Thursday, February 27, 2014

பெண்களுக்கான சுதந்திரமும் உரிமையும்


காட்டுக்குள்
வேட்டையாடச் செல்பவர்கள்
உல்லாசச் சுற்றுலா செல்பவர்கள்
முதலில் காடு குறித்த அறிவும்
மிருகங்களின் தடமறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
காட்டுக்கென பிரத்யேக உடைகளும்
கூடுமானவரையில் இரவுப் பயணம்  தவிர்த்தலும்
மிக மிக அவசியம்

ஏனெனில்
மிருகங்கள் பசி ஒன்றையே
பிரதானமாகக் கொண்டவை
கலை கலாசாரம் பண்பாடு என்கிற
பாசாங்கெல்லாம் அவைகளுக்கில்லை

அதைப் போலவே
நாட்டுக்குள்ளும்
பணி நிமித்தம் செல்லும் பெண்களாயினும்
பள்ளி செல்லும் பிள்ளைகளாயினும்
ஏன் பச்சிளம் பெண் குழந்தைகளாயினும்
முதலில் காடாகிப்போன நாடு குறித்த அறிவும்
இரண்டு கால் மிருகங்களின் வெறியறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
ஒட்டுமொத்தமாய் மூடிய உடலுடனும்
கூடுமானவரையில் பகலில் பயணித்தலுமே
மிக மிக  நல்லது

எனெனில்
பசியெடுத்தபுலியும்  வெறி பிடித்தசிங்கமும்
பயமின்றி உல்லாசமாய் உலவித் திரிய
பாவப்பட்டஅணிகளும்  பரிதாபக்குருவிகளும்
பதுங்கித் திரிகிற "புண்ணிய பூமியில் "
பெண்களுக்கான சுதந்திரமும்  உரிமையும்
வேறெப்படி இருக்கச் சாத்தியம் ?

இரவும்  இருளும்  தனிமையும்
ஆண்களின் ஆளுகைக்குட்டதாக்கிப் போன
தரங்கெட்ட பூமியில் பெண்களின் நிலை
வேறெப்படி இருக்கச் சாத்தியம்   ? 

Tuesday, February 25, 2014

தாய்மை

அகன்று விரைந்து பரவிஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி.
அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டிருந்தது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்
அதன் முழு வளர்ச்சியில்
தான் முற்றாய் மறைந்துபோனாலும்
அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.

சொற்க் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று தள்ளாடியது ஒருகவிதை
அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
கவிதைக்கு உயிர்தரும் மகிழ்வினில்
வேராக உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
கவிதை தந்த கரு

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை
சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை

Sunday, February 23, 2014

தொடரும் பரிசும் தொடரும் மகிழ்வும்

பதிவுலக பிதாமகர் வை.கோ அவர்கள்
பதிவுலகுக்கும் மற்றும் பதிவர்களுக்கும்
மகிழ்வூட்டும்படியாக நடத்திவரும்
சிறுகதை விமர்சனப் போட்டியில்" காதல் வங்கி"
என்னும் சிறுகதை விமர்சனத்திற்கும் முதல் பரிசு
பெற்றதன் மூலம்தொடர்ந்து
நான்காவது முறையாக முதல் பரிசினைப்
பெற்ற மகிழ்வினைத் இப்பதிவின் மூலம்
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்

முதல் பரிசு மட்டுமல்லாது
வஸிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி எனப்
பெயர் பெறுதலைப்போல  மிகச் சிறந்த பதிவர்
திருவாளர் வை.கோ அவர்கள் மூலம்
சிறந்த விமர்சகர் எனப் பட்டம் பெற்றதையும்
பெறுதற்கரிய பெரும் பேறாகக் கருதுகிறேன்

மேற்குறித்த கதைக்கான இணைப்பையும்
(http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html )
அதற்கு நான் எழுதிய விமர்சனத்தையும்
இத்துடன் இணைத்துத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்


காதல் வங்கி   (http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04.html )
---------------------------------

கதைக் களம் வங்கியாக இருப்பதால்
இது வங்கிக் காதலாகத்தானே இருக்க வேண்டும் ?
இது என்ன காதல் வங்கி  ?
.
கதை என்று சொன்னால் ஒரு திருப்பம்
ஒர் அதிர்ச்சி ஒரு எதிர்பாராத புரட்சிகரமான முடிவு
எனவெல்லாம் தானே இருக்கவேண்டும் ?

எந்த வித சிறு அதிர்வும் இல்லாது
ஒரு சொகுசுப் பேருந்தில்
நேர்கோட்டுப்பாதையில் பயணிப்பதைப் போன்றுச்
செல்லும் இந்தக் கதை எந்த வகையில் சேர்த்தி ?

மாற்றம் ஒன்றே மாறாதது .
காலச் சூழலுக்குத் தகுந்தாற்போல தன்னை
மாற்றிக் கொள்ளாத எதுவும்பிழைக்கமுடியாது
நிலைக்க  முடியாது எனவெல்லாம்
பயிற்றுவிக்கப்படுகிற இந்தக் காலத்தில்
பழமையை இன்னும் சரியாகச் சொன்னால்
பழைய பஞ்சாங்க வாழ்க்கை முறையை
சிறப்பித்துச் சொல்லும் இந்தக் கதையை
இதன் கருத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் ?

இந்தக் கதையைப் படித்து முடித்ததும்
இப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம்  உங்களுக்குத்
தோன்றினால் நிச்சயம் தவறே இல்லை
தோன்றவில்லையெனில்தான் அது தவறு

ஏனெனில் ஒரு படைப்பைப் படிக்கிற அனைவரும்
படிப்பாளியின் போக்கில்  அவரது நோக்கில்
படித்துப் பின் அதை நம் போக்கில் புரிந்து கொள்ள
முயலுகிற வழக்கம் எல்லாம் மாறி
வெகு காலமாகிவிட்டது

நாம் எல்லோரும் எல்லாவற்றிலும் சரியோ தவறோ
ஒரு கருத்துகைக் கொண்டிருக்கிறோம் அல்லது
ஒரு கருத்தைக் கொள்ளும்படியாக
பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்

நம் கருத்துக்கு ஒத்துப் போகிற கதையெனில்
அதிலுள்ள பிற சிறப்பு அம்சங்கள் குறித்து
அலசி ஆராயத் துவங்குகிறோம்.மாறாக இருப்பின்
அப்படைப்பைக் குதறித் தள்ளத் தயாராயிருக்கிறோம்
அல்லது கண்டு கொள்ளாது புறக்கணித்து
ஒதுங்குகிறோம்

இந்தக் கதையை விமர்சிக்கும் முன்னால் இவ்வளவு
நீண்ட முன்னுரை எழுதுவதன் காரணமே
இந்தக் கதை இப்படி இரண்டு எல்லைக் கோட்டின்
அருகில் இருந்து ஆராயாது இயல்பாக அணுகி
 ரசிக்கவேண்டிய கதை என்பதால்தான்

பொதுவாக வங்கியெனச் சொன்னால்
 பணம் போடும் இடம் எடுக்கும் இடம்
 என்பதைவிட பணம் இருக்கும் இடம்
எனத்தான் நாம் பொருள் கொள்கிறோம்

அந்த வகையில் இந்தக் காதல் வங்கிக்கான
பொருளாக காதல் இருக்குமிடம் நிலைக்குமிடம்
எனச் சொல்லலாம்

அடுத்ததாக காதல்
உலகில் அனைத்து மொழிகளிலும் அதிகமாக
விளக்கம் சொல்லப்பட்ட இன்னும் மிகச் சரியாக
விளக்கம் சொல்ல முடியாத சொற்கள்
 எனச் சொன்னால் அது நிச்சயம்
கடவுள்,கவிதை,காதல் என்கிற
மூன்று சொற்களாகத்தான் இருக்கமுடியும்

இந்தக் கதை பூடகமாக அந்தக் காதலுக்கு
அருமையான விளக்கம் சொல்லிப்போகிறது
என்றால் நிச்சயம் மிகையில்லை

மனித வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாக
உணவு, உடை ,இருப்பிடம் எனச்
சொல்வதைப்போல உண்மையான காதலுக்கு
உடல் ,உணர்வு,ஆன்மா
இவைகளின்  ஒத்திசைவு அவசியத் தேவை

ஒரு உடல் வெறி கொள்ள ஒரு உடல்
மறுப்பது எனில் அது காமக் காதல்

இருவரின் உடல் மட்டும் ஒத்துச் செல்கிறது
எனில் அது மிருகக்காதல்

இருவரின் உடலும் உணர்வும் ஒத்துச்
செல்லுகிறதெனில் அது சராசரிக் காதல்

ஆன்மா மட்டுமே ஒத்துச் செல்லுகிறதெனில்
அது தெய்வீகக் காதல் எனச் சொல்லலாம்

இன்னும் சுருக்கமாகச் சொன்னால்
உடலில் துவங்கி  உணர்வில் வளர்ந்து
ஆன்மாவில் நிலை கொள்கிற காதலை விட
ஆன்மாவில் துவங்கி உணர்வில் வளர்ந்து
உடலில் முடிவில் சங்கமிக்கிற
(அல்லது சங்கமிக்காமலே போகிற ) காதலே
நிச்சயமாக தெய்வீகக் காதல்

ஜானகி ரகுராமன் காதல் நிச்சயம்
தெய்வீகக் காதல்தான்

இதைப் பூடகமாகச் சொல்லத்தான்
நாம்புரிந்து கொள்ளும்படியாகச் சொல்லத்தான்
ஜானகியின் தாயாரை நமக்காக சில சராசரி
மனிதர்கள் நோக்கில்
 (அவர் அப்படி இல்லையென்றாலும் )
சில கேள்விகள் எழுப்பச் செய்து அதற்கு
ஜானகி மூலம் அருமையான விளக்கமளிக்கிறார்

அவர் விளக்கம் மூலமே இது சராசரி
வங்கிக்காதல் இல்லை
இது காலம் கடந்து நிலைக்கிற காதல் வங்கி
என்பதுமிக எளிதாய் நமக்குப் புரிந்து போகிறது

பயண இலக்கு  மிகத் தூரமாக இருப்பவர்களுக்கு
அதிக வளைவு நெளிவுகளற்ற
நான்கு வழிச் சாலைகள் தான் ஏற்புடையது
என்பதைப்போல

மிக உயர்ந்த நோக்கத்திற்காக கதை சொல்ல
நினைப்பவர்களுக்கு சுவாரஸ்யம் கூட்டுவதற்காக
செய்யப்படுகிற நெளிவு சுழிவு யுக்திகள்
(எதிர் கதாபாத்திரங்கள், முரண் நிகழ்வுகள் )
நிச்சயம் தேவையில்லை.குறிப்பாக இந்தக்
கதைக்கு அது தேவைப்படவில்லை

முடிவாக ஏன் எதற்கு என்கிற கேள்விகளைத்
தொடர்ந்து நம் செயல்பாடுகள் இருக்குமாயின்
கலாச்சாரப் பண்பாட்டுக் குழப்பங்கள் நேர
வாய்ப்பே இல்லை

உடல் ஆரோக்கியத்திற்கு உணவு என்பது போய்
அது நாக்கிற்கு என ஆனதைப் போல

சீதோஷ்ண நிலையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள
உடை என்பது போய் பகட்டுக்கு என ஆனதைப் போல

வாழ்வின் தேவைக்குத் தேவையான பொருட்கள்
என்பது போய் தன் செழுமையைக் காட்டுவதற்கு
என ஆனது போல

வாழ்வின் தேவைக்கு வேலை என்பது போய்
வேலைக்காக வாழ்வது என்பது போல

சிறந்த வாழ்வுக்கு காதல் என்பது போய்
உடலுறவுக்கு தலைவாசல் காதல் என்பது போல

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மாறுதல்கள்
புதுமைகள் புரட்சிகள் என்கிற பெயரில்
அர்த்தமற்ற அழிவைத் தருகிற போக்கே
தொடர்வதற்குப் பதில்அர்த்தமுள்ள உயர்வைத்
 தருகிற உன்னதமான பழைமையும்
பழைய பஞ்சாங்கமுமே தொடரலாமோ
என்கிற ஆதங்கம் அனைவர் மனதிலும்
இன்றையச் சூழலில் வரத்தான் செய்கிறது

மாறுதலும் புதுமையும் உயர்வையும் நன்மையையும்
தருமாயின் வரவேற்கத்தக்கதே.
அதுவே அழிவையும் நலிவையும் தருமாயின்
நிச்சயம் மாறுதல்களை நாம்
மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டும் எனும்
ஒரு திடமான கருத்தை இக்கதை நம்முள்
ஏற்படுத்திப் போவது நிஜம்

சென்ற விமர்சனப் போட்டியில் திரு, ரமணி அவர்கள்
அலசி காயப்போடுவது மட்டுமல்ல விமர்சனம் எனக்
குறிப்பிட்டிருந்தார்.அதுவும் சரிதான்

என்னைப் பொருத்தவரை விமர்சனம் என்பது
ஒரு ஸ்தலத்தைச் சேவிக்கச் செல்பவன் அந்த
ஸ்தலப் புராணத்தைத் தெரிந்து கொண்டு சேவித்தல்
எத்தனைச் சிறப்போ அதைப் போல

கதையின் அந்தராத்மாவை புரியச் சொல்லி விட்டு
வாசகனை அவன் போக்கில் கதையை படிக்கத்
தூண்டுவதும் நல்ல விமர்சனமாக இருக்க முடியும்

அதனாலேயே கதையின் சுருக்கத்தை  சிறந்த
வரிகளைக் கோடிட்டுக் காட்டும் (அதிகப் பிரசங்கி )
வேலையை நான் செய்யவில்லை

ஒரு நெல்லை நூறு நெல்லாக பெருக்கிக் காட்டுதல்
மூலம் ஒரு நிலம் செழுமையான நிலம் என
தன்னை நிரூபிப்பதைப் போல

ஒரு சிறுகதை வாசகனுக்குள் பல்வேறு தொடர்
சிந்தனைகளை  பெருக்கிப் போகிறதெனில் அதுதான்
மிகச் சிறந்த கதை

வேறு அத்தாட்சிகளும் சான்றிதழ்களும்
அதற்கெதற்கு ?

கதையைப் படிப்பவர் அனைவரின்
சிந்தனை விளக்கைச் சிறப்பாகத் தூண்டி
நன்றாக ஒளிவிடச் செய்யும்
அற்புதமான கதையைத் தந்தமைக்கு
மிக்க நன்றியும் தொடர வாழ்த்துக்களும்  வை ,கோ சார்.

குறிப்பு

 இப்பதிவின் நோக்கமே  யான் பெற்ற பரிசை
தாங்களும்  பெறுவதன் மூலம்  இப்போட்டிக்கு
பெருமை சேர்க்கவேண்டும்   என்பதற்காகவே

வாழ்த்துக்களுடன்.......

Saturday, February 22, 2014

நச்சரிக்கும் படைப்பின் சுகம்

நான் எழுத அமர்கிற வேளையும்
எதிர்வீட்டுப் பாட்டி
பேரனுக்கு சோறுட்டத் துவங்கும் வேளையும்
ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும்

பாதித்த கருவினை உணர்வினை
படைப்பாக்க நான் செய்யும் அசுர முயற்சியும்
பேரனுக்கு ஊட்டிவிட பாட்டி செய்யும் பிரயத்தனமும்
உத்தேசமாக ஒன்று போலத்தான் இருக்கும்

உணர்வின் வீரியத்திற்கேற்ற
வார்த்தைகளைத் தேடி நான் தத்தளிக்கையில்
பிடிவிட்டு கீழிறங்கி ஓடும் பேரனைத்
தூக்கத் துரத்திக் களைப்பாள் பாட்டி

முதலடி  மிகச் சரியாக அமைந்தால்
தொடர்வது எளிதென நான் ஆழ்ந்து யோசிக்கையில்
இறுக மூடிய உதட்டினில் ஒரு கவளம் போனால் கூட
ருசி உண்ண வைக்கும் எனத்  தொடர்ந்து
முயல்வாள் பாட்டி

நான் கிறுக்கிக் கிழிக்கும் பேப்பரைக் கண்டு
"பழுக்காத காயோடு ஏனிந்தப் பாடு
கருவைக் கனிய விடுங்கள்
 கவிதைத் தானாய் வருமென"நக்கலடித்துப் போவாள்
 இல்லக் கிழத்தி

பேரன் படுத்தும் பாட்டைக் கண்டு
"வயித்தைக் கொஞ்சம் காயவிடு
பசித்தால் தானாய் வருவான்" என
புத்தி சொல்லிப் போவான்
அவசர வேலை அப்பன்

விளைச்ச்சல் தரும் மகிழ்வை விட
விளைவிக்க படும் பெரும்பாடே
பெரும் மகிழ்ச்சி என்பது விவசாயிக்குத் தெரியும்
வியாபாரிக்குத் தெரிய வாய்ப்பில்லை
 என்பதுவும்

பரிமாறிப் பார்க்கும் மகிழ்வை விட
ஊட்டப் படும் பெரும் பாடே
அதிக சுகம் என்பது படுகிறவர்களுக்குத் தெரியும்
பார்க்கிறவர்களுத் தெரிய வாய்ப்பில்லை
என்பதுவும்

உயிர்க்கருவை பத்து மாதம்உள்ளுக்குள் தாங்குதல்
 வலியெனினும் அலுப்பெனினும் அதிலுள்ள சுகம் அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்
தத்தெடுத்தவர்களுக்கத் தெரிய வாய்ப்பில்லை
என்பதுவும்

சட்டெனப் பிறக்கிற படைப்பினும்
பாடாய்ப்படுத்திப் பிறக்கும் படைப்பும்
உள்ளிருந்து  நச்சரிக்கும் படைப்பும் தரும்
 சுகத்தின் அருமைஎத்தகையது என்பதுவும்
படைப்பாளிக்குத்தானே முழுமையாத் தெரியும் !

Tuesday, February 18, 2014

இணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்


நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

Sunday, February 16, 2014

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வு  பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அற்புதக்  குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பான மே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை மிகச் சரியாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல் ?
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்

Friday, February 14, 2014

தேர்தல் புயல்

எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்
கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும்
வழக்கம்போல்
 மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'

(அடுத்த தேர்தல்  வந்துவிட்டது  ஆயினும்
நிலைமைகள் எப்போதும்போல்தான்  உள்ளது 
எனவே புதிதாக  ஒரு பதிவு  போடாமல் 
பழைய பதிவையே  மிண்டும்  பதிவாகத
தந்துள்ளேன்  )

Wednesday, February 12, 2014

கெட்டிக்காரனும் அரைவேக்காடும்

மிகத் தீவீரமாகச்
செயல்படும்
மிக மிக
மோசமானவனும்

துணிவின்றி
செயல்படத் தயங்கித்
தினம் திரியும்
மிக மிக நல்லவனுமே

நாடு நாளும்
நாசமாக மூல காரணம்

சொல்லும் திறனிருந்தும்
மோசமானதைச் சொல்லிப்
புகழ் பெற விழையும்
"கெட்டிக்காரப்  "படைப்பாளியும்

சொல்லும் பாங்கறியாது
மிகச் சிறந்ததைச் சொல்லி
உலகைத் திருத்த முயலும்
"அரைவேக்காட்டுப்  "படைப்பாளியும்

படைப்புலகை நாளும்
பாழ்படுத்துதல் போலவே

Monday, February 10, 2014

எதிர்மறையே எப்போதும் முன்னே வா.

..பசியே வா
ஊழிக்கால நெருப்பாய்
குடல் முழுதும் பரவி
முற்றாக என்னை எரி
எனக்கு ருசியின் அருமையை
முழுமையாய் ருசிக்க வேண்டும்

பிரிவே வா
இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி
நான் அருகாமையின் சுகத்தை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்

பகையே வா
உன் போர்த்தந்திரங்களையெல்லாம்
வெறியோடு பயன்படுத்தி
என்னை நிர்மூலமாக்க முயற்சி செய்
இருக்கும் பலம் போதாது
நான் இன்னும் பலம் பெற வேண்டும்

அஞ்ஞானமே வா
நீர் மறைத்த நிலமாய்
ஞானத்தை என்னிடமிருந்து
முற்றாக மறைத்துவை.
அசுர வெறியோடு தோண்டித் தேடி
நானாக அதை அடைதல் வேண்டும்

எதிர்மறையே வா
பகலுக்கு முன்வரும் இரவாய்
சுகத்திற்கு முன் வரும் துயராய்
எப்போதும் நீயே முன்னே வா
நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர  வேண்டும்

