் தங்கள் அனுபவ முத்திரைகளை.

மாதேவி said...

நல்ல கருத்துக்களை கவிதையாய் முன்வைத்துள்ளீர்கள்.

Murugeswari Rajavel said...

ஞானம் செறிந்த பதிவு.பதிவுலகத்தின் சக்தி குறித்த அருமையான பதிவு.

மஞ்சுபாஷிணி said...

எளிய நடையில் மல்லிப்பூவால் அடித்து சொன்ன வார்த்தைகள் கொண்ட அத்தனையும் வைரச்சிதறல்கள் ரமணி சார்.. உண்மை தானே...

நமக்குள் நாம் வைத்துக்கொள்ளும் பண்பும் கட்டுப்பாடும் தான் நம்மை பிறரும் மதிப்பார்கள்...

ஒருவரின் பதிவை வைத்து தான் அவருடைய இயல்பும் குணமும் வெளிப்படும்...

எல்லோர் மனதிலும் அன்புடன் மதிப்பு குறையாமல் உயர்வாக நிலைக்க நம் பதிவுகளில் மேன்மை இருக்கவேண்டும்....

அதிகம் படித்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை... ஆனால் பண்புடன் இருக்கவேண்டியது அவசியம்.... பதிவுகளில் ஒருவரை உயர்த்தி சொல்வதில் தப்பில்லை... ஆனால் பதிவுகளில் மற்றவரை இழிவாய் சொல்வதே தவறு...

உங்கள் வரிகளில் மென்மையான ஒரு தகப்பனின் பாங்கை பார்க்க முடிகிறது ரமணிசார்..... பிள்ளைகளுக்கு அன்பான தகப்பன் இப்படி செய்யுங்க பிள்ளைகளா இப்படி செய்தால் மேன்மை, இப்படி செய்யாதீங்க என்று மென்மையாய் சொல்லி இருக்கிறீர்கள்.... சொல்லும் விதம் கூட இதை படித்து பயனுற வேண்டுமே மக்கள் என்ற உங்கள் பொறுப்பும் தெரிகிறது ரமணி சார்....

அன்பு வாழ்த்துகள் ரமணி சார்...

வெங்கட் நாகராஜ் said...

எளிய வார்த்தைகளில் நல்லதோர் கவிதை. பதிவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு...

இந்த பதிவு எப்படியோ மிஸ் பண்ணிவிட்டேன். என் டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை....

அப்பாதுரை said...

எளிமையால் கட்டிப்போட முடியுமா என்று சந்தேகப்படுவோர் உங்கள் இந்தக் கவிதையைப் படிக்க வேண்டும். நன்று.

(ஆமாம்... பெண்கள் இல்லையென்றால் பண்பாய் எழுத வேண்டாமா? :)

சந்திரகௌரி said...

உங்கள் வேண்டுகோள் தலைசாய்த்து மூன்று முடிச்சுக்கள் வெளியாகியுள்ளது. கருத்துரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் அவர்களுக்கு!

உங்களை 'நட்பென்னும்' தொடர்பதிவில் பங்கேற்க என் வலைத்தளத்தில் அழைத்துள்ளேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அவ்வப்போது இப்படி நியாபகப்படுத்துவது எமக்கு நன்று. நன்றி..

Thamizh said...

பதிவர் நிறைய பெண்கள் இருக்க
பண்பாய் எழுதுவோம்-மூத்த
பதிவர் இங்கு நிறைய இருக்க
பணிவாய் எழுதுவோம்

arumaiyaana varikal Sir...

ஸ்ரவாணி said...

புதிய பதிவர்கள் கட்டாயம்
படிக்க வேண்டிய
அருமையான வழிகாட்டல் கவிதை இது.

Ramani said...

ஸ்ரவாணி //

வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment