Friday, December 6, 2013

வலம்வரும் உலகம் உன்னை உயர்கவி என்றே நாளும்

சீர்மிகு கவிகள் செய்ய
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்

28 comments:

வெற்றிவேல் said...

கவிதை இயற்றுவதற்கான அடிப்படையை அழகாக சொல்லியுள்ளீர்கள்....

ஸ்ரீராம். said...

கவிகள் சிறக்கட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

கவர்ந்திடும் வகையில் சும்மா நச்சென அமைந்துள்ளது ஐயா... வாழ்த்துக்கள்...

கே. பி. ஜனா... said...
''சிறந்தவோர் கருத்தை
சீரிய சந்தத்தில்
தொடர்ந்து முயன்றால்
தோன்றும் உயர் கவி!''
ஆஹா, அழகாய்ச் சொன்னீர்கள்!

இளமதி said...

மிக மிக அருமை! கருவும் கவிதையும்!
நல்லதொரு கருவை மனதில் கொண்டு
அழகான சொற்களால் அதை வளர்த்து
கவிதையாகப் பிரசவிக்கவேண்டும்.
கிட்டத்தட்ட கவிஞரும் ஒரு
கர்ப்பிணித் தாயாக மாறவேண்டும்!

கருத்துச் செறிவான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

த ம.5

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்//

ஆஹா.........! ’அந்த நாளும் வந்திடாதோ’,
என ஏங்க வைக்கும் நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam said...

நல்லதோர் கரு கிடைக்க வேண்டுமே. கிடைத்தாலும் அது நல்லது எனப் பிறர் எண்ண வேண்டுமே. வாழ்த்துக்கள்.

Anonymous said...

''...தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்...'''
மிக அருமை! அழகாய்ச் சொன்னீர்கள்!
இனிய வாழ்த்து.

வெங்கட் நாகராஜ் said...

//குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்//

நல்ல கவிதை....

த.ம. 6

Bagawanjee KA said...

நல்ல கவிதை , பாராட்டுக்கள்.!
+1

உஷா அன்பரசு said...

கதையையோ, கவிதையையோ உணர்வுபூர்வமாய் ரசிக்க வைக்க....எடுத்து கொள்ளும் கருவில்தான் இருக்கிறது .!
த.ம-8

கவியாழி கண்ணதாசன் said...

தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்///எனக்கு அறிவுரைச் சொல்வது போல் உள்ளது

rajalakshmi paramasivam said...

கதைக்கோ, கவிதைக்கோ கரு முக்கியம் என்பதைக் கருவாக கொண்ட கவிதையை ரசித்தேன்.

விமலன் said...

உருக்கொள்ளும் கவிதைக்கோ,கதைக்கோ கரு முக்கியம்தான்/

அ. பாண்டியன் said...

வணக்கம் அய்யா
மிக அற்புதமாக கவிக்கு அலங்கார சொற்களை விட கரு தான் முக்கியம் என்பதை கவியாய் சொல்லி விட்டது சிறப்பு. கரு தான் படிப்பவர்களை நெஞ்சைக் கவர செய்யும் என்பது உண்மை. மெல்ல தவழும் குழந்தை போல முயற்சித்தால் கவி தங்கள் வசப்படும் எனும் உண்மையைக் கூறியமைக்கும் அழகான பகிர்வுக்கும் நன்றிகள்..

VVR said...

தொடர்ந்து முயன்றால் எதிலும் வெற்றி நிச்சயம்

Ranjani Narayanan said...

சிறந்த கவிதைக்கான இலக்கணத்தை வெகு அழகாகக் கூறியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

வழக்கம் போல் மிக அருமையான வார்த்தைகள கோர்த்தெடுத்து கவிதைச்சரம் தொடுத்துள்ளீர்கள்.

Iniya said...

சீர்மிகு கவிகள் செய்ய
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

அருமையான ஆணித்தரமான உண்மைகள் அடுக்கடுக்காய் அழகழகாய் எடுத்துரைத்தீர்கள்
உங்களால் மட்டும் தான் இயலும் வழமை போல் அத்தனையும் முத்துக்கள்
நன்றி தொடர வாழ்த்துக்கள்...!

கரந்தை ஜெயக்குமார் said...

முயற்சி திருவினையாக்கும்
அருமை ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம,11

அருணா செல்வம் said...

உண்மைதான்.

“கரு“ முழுமைபெற்றால் நல்ல
கவிக்குழந்தை பிறந்துவிடும்.

அருமையான விளக்கம் இரமணி ஐயா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சமீப காலமாக சந்தக் கவிதைகள் எழுதி அசத்துகிறீர்கள் மிக அருமை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.13

நம்பள்கி said...

[[தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்]]

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
சிறு துளி பேறு வெள்ளம்;

படி! படி!
எதைக்கண்டாலும் படி படி!
அறிவு வளரும்!
+1

Muthu Nilavan said...

இலக்கணச் சுத்தமான நேர்த்தியுடன், இளைய கவிகளுக்குச் சொல்லவேண்டியவற்றை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் அருமை அய்யா.

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..1

Post a Comment