Saturday, February 8, 2014

முக்கா முக்கா மூணுன்னும் சொல்லலாம்

ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய்
பதிவுலகப் பிதாமகரின் சிறுகதை விமர்சனப்
போட்டியில் மூன்றாவது கதைக்கானப் போட்டியிலும்
எனக்கே முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதைப்
பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-01-03-first-prize-winners.html

விமர்சனம் எழுதியது யார் என நடுவருக்குத்
தெரியாதபடி பெயரை எடுத்துவிட்டுதான்
விமர்சனங்களை அனுப்பிவைப்பதாக
ஏற்கெனவே தனது அறிவிப்பில்
திரு வை, கோ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்

நமக்கும் இதுவரை நடுவர் யார் எனத் தெரியாது

அந்த வகையில் மிக நேர்மையாக நடத்தப்படுகிற
இந்த சிறுகதை விமர்சனப் போட்டியில்
மூன்றாம் முறையாகக் கிடைத்த முதல் பரிசு
எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதோடு தொடர்ந்து
விமர்சனமும் எழுதலாம் என்கிற தைரியத்தையும்
தருகிறது

பதிவுலகில் அதிகமாய் இருக்கிற
சிறந்த  எழுத்தாளர்கள் இனியும் ஒதுங்கி இறாமல்
 இப்போட்டியில்பங்கு கொண்டு போட்டியை  மேலும்
சிறப்படையச் செய்யவேணுமாயும்
அதன் மூலம் பதிவர்கள் அனைவரும்
விமர்சனக் கலையிலும் சிறந்து விளங்க
நல்வழிகாட்டுமாறும்அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இத்துடன் போட்டிச் சிறுகதைக்கான இணைப்பையும்
எனது விமர்சனத்தையும் கீழே தங்கள்
உடனடிப் பார்வைக்காக இணைத்துள்ளேன்

http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html

எனது விமர்சனம்

சுடிதார் வாங்கப் போறேன்

சுடிதார் வாங்கப் போன இந்தக் கதை
எனக்கு மிக அசாதாரணமான ஒரு விஷயத்தை
வேண்டுமென்றே மிகச் சாதாரணமாகச் சொல்லிப்
போனதைப் போலப்பட்டது

ஒருவேளை எனக்குத்தான் இப்படிப்படுகிறதோ
என எனக்குச் சந்தேகம் வந்ததால் என் நண்பனை
ஒருமுறைப்படிக்கச் சொல்லி அவன் கருத்தைச்
சொல்லுமாறு கேட்டேன்

அவனும் எனக்காகப் படித்து" சுடிதார் வாங்கிய
விஷயத்தை விரிவாக எழுதியுள்ளார்.
எழுத்துத் திறமை மிக்க படைப்பாளியாய்
இருப்பதால் நாமும் அவருடன்
இருந்து சுடிதார் வாங்குவதைப் போன்று
உணரவைக்கிறார் "என்றான்

"வேறு எதுவும் தோன்றவில்லையா ?"என்றேன்

"இல்லை " என்றான்

அவன் பதில் எனக்கு ஆச்சரியமளிப்பதாகத்தான் இருந்தது

இந்தக் கதை படிப்பதற்கு முன்னால் இப்படி ஒரு
சூழல் நேர்ந்திருக்குமெனில் "சட்டென உனக்கு
இலக்கிய ரசனை கம்மி என்றோ அல்லது
இன்னும் ஆழமாகப் படித்து பொருள் கொள்ளும்
பக்குவத்தை நீ வளர்த்துக் கொள்ளவேண்டும் "என்றோ
உரிமை கொடுத்த தைரியத்தில் அசட்டுத்தனமாகப்
பேசி இருப்பேன்

இந்தக் கதைப் படித்து நேர்ந்த பாதிப்பில் அப்படிப்
பேசத் தோன்றவில்லை

"மிகச் சரியாகத்தான் சொல்கிறாய் .ஆயினும் இன்னும்
சற்று ஊன்றிப் படித்திருந்தால் இன்றைய வாழ்வில்
நாம் உறவு முறையிலும் நட்பு வகையிலும்
நெருக்கத்தையும் இறுக்கத்தையும் இழந்து வருவதற்கான
உண்மையான காரணம் புரியும் "என்றேன்

அவன் புரிந்து கொள்ள முயல்பவன் போல
ஆர்வத்துடன் என்னைக் கவனிக்கத் துவங்கினான்

நான் தொடர்ந்தேன்
 "ஒரு மூன்று மாமாங்க காலமாக
மிகச் சரியாகச் சொன்னால் திருமணம் ஆனதிலிருந்து
 இன்றுபேரன் பேத்தி எடுக்கிற காலம் வரை
 தன் மனைவியிடம் ஒரு சிறு அங்கீகாரத்தைப்
 பெறுவதற்காக கதை நாயகனிடம்
இருக்கும் பெரும் ஏக்கமும் அதைத் தீர்ப்பத்தற்காக
அவர் செய்து தோற்கும் முயற்சிகளையும்
சேலையை ஒரு குறியீடாகக் கொண்டு மிக மிக
அருமையாக விவரிக்கிறார்.

