Sunday, April 28, 2013

மனக் குகை விசித்திரங்கள்

விமானப் படிக்கட்டை விட்டு
இறங்கியதும் எதிர் இருந்த
என் வீட்டு வாசலில்..

நான் பத்து வயதாயிருக்கையில்
இறந்து போன என் பாட்டி
என் ஐந்து வயது பேரனுக்கு 
உணவூட்டிக் கொண்டபடி
"வாடா என வரவேற்கி றாள்

இது எப்படி சாத்தியமென
யோசித்துக் கொண்டிருக்கையிலேயே
எதிரே அவசரமாக
சைக்கிளில் போய்க்கொண்டிருந்த
நிதியமைச்சர் பாட்டியைப் பார்த்து
டீச்சர் சௌக்கியமா 
 "எனக்கேட்டுப் போகிறார்..

நான் அதிர்ந்து போய்
பாட்டி உனக்கு இவரைத் தெரியுமா "
 எனக் கேட்க
பாட்டி அலட்சியமாய்
"நான் தாண்டா அவனுக்கு
 பத்தாம் வகுப்புக்கு கணக்கு டீச்சர் "என்கிறாள்

எனக்குள் பயம் பாம்பாய்ப் படமெடுக்க
அரண்டுபோய் இரண்டடி பின் செல்ல
"கொஞ்சம் பார்த்துப்பா "என்கிறது தெருவில்
ஒருக்களித்துப் படித்திருந்த நாய்

"பாட்டி எனக்குப்  பயமாயிருக்கிறது
நம்ம ஊரில் நாய் பேசுமா
எனக் கேட்டு முடிப்பதற்குள்
"அது தானே " என ஆச்சரியப்பட்டது
குட்டிச் சுவர் அருகில் இருந்த கழுதை

அரண்டு வெலவெலத்துப்  போய்
இனியும் இங்கு இருக்கலாகாது எனத்
தலைத் தெறிக்க ஓடிய நான்....
தவறிப் போய் அந்த வண்ணான் குளத்தில்
தலை கீழாய் விழுந்து நிமிர்ந்து விழித்தபோது..
.
."....என்ன இன்றும் பேய்க் கனவா
தண்ணி குடித்துவிட்டுப் படுங்க "
என்றபடி புரண்டு படுத்தாள் மனைவி
மெலிதாய் எரியும் இரவு விளக்கு
சுவரில் நீண்டு தெரியும் என் கரிய உருவம்
மின் விசிறித் சத்தம்

வாசலில் விடாது குரைக்கும் நாய்

உண்மையாய் நிஜமாய் இருக்கும்

யதார்த்தங்களில் வர வர சுவாரஸ்யம்

குறைந்து கொண்டே போகிறது எனக்கு

காலம் நேரம் தூரம்
யதார்த்தம் உண்மை தர்க்கம்
அனைத்தையும் ஒரு நொடியில்

தகர்த்தெரியும் விளக்கமுடியா

அமானுஷ்யமே இப்போதெல்லாம்
 எனக்கு சுவாரஸ்யமாகப் படுகிறது

எனவே 
மீண்டும் ஆர்வமுடன்
அமானுஷ்யங்களுடன்  உறவாட த் 
துயிலத் துவஙகுகிறேன் நான்

24 comments:

கோமதி அரசு said...

ஒரு மாறுதலுக்கு அமானுஷ்ய கவிதை நன்றாக இருக்கிறது.

எனக்கும் கனவுகள் இல்லாத தூக்கமே கிடையாது.

விடிந்து சில நினைவு இருக்கும் சில நினைவு இருக்காது.

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

//அமானுஷ்யமே இப்போதெல்லாம்
எனக்கு சுவாரஸ்யமாகப் படுகிறது//

கனவுகளைச் சொல்லிப்போன விதம் மிக அருமை பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

மேலும் மேலும் கனவுகள் காணுங்கள். அவற்றை பதிவாகத்தாருங்கள்.

மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

G.M Balasubramaniam said...


ஒன்று கவனித்து இருக்கிறீர்களா.?கனவில் நிகழ்ச்சிகளுக்கு நேரக் கணக்கு கிடையாது. கனவு கண்டு எழுந்ததும் கனவின் சுவாரசியம் மேலும் அனுபவிக்க உறங்க ப் போனால் அந்தக் கனவே வரும் ஆனால் வராது. சில கனவுகளின் சுவாரசியத்தில் மூழ்க நினைத்தால் அது தெளிவாக நினைவுக்கு வராது.

