Saturday, April 30, 2011

வேண்டுதல் வேண்டாமை

சோறு வேண்டும் எங்களுக்கு
சொர்க்கம் வேண்டாம் - வீண்
வார்த்தைகளைச் சொல்லியெம்மை
ஏய்க்க வேண்டாம்

ஆடை வேண்டும் எங்களுக்கு
"அணிகள்" வேண்டாம்
மேடையேறி பொய் உதிர்த்து
"நடிக்க" வேண்டாம்

வீடு வேண்டும் எங்களுக்கு
"கோட்டை" வேண்டாம் - எம்மை
மன்னரெனச் சொல்லி நீங்கள்
சுருட்ட வேண்டாம்

வாழ்வு வேண்டும் எங்களுக்கு
"ஆறுதல்" வேண்டாம் - எல்லாம்
ஆண்ட்வனின் லீலை என்று
"அளக்க" வேண்டாம்

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!!!!!!!!!!

Thursday, April 28, 2011

பலாப் பழக் கவிஞர்

" நாளை மறு நாள்என் நண்பன் ரவி
நம்மூர் வருகிறான்
நம் வீடும் வருவான்
கொஞ்சம்
சிறப்பாகச் சமையல் செய்து வை "
என்றேன் என் மனைவியிடம்

"யார் அந்த பலாப்பழக் கவிஞரா"
என்றாள் அவள்

எனக்கு குழப்பமாகிப் போனது
"அவன் கவிதை எழுதுவான்
எனவே கவிஞன் என்பது சரி
அது என்ன பலாப் பழக் கவிஞர் "
உண்மையில் புரியாமல்தான் கேட்டேன்

அவள் விளக்கத் துவங்கினாள்
"உங்களுக்கு பலாப் பழம் என்றால்
அதிகம் பிடிக்கும் எனச் சொல்லி
என் அப்பா  போனவருடம்
முழுப்பழமே கொண்டு வந்தார்
அதன் வாசம் வீடெல்லாம் விரிந்து பரவ
அதனை உடனடியாக தின்று தீர்க்க
அதிகம் ஆசைப் பட்டீர்கள்
ஆனாலும்
அதனை அறுக்கத் தெரியாது
ஒருவாரம் நீங்கள்பட்ட அவதி
ஞாபக இருக்கா"என்றாள்

எனக்குள் எரிச்சல் அதிகமாகிப் போனது
"அதற்கும்
பலாப்பழக் கவிஞர் என்பதற்கும்
என்ன சம்பந்தம்
கேள்விக்கான பதிலை மட்டும்
எப்போதும் சொல்லப் பழகு"என்றேன் நான்

அவள் நிதானமாக சொல்லத் துவங்கினாள்
"அப்படித்தான்
அவர் கவிதை பதிவாக வந்தவுடன்
ஆவலாகப் பறப்பீர்கள்
அர்த்தங்கள் சரியாகப் புரியாது
அகராதியைப் புரட்டி எடுப்பீர்கள்
அப்படியும் புரியாது போக
அவரையே தொடர்பு கொண்டு
அர்த்தம் கேட்டு ஓய்வீர்கள்
எனக்கென்னவோ நீங்கள்
பலாப்பழத்திற்கு பட்ட அவதியை
அவர் கவிதைக்கும் படுவதால்
அப்படிச் சொன்னேன் தவறா"என்றாள்

நான் உண்மையில் அதிர்ந்து போனேன்
சுவை அதிகம் என்றாலும்
அதனைப் பெறுவதற்கான
அவதியும் அதிகம் என்பதை
எவ்வளவு அழகாகச் சொல்கிறாள்

நான் ஆர்வமாகக் கேட்டேன்
"அப்படியானால்
நான் எந்தப் பழக் கவிஞன் " என்றேன்

"கோபித்துக்கொள்ளக்கூடாது"
பீடிகையுடன் துவங்கியவள்
"வாழைபழக் கவிஞர் :என்றாள்
சிறிது இடைவெளி கொடுத்து
"அதுவும் உரித்த வாழை ப்பழம் என்றாள்

எனக்கு உண்மையில்
பெயர்க்காரணம் புரியவில்லை
நிச்சயம் நல்ல விளக்கம் வைத்திருப்பாள்
நாளை மறு நாள்
அவசியம்  தெரிந்து கொள்ளவேண்டும்

Monday, April 25, 2011

கசாப்புக் கடை தேடும் வெள்ளாடுகள்..

பணிச்சுமை தாளாது
என் நண்பன் பரிதவித்தபோது
"கொஞ்சம் மென்திறன் வளர்
மன இறுக்கம் குறையும்" என்றேன்

சில நாட்களில்..
கார்பரேட் நண்பன்
கார்பரேட் கவியாகிப் போனான்
கவிதைகளும் சிறப்பாக இருந்தன.
அதுவரை பிரச்சனை ஏதும் இல்லை.

சக கவிஞர் ஒருவர்
"வரலாறு முக்கியம் அமைச்சரே"என
வடிவேலு சொன்னதைப்போல
"கவிதையில்
முற்போக்கு முக்கியம் தம்பி"எனச் சொல்ல
ரொம்பக் குழம்பிப் போனான்
லேசாக தடம் மாறியும் போனான்

அடுத்தமுைற் அவனை சந்தித்த போது..
நேர்வழியில்
அலுவலகம் சென்றுகொண்டு இருந்தவன்
சுற்றுவழியில் சுற்றிப்போனான்
காரணம் கேட்டேன்
"ஏழ்மையை வறுமையை
தெளிவாகப் புரிந்துகொள்ள
சேரிகளைக் கண்டுபோவதாகச்" சொன்னான்

புழுதி தூசி தாங்காதவன்
பல சமயங்களில்
தன் கார் கண்ணாடி இறக்கி
சேரிச் சண்டைகளை ரசிக்கத் துவங்கினான்
காரணம் கேட்க
"அவர்கள் வார்த்தைகளை
அதே உச்சரிப்போடு
கவிதையில் பொருத்தினால்தான்
சுருதி கூடும்"என்றான்

வார வேலை நாட்களில்
எப்போதும் பரபரப்பாயிருந்தான்
காரணம் கேட்க
"சனிக்கிழமைக்குள் பதிவினைப் போட வேண்டும்.
அப்போது தான்பின்னூட்டம் அதிகம் வரும்"என்றான்

"மாதம் ஐந்துவீதம்
ஒரு வருடம் பதிவு போட்டால்
அறுபது வரும்
அதில் பத்து பதினைந்து போனாலும்
ஒரு புத்தகம் தேத்தலாமா"என
பார்க்கும்போதெல்லாம் புலம்பத் துவங்கினான்

சனி மாலைகளில்
அவனை தொடர்புகொள்ளவே இயலவில்லை.
காரணம் கேட்டபோது
பதிர்வர்களை பில்டப் செய்வது குறித்தும்
பங்காளிகளாகப் பிரிந்துகிடக்கும்
பதிர்வர்கள் குழு குறித்தும்
அதற்குள் இருக்கும் அரசியல் குறித்தும்
வகுப்பெடுக்கத் துவங்கினான்

தடம்மாறிப் போனவன
இப்போது
திசைமாறிப் போவதுபோல்
எனக்குப்பட்டது

நாட்கள் செல்லச் செல்ல
தோட்டதில் பாதி கிணறாகிப் போக
விளைச்சல் பாதியான கதைபோல
உளைச்சல் தீர
வழிதேடிப் போனவன்
வழியிலேயே உழன்று திரிய
அலுவலக உளைச்சல்
இன்னும் அதிகமாகிப்போனது

வெகு நாட்கள் கழித்து
அவனைச் சந்தித்தபோது
கொஞ்சம் மெலிந்திருந்தான்
தாடி மீசை யோடு
ஒரு சாமியாரைப் போலிருந்தான்
"உடல் சரியில்லையா"என்றேன்
அதற்கு பதில் சொல்லாமல்
ஒரு சாமியாரைப் பற்றி
மிக உயர்வாய்ச் சொன்னான்
"அவர் அப்படியெல்லாம் இல்லையாமே
உனக்குத் தெரியுமா" என்றான்

நான் பதிலேதும் சொல்லவில்லை
எனக்கென்னவோ முன்பு
ஆப்பசைத்து மாட்டிக்கொண்ட
முட்டாள் குரங்குககள் எல்லாம்
புத்தி தெளிந்துவிட்டதைப் போலவும்
புத்திசாலி வெள்ளாடுகள்தான்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
கசாப்புக் கடைக்கே
வழி கேட்பது போலவும் பட்டது

Monday, April 18, 2011

விபச்சாரர்

அவர் பெண் பார்க்க வந்தபோது
"ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும்
லெள்கீக விஷயங்க்ள் பேசுவதும்
தாய் தந்தையருக்காத்தான்
எனக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை"என்றார்
அவள் உண்மையில் பூரித்துப்போனாள்