இத்தனைக்கும் இந்த தம்பதிகள்  இருவரும்
சராசரித் தம்பதிகளைப் போல அல்லாது
ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த அன்பினையும்
 பற்றுதலையும்கொண்ட அருமையான தம்பதிகள்தான்
ஆயினும் ஒருவருக்காக ஒருவர் செய்கிற செயல்களை
அங்கீகரித்துப் பாராட்டும் ஒரு சிறு நற்பழக்கம்
இன்மையால்அவர்களுக்கும் இருக்கும்
அன்னியோன்யம் இருந்தும் வெளிப்படாது
 பூமிக்கடிப் புதையல் போல்
இருப்பதை பூடகமாகச் சொல்லிப் போனது
மிக மிக அருமை

உண்மையில் நம் போன்ற பழைய
 தலைமுறை நபர்களின்பெரிய குறைபாடே
இதுதான்

கதாசிரியர் சேலையையும் சுடிதாரையும்
 மிக மி கஅருமையாக தலைமுறைக்கான
 குறியீடாகக் கொள்வதுதான்
இந்தப் படைப்பின் மிகச் சிறப்பு

மிகச் சரியான சுடிதாரைத் தேடுவதற்கான
அதீத முயற்சிக் கூட அடுத்த தலைமுறையின்
ரசனையை, பண்பை, அவர்கள் வாழ்க்கை முறையை
புரிந்து கொள்வதற்கான முயற்சியும்
தன் தலைமுறை புரிந்து கொண்டு அங்கீகரிக்காத
பாராட்டாத நம் முயற்சியை அடுத்த
 தலைமுறையிடமாவதுபெற்று விட வேண்டும்
என்கிற அதிக ஆவலைச் சுட்டிக்காட்டத்தான்
கதாசிரியர்  அந்தப் பகுதியில்
அதிக கவனம் கொண்டிருக்கிறார் என்பதை
கொஞ்சம் கருத்துடன் படித்தால் புரியும்

நம் தலைமுறையைச் சேர்ந்த
கணவன் மனைவி இருவரும் இருபத்தி நான்கு
 மணி நேரமும்தொட்டுக் கொள்ளும் படியான
நெருக்கத்தில் இருந்தும்
மனதளவில் வெகு தூரம் விலகி இருப்பதும்

படிப்பு பணிச் சூழல் காரணமாக இந்தத் தலைமுறையினர்
இடத்தால் வெகு தூரம் விலகி இருந்தாலும்
மனத் தளவில் மிக நெருக்கமாக இருப்பதுவும்

கஞ்சத்தனமின்றி பாராட்ட வேண்டிய விஷயங்களை
காலம் தாழ்த்தாது மிகச் சிறப்பாக எப்படிப்
 பாராட்டவேண்டுமோ அப்படிப் பாராட்டி
 உரியவர்களை மகிழ்விப்பதோடு அல்லாமல்
தானும் மகிழ்ச்சி கொள்வதும்

இப்படி மூன்றாம் பகுதியில் மிக அருமையாகச்
சொல்லிப்போன விஷயங்களையெல்லாம் நான்
ஒவ்வொன்றாக விளக்கினால் அதிக நேரமாகும் "
என நான் சொல்லி முடிப்பதற்குள் என் நண்பனே
சட்டென என் கையைப் பிடித்து இப்படிச் சொன்னான்

"போதும் போதும்.எனக்கு உண்மையில் இதுவரை
குறியீடுகளைப் புரிந்து கொள்ளுகிற
 பக்குவம் மட்டும் அல்ல
புரியச் சொல்லுகிற விஷயத்தைத் தாண்டி
நாமாகவே புரிந்து தெளியட்டும் என விட்டுச் செல்லும்
விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை

இப்போது நீ சொன்ன விஷயங்களை உள்வாங்கி
இன்னொரு தடவை இந்தக் கதையைப் படித்து
மிகச் சரியாக விமர்சனம் செய்கிறேன் "
என்றான் நம்பிக்கையுடன்

எனக்கும் அவன் நிச்சயம் இனி கதைகளை
புரிந்து படிக்கத் துவங்குவான் மிகச் சரியாகவும்
விமர்சிப்பான் என்கிற நம்பிக்கை எனக்குள்ளும்
துளிர்விடத் துவங்கியது

விமர்சனம் என்பது படைப்பை உதறிக்
காயப்போடுவதும், அலசி உலற வைப்பது
மட்டும் அல்ல

அது வாசகனின் ரசனைத் தன்மையை
உயர்த்துவதும் நல்ல படைப்புகளைத் தேடும்படி
அவனை ஆற்றுப்படுத்துவதும் தான் என்பதை
நிச்சயம் அவன் புரிந்து கொண்டுவிட்டான்
என்றேப் படுகிறது எனக்கு

 உங்களுக்கு ?

Wednesday, February 5, 2014

தலைமையின் பலமும் பலவீனமும்

அந்த முக்கியப் பிரமுகர் கடந்து செல்வதற்காக
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்

அந்தச் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது

போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது

போரடிக்காது இருப்பதற்காகவோ அல்லது
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்
"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்
சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"என்றான்

எல்லோரும் அமைதியாக என் முகத்தைப் பார்த்தார்கள்

"இதோ உனக்கான பதில் நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்

"புரியவில்லை "என்றனர் கோரஸாக

"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே

ஆயினும்
மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்
அவருடைய முழுத் திறனையும் அதில் ரசிப்போம்
அவருக்கும்  நம்மைப் போல் கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்

அவர்களுக்கு என் பதில் புரிந்ததாகத் தெரியவில்லை

போக்குவரத்து சீராகிக்  கொண்டிருந்தது

Tuesday, February 4, 2014

கவிதை சிறக்கவும் காலம் வெல்லவும்


நிலையான உறவுக்கும்
நெருக்கமான நட்புக்கும்
பின்னிப்பிணைந்த நெருக்கமும்
மூச்சுவிடாத பேச்சும்
நிச்சயம் தேவையில்லை என்பதும்
இதழ் விரித்த சிறு புன்னகையும்
மனம் திறந்த ஒரு சொல்லும்
போதும் என்பது கூட
உறவும் நட்பும்
உருக்குலைந்த பின்புதான்
புரிந்து தொலைக்கிறது

உறுதியான உறுப்புக்கும்
பலமான உடலுக்கும்
அண்டாச் சோறும்
அடுக்குக் குழம்பும்
அவசியம் தேவையில்லை என்பதும்
சரிவிகித சிற்றுண்டியும்
சத்துள்ள பழவகையும்
போதுமென்பது கூட
குடலும் உடலும்
கெட்டுத் தொலைந்த பின்புதான்
புத்திக்குப் புரிகிறது

ஆனந்த வாழ்வுக்கும்
அமைதியான மனதிற்கும்
வங்கிக் கணக்கில் இருப்பும்
வகைதொகையில்லாச் சொத்தும்
என்றேன்றும் தேவையில்லை என்பதும்
போதுமென்ற மனமும்
ஆரோக்கிய உடலும்
போதுமென்பது கூட
ஏழை எளியவர்களின்
முகம் பார்த்தபின்புதான்
மூளைக்கு உறைக்கிறது

கவிதை சிறக்கவும்
காலம் வெல்லவும்
வார்த்தை ஜாலங்களோ
பாண்டித்திய மாயங்களோ
அவசியத்  தேவையில்லை என்பதும்
எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது

Sunday, February 2, 2014

இரண்டாம் முறைக் கிடைத்த லட்டு

பதிவுலகப் பிதாமகரின்
இரண்டாவது சிறுகதைக்கான போட்டியில்
(தை வெள்ளிக்கிழமை  )
நான் தவறாது விரும்பித் தொடரும் பதிவர்
திருமதி.ராஜலெட்சுமி பரமசிவம் அவர்களுடன்
முதல் பரிசைப் பகிர்ந்து கொள்ள  கிடைத்த
யோகத்தை பெருமையாகக் கருதுகிறேன்

சரியோ தவறோ படைப்பாளியின் கருத்துக்கு
என் கருத்து உடன்பட்டுப் போகிறதோ இல்லையோ
கதையைப் படித்ததும் நான் உணர்கிற கருத்தை
குழப்பமின்றி பதிவு செய்வதால் கிடைத்த
அங்கீகாரமாக இந்தப் பரிசைக் கருதுகிறேன்

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-01-03.html

திரு .வைகோ அவர்கள் போட்டிக்கான அறிவிப்பில்
குறிப்பிட்டிருப்பதைப் போல இந்தப் போட்டியில்
கலந்து கொள்வதன் மூலம் ஒரு படைப்பை
ஊன்றிப் படிப்பதற்கான பயிற்சியாகவும்
நமது விமர்சனத் திறனை வளர்த்துக் கொள்ள
ஒரு நல்ல வாய்ப்பாகவும் இந்த சிறுகதை
விமர்சனப் போட்டி இருப்பதால் பதிவர்கள்
அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இத்துடன் இந்த இரண்டாம் சிறுகதைக்கான
இணைப்பையும் அதற்கான எனது  விமர்சனத்தையும்
இத்துடன் பகிர்ந்துள்ளேன்

http://gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html



எனது விமர்சனம் 



துவங்கியதும் தெரியாது தொடர்ந்ததும் தெரியாது
சட்டென  கனத்துப் பெய்து 
ஓய்ந்த  கோடை மழைபோலவும்...

வளைவுகள் நெளிவுகள் அற்ற ஒரு
நெடுஞ்சாலையில் சட்டெனத் தோன்றி
வேகமாக நம்மைக் கடந்து போகும் ஒரு
அதி வேக அழகியக் கார் சட்டென நம்முள்
ஏற்படுத்திப் போகும் அதிர்வினைப் போலவும் ...

இக்கதை நம்முள் ஒரு எதிர்பாராத 
ஆயினும் ஒரு அழுத்தமான பாதிப்பை 
ஏற்படுத்திப் போகிறது
என்றால் நிச்சயம் அது மிகையில்லை

"ருக்குவுக்கு இடுப்பு வலி எடுத்துவிட்டது " என
எடுத்தவுடன் கதைக் கருவின் கழுத்தை அழுத்தப்
பிடிப்பதற்கு உண்மையில் கொஞ்சம் கூடுதல்
"தில் "தான் வேண்டும்.அது வைகோ சாருக்கு
கூடுதலாக இருக்கிறது என்பதற்கு இக்கதையே சாட்சி