RajalakshmiParamasivam said...

அமானுஷ்யக் கவிதை அமானுஷ்யத்தை கொட்டி விட்டது.
அனால் நீங்கள் சொன்னதெல்லாம் (அதுவும் அந்த மந்திரி சைக்கிளில் போவது) நிஜத்தில் நடக்காது.
அதனால் கனவினை தொடருங்கள்
கவிதையாய் வடியுங்கள்
ஆவலுடன் படிக்கிறேன்.....

Unknown said...

தொடர்பே இல்லாத பல செய்திகள் கனவில் வருவது கண்டு நானும் வியந்திருக்கிறேன்!

கே. பி. ஜனா... said...


கனவுகள் சிலசமயங்களில் விழித்தெழுந்த பின்னரும் விழிக்க வைக்கின்றன...

சசிகலா said...

யதார்த்தங்களில் வர வர சுவாரஸ்யம்

குறைந்து கொண்டே ....

ஏதோ ஒரு ஆர்வம் பற்றிக்கொள்கிறது ..

ஸ்ரீராம். said...

கனவுகளுக்கு எல்லை ஏது? மனதின் எல்லா நினைவுகளும் சேர்ந்து கூட்டு போல கனவு வரும்போது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். :)

கவியாழி said...

அமானுஷ்யமே இப்போதெல்லாம்
எனக்கு சுவாரஸ்யமாகப் படுகிறது//அமானுஷ்யமே சில சமயம் நடப்பதுண்டு.ஆனாலும் கதை அருமைங்க சார்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தொடர்பில்லாத விஷயங்களை தொடர்பு படுத்துவது கனவு.
அதை சுவாரசியமாய் தந்து விட்டீர்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

th.ma.8

ராமலக்ஷ்மி said...

வியக்க வைக்கும் விசித்திரம்தான்.

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான அமானுஷ்யம்... வாழ்த்துக்கள் சார்...

Seeni said...

athu sari...!

MANO நாஞ்சில் மனோ said...

இது கண்டிப்பாக தூக்கத்தில் எழுந்து எழுதியதுதான் ஹா ஹா ஹா ஹா அமானுஷ்யம் சிலது மிகவும் ரசிக்கத்தான் செய்யும், நான் தூக்கத்தில் ஜோக் கனவுகள் கண்டு மகிழ்வதும் சிரிப்பதும் உண்டு.

பால கணேஷ் said...

மனசு ஏதேதோ சந்தர்ப்பங்களில் பார்த்தது நினைத்தது கேட்டது எல்லாத்தையும் கோத்து கனவை அமைச்சு்க்கும்பாங்க. உங்க கனவுல மிருகங்கள் பேசினதை மிக ரசித்தேன். அமானுஷ்ய கனவு அருமை!

கரந்தை ஜெயக்குமார் said...

தாங்கள் கவி எழுது துயில் கூட அடியெடுத்துத் தருகிறது.

வெங்கட் நாகராஜ் said...

அட கனவு..... பல சமயங்களில் மனதில் நாம் நினைக்கும் விஷயங்களே கனவாக வரும் என படித்திருக்கிறேன்.... இருந்தாலும் அமானுஷ்ய கனவுகள்.... கொஞ்சம் திகில் தான்!

கீதமஞ்சரி said...

சுவையான கனவுகள் தொடரட்டும்... சுவையான பதிவுகள் எங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும். எவ்வளவு சுவாரசியமான கனவு! பயமுறுத்துவதாயிருந்தாலும் நினைத்து ரசிக்கவும் வைக்கிறதே...

ஸாதிகா said...

உங்கள் கவிதை வரிகளும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.

மாதேவி said...

அமானுஷ்ய கனவு ரசனை தொடருங்கள்.

ADHI VENKAT said...

அமானுஷ்ய கனவுகள் சுவாரஸ்யம். எனக்கும் விழிக்கும் போது சில நினைவு இருக்கும்....சில அந்த சமயத்தோடு சரி....:)

மகேந்திரன் said...

கனவுகள் நமக்கு கிடைத்த மாபெரும் கொடையல்லவா...
நனவுகளில் நசுங்கிப் போயிருக்கும் நமக்கு
கனவுகள் தான் காயத்துக்கு மருந்து போல....
அழகாக எழுதியிருகீங்க ரமணி ஐயா ...

Post a Comment