"பெண் பார்க்க வரும்போது
சேலை கட்டியிருக்கச் சொன்னதுகூட
தனது தமக்கைக்காகத்தான்
எனக்கு யெப்படி யிருந்தாலும் சரிதான்"என்றார்
அவள் உள்ளம் குளிர்ந்து போனாள்

"திருமணத்தில் சாஸ்திர சம்பிராதயங்கள்
சரியாக இருக்க வேண்டும்
என்பதுகூட தாத்தா பாட்டிக்காதத்தான்
எனக்கு துளிகூட இதிலெல்லாம் நம்பிக்கையில்லை" என்றார்
அவளுக்கும் இது சரியெனததான்பட்டது 

"திருமணமண்டபம் நல்லதாய் இருக்கவேண்டும்
சாப்பாடுதான் ரொம்ப முக்கியம்
விருந்தினர்களின் திருப்திதானே
நம்மெல்லோருக்கும் முக்கியம்" என்றார்
அதுகூட அவளுக்கு ஏற்கும்படியாகத்தானிருந் தது

சீர்வரிசையில் ஒரு சிறுகுைற்யென்று
அவரது ஒன்று விட்ட் மாமன் 
மண்டபத்தையே உலுக்கியெடுத்தபோது
"எங்கள் மாமன் எப்போதும் இப்படித்தான்
இங்கிதம் தெரியாத பிறவி
அவரைக் கண்டுகொள்ளாமல் 
எனக்காகவேனும் இதைமட்டும் செய்துகொடுங்கள்"என்றார்
அவ்ளுக்கும் வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை

கல்யாண அமர்க்களங்கெள்ல்லாம் முடிந்து
அவள் தங்கக் சிலையென
வெள்ளிச் செம்பேந்தி
அன்னமென பள்ளியைற்யினுள்
அடியெடுத்து வருகையில்
மெய்மறந்து வாய்பிளந்தவன்
அவளை கட்டியணைத்து
அருகிலமர்த்திக் கொண்டபோது
"அணைத்துக் கொண்டது கூட
யார் சொல்லியேனும்" எனச் சொல்லக்கூடுமோ எனப் பயந்தாள்

அவன் மிக மெதுவாக
அவள் முகத்திரை விலக்கி
நிச்சயித்த நாள்முதல்
ஒத்திகை பார்த்து வைத்த முத்தத்தை
சிதறவிட்டு கொடுத்தபடிச் சொன்னான்
"இத்தனை ஆர்ப்பாட்டங்களும்
இதற்காகத்தான் இல்லையா"என்றான்
அவன் முகத்தில் நியூட்டனால் கண்டுபிடிக்க முடியாத
புதிய விதியை கண்டுபிடித்த பெருமிதம் இருந்தது
அவள் தலை குனிந்து நின்றாள்

"பெறவேண்டியதை எல்லாம்
சாமர்த்தியமாய் பெற்றுக்கொண்டும்
பத்தினிபோலும் வேடமிட்டுக்கொண்டும்
சுகம்தற எத்தெனிக்கும் பெண்களை
விபச்சாரிகள் எனச் சொல்வதை போலிந்த
ஆண்களை ஏன் விபச்சாரன் எனச் சொல்வதில்லை"
அவளுள் ஒரு எண்ணக்கீற்று உடன் வந்து போனது

அவளுள் உறங்கிக் கிடந்த தமிழச்சி
திடுமென்று வீறுகொண்டாள்
"தொட்டு தாலிகட்டிய கணவனை 
விபச்சாரன் எனச்சொல்லல் தகுமா?
தமிழர் பண்பாடு ஏற்குமா ? தவறல்லவா"என்றாள்

தமிழச்சியின் கூற்று சரியெனவே இவளுக்கும் பட்டது
"வேண்டுமாயின் ஆர் விகுதி சேர்த்து
விபச்சாரர் எனச் சொல்லலாமா"என்றாள் இவள்
உள்ளிருந்த தமிழச்சி மௌனமாய் சம்மதிக்க
இவள் லேசாகப் புன்னகைத்தாள்

வழக்கம்போல
எல்லா ஆண்களையும் போல
புன்னகைத்ததற்கான பொருள் புரியாது
தனது முதல் முத்தத்தில்
தனது முதல் பேரைண்ப்பில்
அவள் நிலைகுலைந்து போனாள் என
ஆண்மைகுரிிய கம்பீரத்தோடு
அவளை அள்ளிக்கொண்டான் "விபச்சாரர்"

Friday, April 15, 2011

உறவுகள் தொடர --ஒரு இலகுவான வழி

உன்னிடம்
இருக்கிறதோ இல்லையோ
எல்லாமும் எப்போதும்
இருப்பது போல
ஒரு பாவனை செய்து கொள்

உணர்வு கலக்காது
விருப்பம் கலக்காது
எப்போதும் பேச
உன்னைத்  தயார் செய்து கொள்

நம்புகிறாயோ இல்லையோ
அதிகம் நம்புவதுபோல்
அவ்வப்போது
சில வாசகங்களை
உதிர்த்துக்கொண்டிரு

அனைவரிடத்தும்
அதிக உரிமை உள்ளவன்போல்
அடிக்கடி காட்டிக்கொள்
தவறுதலாகக் கூட
உரிமை எடுத்துக் கொள்ளாதே
பிறரையும்
உரிமை எடுத்துக்கொள்ள
துளியும் அனுமதியாதே

அதிகம் ஊதப்பட்ட பலூன்
நிச்சயம் வெடித்துச் சிதறும்
அதிக  நெருக்கமும் ஆபத்தானதே
என்வே
 எப்போதும் எவரிடத்தும்
போதிய இடைவெளியை
தொடர்ந்து பராமரி

இப்படியெல்லாம்  இருந்து
எதற்கு அந்த போலி நட்பு என
உள்ளம் துடிக்கிறதா ?
உங்களுக்கு வயதாகிவிட்டது
அல்லது
நீங்கள் பத்தாம்பசலி எனக் கொள்க

ஏனெனில்
குடலுக்காகவும்  உடலுக்காகவும்
உணவு என்பது மாறிப்போய்
நாவுக்காகவும் நாசிக்காகவும்
என மாறி
வெகு காலம் ஆகிவிட்டது

சூழல்பொருத்து உடல்மறைப்பது
ஆடை என்பது மாறிப்போய்
செல்வாக்கு காட்டவும்
ஓரளவு உள்ளுறுப்பு காட்டவும்
என மாறி
பல வருடம் ஆகிவிட்டது

உணர்வோடு கலந்திருப்பது
உயிரோடு ஒன்றியிருப்பது
என்றெல்லாம் பழங்கதைகள் பேசி
உங்களை நீங்களே
ஏமாற்றித் திரிய வேண்டாம்

ஏனெனில்
நீ என் வீட்டுக்கு வந்தால்
என்ன கொண்டு வருவாய்
நான் உன் வீட்டுக்கு வந்தால்
எனக்கு என்ன தருவாய் என
உறவுகளின் இலக்கணம் மாறி
வெகு காலம் ஆகிவிட்டது

எனவே
உறவுகள் தொடர்ந்து நிலைக்க....
(முன்னிருந்து மீண்டும் படிக்கவும்)

Wednesday, April 13, 2011

அவரவர் அளவில்....

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக்  காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்
நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"ஏன்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
மக்கள் தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

Sunday, April 10, 2011

வறிய புலவனும் செல்வ அறிஞனும்

"இப்பவெல்லாம் அதுகிட்ட
சிரிச்சு பேசுறதே இல்லை
கிட்ட வந்தாலே
திட்டி திட்டித்தான் வெரட்டுறேன்
எப்படித்தான்
தள்ளித் தள்ளிப் போனாலும்
இந்தச் சனியன் மட்டும்
எப்படியோ
உள்ள வந்து தொலைக்குது"என
அடிவயிற்றைக் காட்டி புலம்புகிறாள்....
வீட்டில் இரண்டை விட்டுவிட்டு
இடுப்பில் ஒன்றை இடுக்கிக்கொண்டு
கைபிசைந்து    நிற்கும்
குப்பத்து முனியம்மா

வாரந்தோறும் விரதம் இருந்தும்
தான தருமங்கள் ஆயிரம் செய்தும்
விதம்விதமாய் வேண்டுதல்கள் செய்தும்
தரிசாய் கிடக்கும்
தன் அடிவயிரைத் தடவி
மனம் நொந்துச் சிரிக்கிறார்
கைராசிக்காரி என புகழ்பெற்ற
லட்சாதிபதி டாக்டரம்மா

