காலம் காலமாய் கல்யாணியின் வாரிசுகள்
அப்பா ஜாதக்கட்டை எடுத்தவுடனேயே
புலம்பத் துவங்கினாள் கல்யாணி
"அம்மா என்னைப் புரிஞ்சுக்கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கனும் அப்பாகிட்டே சொல் " என்றாள்
" உன் அப்பன் யாரு பேச்சை
என்னைக்குக் கேட்டார்
இது நாள் வரைஉன் அப்பாவை நீ
புரிந்து கொண்ட லெட்சணம் இதுதானா ?"
மன்ம் வெதும்பிச் சொன்னாள் அம்மா
கல்யாணி சோர்ந்து போகாது
அப்பாவைக் கெஞ்சினாள்
"கல்யாணி முதலில் என்னை நீ புரிஞ்சுக்கோ
அடுத்த வருடம் நான் ஓய்வு பெறனும்
அதற்குள்ளே உன் திருமணம் முடிக்கணும்
புரிஞ்சுதா ? " என்றார் கண்டிப்புடன் அப்பா
குடும்ப நிலவரம் புரியாது
சக்திக்கு மீறிய இடமாகக் கொண்டுவந்தார்
கமிஷனுக்கு ஆசைப்பட்ட புரோக்கர் மாமா
ஸ்வீட் கொடுத்து
எதிரில் அமர்ந்து வெட்கப் பட்டு
சீர் செனத்தி பேசிமுடித்தாலும்
"பெண்ணையும் பையனையும்
கொஞ்சம் தனியாக பேசவிடுங்கள்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் "
என்றார் முற்போக்கு மதராஸ் மாமா
புழக்கடையில் ஐந்து நிமிட நெளிசளுக்குப் பின்
"உனக்கு சினிமா பிடிக்குமா ?யார் படம் பிடிக்கும் ?"
என்றான் மாப்பிள்ளை
"பார்த்திபன் எனச் சொன்னால்
ஒரு மாதிரி நினைப்பாரோ என நினைத்து
"ரஜினி " எனச் சொன்னாள் கல்யாணி
ஆரம்பத்திலேயே குழப்பவேண்டாம் என நினைத்து
" எனக்கும்தான் "எனச் சிரித்தார் மாப்பிள்ளை
" கோழிக் குழம்பு சமைக்கத் தெரியுமா
எனக்கு அது ரொம்பப் பிடிக்கும் " என்றான்
தெரியும் என்பது போலவும்
தெரியாது என்பதுபோலவும்
குழப்பமாகத் தலையாட்டி வைத்தாள் கல்யாணி
தனக்குத் தேவையான பதிலை எடுத்துக் கொண்டு
பூரித்துப் போனார் மாப்பிள்ளை
இப்படியாக ஒருவரை ஒருவர்
மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள
மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்து முடிந்தது
மன்ம் புரிந்து கொள்ளும் முன்பு
உடல்கள் புரிந்து கொண்டதால்
அடுத்து அடுத்து குழந்தை பிறக்க
அதை வளர்ப்பதற்கான போட்டியில்இருவரும்
இறக்கைக் கட்டிப் பறக்க
ஒருவரைஒருவர்
புரிந்து கொள்வதற்கான அவகாசமின்றியே
காலமும் இறக்கை கட்டிப் பறந்தது
அப்பா ஜாதகக் கட்டை எடுத்ததும்
"அம்மா என்னை புரிஞ்சுக் கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கணும் " என்றாள்
கல்யாணியின் மூத்த மகள் நித்யா
இருபது வருடங்களுக்கு முன்பு
அம்மா தனக்குச் சொன்ன பதிலையே
சொல்லவேண்டியிருப்பதை எண்ணி
குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினாள் கல்யாணி
அம்மா இதுவரை இப்படி அழுது பார்க்காத நித்யா
ஏனோ அதிகம் குழம்பிப் போனாள்
இருபது வருடங்கள் கழித்து தானும் இப்படி
அழ வேண்டி இருக்கும் என்பதை அறியாது
9 comments:
தமிழ்மணம் வலைப்பதிவில், நட்சத்திர எழுத்தாளராகப் பரிணமிக்கும் ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நல்லாயிருக்கு சார். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்குள் காலம் ஓடிவிடுகிறது. கடைசிவரை புரிந்து கொள்ளவே முடியாமல் போய் விடுகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் இது தொடரவே செய்கிறது. நல்ல படைப்பு. பாராட்டுக்கள்.
நல்லதொரு ஆக்கம் சார்.........
மணம் புரியும் முன் மனத்தை புரிய வேண்டும்
புரிதல்களின் பொருள் புலப்படாமலே புரிதல்கள் புரிந்துகொள்ளப்படுகின்றன. கல்யாணிகள் தொடர்வதோடு அவர்களின் கனவுகளும் நிறைவேறப்படாமல் தொடர்வது வேதனைதான். யதார்த்தத்தை அழுந்தச் சொல்லும் படைப்பு. பாராட்டுகள் ரமணி சார்.
காலத்திற்கு தகுந்தும் வயதிற்கு தகுந்தும் வாழும் சூழ்னிலைக்கு தகுந்தும் மனித மனங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன எனபதுதான் உண்மை. அதனால் ப்ரிந்து கொண்டு வாழ்வதைவிட விட்டு கொடுத்து வாழவதன் மூலம்தான் வாழ்க்கையை இனிய பயணமாக மாற்றமுடியும்....வழக்கம போல பதிவு மிக அருமை வரிகளை நீங்கள் சிந்தித்து எழுதும் போது அது உங்கள் பதிவுகளில் நட்சத்திரமாக ஜொலிக்கின்றன.
//மன்ம் புரிந்து கொள்ளும் முன்பு
உடல்கள் புரிந்து கொண்டதால்
அடுத்து அடுத்து குழந்தை பிறக்க
அதை வளர்ப்பதற்கான போட்டியில்இருவரும்
இறக்கைக் கட்டிப் பறக்க
ஒருவரைஒருவர்
புரிந்து கொள்வதற்கான அவகாசமின்றியே
காலமும் இறக்கை கட்டிப் பறந்தது///
மேல் கண்ட பாரா எனக்கு மிகவும் கவர்ந்தது சொல்லவருவதை மிக அழகாக எழுத்தில் செதுக்கும் சிற்பி நீங்கள். அதற்காக எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
//மன்ம் புரிந்து கொள்ளும் முன்பு
உடல்கள் புரிந்து கொண்டதால்...//
இதுதான் பல இடங்களில் நிதர்சனம்
ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க.
சூப்பர் கவிதை!கதை!
//அம்மா இதுவரை இப்படி அழுது பார்க்காத நித்யா
ஏனோ அதிகம் குழம்பிப் போனாள்
இருபது வருடங்கள் கழித்து தானும் இப்படி
அழ வேண்டி இருக்கும் என்பதை அறியாது//
வாழ்க்கைச் சக்கரம் - முடிவில்லாத சுழற்றம் இல்லையா....
த.ம. 2
Post a Comment