Tuesday, September 16, 2014

சந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு

சந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு
சொந்தம் கொள்ளும் போது-ஒரு
விந்தை போல சிந்து நூறு
வந்து கொஞ்சும் தானே


இராகத் தோடு தாளம் கூடி
மாயம் செய்யும் போது-என்றும்
வராது ஏய்த்த வார்த்தை எல்லாம்
வந்து கெஞ்சும் தானே


அறிவை மீறி உணர்வு ஏறி
ஆர்ப்ப ரிக்கும் போது-கவிதை
வெறித்து ஒடும் குதிரை யாக
சிலிர்த்துத் தாவும் தானே


அச்சில் வார்த்து எடுக்கச் சிரிக்கும்
அழகுச் சிலையைப் போல-சந்தம்
கச்சைக் கட்ட உளறல் கூட
கவிதை ஆகும் தானே

Monday, September 8, 2014

சொர்க்கமது ஆனாலும் கூட----

பிடிச் சோறு ஆனாலும் கூட -அது
மிகப்பழசே ஆனாலும் கூட -நீ
பிழிந்துத்தர உண்ணுகிற சுகமே -அது
தேவலோக அமுதுக்குச் சமமே

எட்டுவகைக்  காய்கறிகள் கூட -உடன்
எறாநண்டும்  சேர்த்துவைத்தும் கூட-சோத்தை
தொட்டெடுக்க மறுக்குதடி மனமே-இந்தக்
கூத்துஇங்கு தொடருதடி தினமே

ஒருமொழியே ஆனாலும் கூட-அது
வசைமொழியே ஆனாலும் கூட-அது
திருமொழியாய்த் தெரியுதடி எனக்கு-உன்னைப்
பிரிந்துஇங்கு தவிக்கின்ற எனக்கு

நாகரீக உடையணிந்த மாந்தர்-தினம்
நுனிநாக்கில் கதைத்தாலும் கூட-அது
சோகமேற்றிப் போகுதடி எனக்கு -உன்னை
எண்ணிதினம் துடிக்கிற எனக்கு

குச்சிவீடு என்றாலும் கூட-வசதி
கூடக்குறச்சு என்றாலும் கூட-கண்ணே
நிச்சயசமாய் சொர்க்கமது தானே-அதுவே
கடல்தாண்டப் புரியுதடித் தேனே

கண்ணைவித்து ஓவியத்தை வாங்கி -மனம்
களிக்கின்ற கிறுக்கர்கள் போல-இங்கு
உன்னைவிட்டு வசதிசேர்க்க நானும்-இளமை
வாழ்வதனைத் தொலைக்கிறேண்டி நாளும்

சொர்க்கமது  ஆனாலும் கூட - அது
நம்மூரைப் போலாகா தென்று- கவிஞன்
சொல்லியது சத்தியமாய் நிஜமே-இதனை
அங்கிருப்போர் அறிந்துகொண்டால் நலமே


(முக நூலில்  நண்பர்  நாஞ்சில்  மனோவின்
ஒரு பதிவைப் பார்க்கப்  பிறந்தக் கவிதை
அயல் நாட்டில்  வாழும் நண்பர்களுக்கு
இக்கவிதை என் எளிய  சமர்ப்பணம் ) 

Thursday, September 4, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
 
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
  
 
போட்டியின் நெறிமுறைகள்
1. கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு   மிகாமல் எழுத வேண்டும்.
2. விரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24  அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
3. படமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும்      கவிதைக்கு     50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின்
  மதிப்பெண்களைக் கூட்டி  வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
4. மரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்
5. கவிதையினைத் தங்கள் பதிவில் 15/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்)  பதிவிடப் 
   பட்டிருக்கவேண்டும்.
6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
7. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.
8. கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய 
  குறிப்புகளைத்  தரவேண்டும்.
9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்
10. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :  
ramask614@gmail.com  
 
நடுவர்கள்   
 

கவிஞர் கி.பாரதிதாசன் - பிரான்சு - http://bharathidasanfrance.blogspot.com 

கவிஞர் .இரமணி             - இந்தியா - http://yaathoramani.blogspot.com

டொக்டர்.திருமிகு.முருகானந்தன்-இலங்கை-http://muruganandanclics.wordpress.com/ 

 
நிருவாகக்குழு

திரு.பொ.தனபாலன்  - இந்தியா - http://dindiguldhanabalan.blogspot.com
திரு.இராஜ முகுந்தன் - கனடா - http://valvaiyooraan.blogspot.com/
திரு அ.பாண்டியன் - இந்தியா-http://pandianpandi.blogspot.com/  
திரு.கா.யாழ்பாவாணன்-இலங்கை-http://eluththugal.blogspot.com/

 
பரிசுகள்முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
(பதக்கமும் + சான்றிதழும் அஞ்ல் வழியாக அனுப்பப்படும்)
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்…! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது கீழ் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்… கருத்திடும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

 தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்-rupanvani@yahoo.com & dindiguldhanabalan@yahoo.com