Saturday, April 9, 2011

இல்லாள்

 அன்று கோவிலில்
வழக்கத்திற்கு மாறாக
பெண்கள் கூட்டம் அதிகம்இருந்தது

உபன்யாஸகர்
உணர்ச்சிக் கொந்தளிப்பின்
உச்சத்தில் இருந்தார்

"நம் முன்னோர்கள்
எவ்வளவு தெளிவானவர்கள்
ஒரு சிறு சொல்லை
கவனித்துப்பாருங்கள்
அதில்தான் எத்தனை அர்த்தமிருக்கிறது

தமிழில் இல்லான் என
ஆண்களைக் குறிப்பதில்லை
ஏனெனில் அது
ஏதும் இல்லாதவன்
என்பதைதான் குறிக்கும்
ஆனால்
இல்லாள் என்பதை எடுத்துக்கொள்ளுங்கள்
அது இல்லத்தை ஆள்பவள்
என்பதையல்லவா குறிக்கிறது "என்றார்

கூட்டதில் இருந்த பெண்கள்
ஒருவரை ஒருவர்
பெருமையாகப் பார்த்துக் கொண்டனர்

வழக்கம்போல
என்னைக் குழப்பும் குழப்பம்
இப்போது
ரொம்பக் குழப்பியது

பெண்கள்
பிறந்து வளர்ந்த வீட்டை
திருமணத்திற்குப்பின்
பிறந்த வீடு என்கிறோம்

உடல் பொருள் ஆவி
அனைத்தையும் கொடுத்து
செழித்தோங்கச் செய்யும் வீட்டை
புகுந்த வீடு என்கிறோம்

வயது முதிர்ந்து தளர்ந்து
மகன் மகளை
அண்டி வாழ்கையில்
மகன் வீடு அல்லது
மகள் வீடு என்கிறோம்

வீட்டையும் வாழ்வையும்
அர்த்தப்படுத்தும் ஆனந்தப்படுத்தும்
அவளுக்கென வீடு
இல்லவே இல்லை என
மிகத் தெளிவாகச் சொன்னதை
ஒரு எழுத்துக்கான  விளக்கத்தை  மட்டும்
மாற்றிச சொல்லி
எல்லோரையும் ஏன் இவர்
இப்படிக் குழப்புகிறார்?

அவர்தான் குழப்புகிறாரா?
இல்லை
நாம்தான் குழம்பியிருக்கிறோமா?
இல்லையேல்
வழக்கம் போல
நான்தான் ரொம்ப குழம்பியிருக்கிறேனா?

Thursday, April 7, 2011

பெண்ணெழுத்து

முதலில் என்னையும் மதித்து பதிவிட அழைத்தமைக்கு
திருமதி ஆயிஷா பவுல் அவர்களுக்கு என் வணக்கத்தையும்
நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்

ஆரம்பம் முதல் இந்தத் தொடர் துவங்கியதில் இருந்து
அனைவரின் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்
அனைவரின் கருத்துக்களும் ஒவ்வொரு வகையில்
சிறப்பாகத்தான் இருந்தன

என்னைப்பொறுத்தவரை பெண்களின் பிரச்சனைகள் குறித்து
பெண்கள் எழுதத் துவங்கியதைத்தான்
பெண்ணெழுத்து என்கிற அர்த்தத்தில் தான்
நான் இதை எழுதுகிறேன்

நான் ஏற்கெனவே ஒரு பின்னூட்டத்தில்  குறிப்பிட்டதைபோல
பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் எல்லாம்
ஆணாக இருந்த காலத்தைவிட
பெண்மருத்துவர்கள் வரத்துவங்கியபின்புதான்
பிரசவதில்  பிரச்சனைகள் குறையத் துவங்கின

அதைப்போலவே பெண்கள் பிரச்சனை குறித்து
மிகப் பெரிய ஆண் எழுத்தாளர்கள் எல்லாம்
எழுதிய காலங்களில் அவர்கள் பெண்களை
ஆண்களுக்கென படைக்கப்பட்ட ஒரு பாண்டமாகவே
கருதி எழுதினார்களே ஒழிய அவர்களை ஒரு ஜீவனாகவே
மதித்து எழுதவில்லை.(ஒரு சிலரைத் தவிர)
அந்தக் குறை மட்டும் அல்ல
பெண்களின் மிகச் சரியான பிரச்சனைகள் குறித்து
மிகச் சரியாக (ஏன் நாகரீகமாகக் கூட) எழுதக்கூட
பெண்ணெழுத்தர்களின் வருகை அவசியமாக இருந்தது
பெண்களின் சிந்தனை முன்னேற்றத்திற்கும்
சமூக முன்னேற்றத்திற்கும் கூட
அவர்களது வருகை முக்கிய காரணம் என்றால்
 நிச்சயம் அது மிகையாகாது