வேறு யாரேனும் இக்கதையைச் சொல்லி இருந்தால்
நிச்சயமாக செக்- அப்புக்கு வருவது முதல் துவங்கி
பின் குழந்தை இல்லாத தம்பதிகளின் மன நிலையை
விளக்கி பின் விலாவரியாக பேரம் பேசுதலை
விவரித்து உச்சக் கட்டமாக பிரசவ வலியெடுத்து
மருத்துவ மனையில் சேர்ப்பது என்கிற வகையில்தான்
யோசித்திருப்பார்கள்.அதுவும் ஒரு சாதாரணக்
கதையாகிப் போயிருக்கும்

நிச்சயம் எத்தனை குழந்தை பெற்றாலும்
எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் பத்து மாதம்
சுமந்து பெற்றவள் நிச்சயம் மனசார தன் குழந்தையை 
விற்கத் துணியமாட்டாள்

இது கதாபாத்திரமாக வருகிற மருத்துவருக்கும்
நிச்சயம் தெரிந்திருக்கிறது.அதனால்தான் குழந்தையை
வாங்க நினைப்பவர்களை வரச் சொல்லிவிட்டு
இவர்களிடம் அவர்களை வரச் சொல்லவா எனக் கேட்கிறார்

குழந்தையைப் பெற்றவர்களுக்கும் குழந்தையை
ஆரோக்கியமாகப் பெற்றுவிட வேண்டும் அதற்காக
மருத்துவர் மூலம் பெற முடிந்த உதவிகளைப்
பெற்றுக் கொள்வோம்,அதுவரை மருத்துவரிடம்
முரண்பாடு வேண்டாம் எனத் தான்  முடிவு
எடுத்திருக்கவேண்டும்.இல்லையெனில் மருத்துவர்
கேட்டவுடன் இருவரும் இப்படி திட்டவட்டமான
பதிலைக் கூறி இருக்க வாய்ப்பே இல்லை

கதை மாந்தருக்கும் தெரிந்த கதைபடிப்பவருக்கும்
புரிந்த விஷயம் கதையை எழுதியவருக்குத்
தெரியாமலா இருந்திருக்கும்.நிச்சயம் தெரிந்திருக்கும்

கதாசிரியரைப் பொருத்தவரை அவர் குழந்தையைப்
பெற்றுக் கொடுக்கும் நிகழ்வினைப் பயன்படுத்திக் 
கொள்கிறாரே ஒழிய அவரது முழுக் கவனமும் 
நிச்சயம் அதில் இல்லை எனவே எனக்குப் படுகிறது

உண்மையோ பொய்யோ தப்போ சரியோ
காலம் காலமாக பண்பாடு ரீதியாக கலாச்சார ரீதியாக
நாம் பல நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறோம்

தப்பிக்கவே முடியாமல் சிக்கிக் கொள்கிற சூழலில்
மிக எளிதாக தப்பித்துக் கொள்ள இது போன்ற
நம்பிக்கையின் மீதான  நம்பிக்கைகள் கை கொடுக்கின்றன

"ஐந்தாவது குழ்ந்தை " "தை வெள்ளிக்கிழமை " என்கிற
சென் டிமெண்டானநம்பிக்கையை தவிர்த்து  
வேறு எந்தக் காரணத்தைஸ் சொல்லி இருந்தாலும் 
அதற்குமருத்துவர் மாற்று ஒன்று சொல்லி இருக்கமுடியும்
இந்த நம்பிக்கைக்கு எதிராக நிச்சயம் அவர்
எந்த வாதத்தையும் வைக்க முடியாது
கதையில் வைக்கவும் இல்லை

எனக்கு இந்தக் கதையின் மையக் கருத்தே
இதுதான் எனப்படுகிறது 

இல்லையெனில் கதை ஆசிரியர் ஐந்தாவது குழ்ந்தை
மற்றும் தை வெள்ளிக் கிழமை என்கிற வரிகளுக்கு
அத்தனை அழுத்தம் கொடுத்திருக்கமாட்டார்.

அந்த வகையில்  நிலாவைக் காட்டி சோறு
ஊட்டுகிற தாயினைப் போல ஏதோ ஒரு
நிகழ்வை  எடுத்துக் கொண்டு தான் வாசகருக்கு
ஊட்ட நினைக்கிற கருத்தினை மிகச் சுருக்கமான
கதையாகச் சொல்லிப்போனாலும் சரியாக சொல்லிப்
போனவிதம் மிக மிக அருமை

அதே சமயம்

கலையை முன் வைத்துவிட்டு கலைஞன்  ரசிகனே
தேடி அறியட்டும் எனச் சொல்கிற மாதிரி
அந்த இரண்டு சொற்களை அத்தனைப் பெரிதாக
உருவத்திலும் நிறத்திலும் அழுத்திச் சொல்லாமல்
படிப்பவர்களே புரிந்து கொள்ளட்டும் என
மிகச் சாதாரணமாகச் சொல்லி இருக்கலாமோ
எனத் தோன்றிய எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை

இருப்பினும் வருடத்தில் வருகிற வெள்ளிக் கிழமைகளில்
தை வெள்ளி மிகச் சிறந்தது என்பதைப் போல
இந்தத் "தை வெள்ளிக் கதையும் " மிகச் சிறந்தது
என்பதை முத்தாய்ப்பாகச் சொல்லித்தான் ஆகவேண்டும்