பெயர்பட்டியலோடு கதைப்பட்டியலோடு
பட்டியலிட்டு எனது வாதத்தை நிலை நாட்ட எனக்கு ஆசைதான்
ஆயினும்  பதிவின் நீளம் கருதி இதை இத்துடன் முடிக்கிறேன்
பதிவிட அழைத்தமைக்கு மீண்டும் ஒருமுறை
நன்றி கூறி முடிக்கிறேன்

Monday, April 4, 2011

முடிவின் விளிம்பில்.....

குழப்பம் என்னுள் சூறாவளியாய்
சுழன்றடிக்கிறது
நான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்?
இருக்கிறேன் என்பது சரியா?
அல்லது
கிடக்கிறேன் என்பது சரியா?
அல்லது
இறக்கிறேன் என்பதுதான் சரியா?

ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை
முழுவதும் இழந்து போனதால்
கால உண்ர்வு அற்றுப்போனதா? 
அல்லது
கால உண்ர்வு அற்றுப்போனதால்
அனைத்தையும் இழந்து போனேனா?

தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
விடையற்ற கேள்விகளை புறம்தள்ளி
விழிகளைத் திறக்க முயல்கிறேன்

இருப்பிடம் தெரியாது இருந்த
இமைகள் இரண்டும்
சிதிலமடைந்த அரண்மனையின் புறவாயில்கள்போல்
கனத்து கிறீச்சிடுகின்றன
பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறள்கலே பரவிச் சிரிக்கின்றன
பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?

எரிமலையாய் என்னுள்
மரணபயம் வெடித்துச்சிதற
அதன் அக்கினிக்குழம்புகள்
என் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய
என் சக்தியைன்த்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்
மலைச்சரிவினில் உருண்டுவரும் பெரும்பாறைபோல்
ஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு
என் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது
நான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா?

தன் முகத்தையே
என் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்
முட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி
முப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்
காந்த அலையாய் பரவித் தெறிக்கிறது
விழிமூடும் முன் ஒருமுறையேனும்
அவைள்த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்
என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன
எரிகின்ற வீட்டின்முன்
செயலற்றுக் கதறுபவர்கள்போல்
யார் யாரோ கூக்குரலிட்டு அழுவது
மிக லேசாய் கேட்கிறது
நான்தான் எறிந்துகொண்டுயிருக்கிறேனா?

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல
இத்தனை அவஸ்தைகளுக்கும் மத்தியில்
இவைகளுக்கெல்லாம் தொடர்பே இல்லாததுபோல்
தென்றலிின் குளுமை அடிவயிற்றை நிறைக்க
நாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல
சிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலங்களோாடு
தங்கத்தின் தகதக்கும் ஜொலிப்போடு
ஒரு ஒளிக்கொத்து
லேசாக மிக லேசாக
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது

அந்த ஒளிக்கற்றின் மாயாஜாலத்தில்
என்னுள் பேயாட்டம் போட்ட
அத்தணை வலிகளும்
அத்தணை துயர்களும்
ஒளிகண்டு ஓடும் இருள் போல
எங்கோ ஓடி மறைகிறது

அந்தக் கருணை ஒளி
முகம் நோக்கி ஈரடியாய்
பின்னோக்கி ஓரடியாய்
தொடர்ந்து மெல்ல நகர
அது கடந்த வழியெல்லாம் சில்லிட்டுப்போக
அது நடக்கும் வழியெல்லாம் ப்ரகாசம் பரந்து விரிய
நானே பாதி உடலாகவும்
நானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்

இனி எப்போதுமே திரும்பமுடியாத உலகுக்கும்
இனி போய்ச் சேரவேண்டிய வெட்டவெளிக்கும்
இடையிலான லட்சுமணக்கோட்டில்
என் உயிர்மூச்சு ஊசலாடிக்கொண்டிருக்கிறது
இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினிில்
செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி
"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்
கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது

தொப்புள்கொடி அறுபடட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?
காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?
காலவெளியில் காலத்துளி மீண்டும் இணைதல்தான் காலமாதலா?

காலத்தாயை அடைகிற வெறியில்
காலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது
நான் பிணமாகிறேன்
அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது