Tuesday, June 30, 2015

மீண்டும் ஒரு அலசல்

மெல்லக் கீறிப் போகிறேன்

கவனிக்கப்படாமல் போய்விடாதபடி
கொஞ்சம் அழுத்தமாகவும்..

எரிச்சலடையாமல் இருக்கும்படி
கொஞ்சம் மெதுவாகவும்..

அளவு மீறினாலோ,குறைந்தாலோ
கவனம் மாறிவிடச் சாத்தியம்
மிக அதிகம் என்பதால்..

கொஞ்சம் வெளிச்சம் காட்டிப் போகிறேன்

முழுவதும் சரியாகத் தெரியும்படி
அதிகம் இல்லாமலும்

கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும்படி
கொஞ்சம் குறைவாகவும்..

அளவு கூடினாலோ குறைந்தாலோ
கவனம் குவிக்கப்படாது போய்விடச்
சாத்தியம் உண்டு என்பதால்..

வித்தியாசமாகச் சொல்லிப் போகிறேன்

விட்டு விலகி ஓடிவிடாதபடி
கவிதையாகவும் இல்லாதபடி

பிரசங்கம் என உணராதபடி
அறிவுரையாகவும் இல்லாதபடி

இரண்டின் சேர்மானமும்
மிகச் சரியாக இல்லையெனில்
ஒதுக்கிவிடவே வாய்ப்பு அதிகம் என்பதால்...

தொடர்ந்து சொல்லிப் போகிறேன்

சொல்வது  ஏதேனும் பயனுள்ளதாக
இருக்கவேண்டும் என்னும் கருத்தில்
மாற்றம் கொள்ளாதபடி..

முன்ணனி மற்றும் ,தரப்பட்டியல் என்னும்
அள்வீடுகளின் மாயச் சங்கிலியில்
பிணைத்துக் கொள்ளாதபடி..

உங்கள் ஆதரவுடன்
நூறு நாடுகளுக்கு மேல் மூன்று இலட்சம்
பார்வைப் பதிவுகளைப்  பெற்றபடி

தொடர்ந்து சோராது
நான்கு ஆண்டுக்கு முன்பு இருந்த
ஆர்வமும் வேகமும் சிறிதும் குறையாதபடி..

வாழ்க அரசும் வளர்க நீதி மன்றங்களும்...

அரசையும் நீதிமன்றங்களையும் போல
மிக மிக வித்தியாசமாக
மக்களுக்காக சிந்திப்பதைப்போல
வேறு எவராலும் நிச்சயம்
சிந்திக்கவே முடியாது

குடலையும் உடலையும்
படிப்படியாய் உயிரையும் குடிக்கும்
மது விற்பனையை
தானே நடத்திக் கொண்டு
தலையை மட்டும் காப்பதில்
அரசு அதீத அக்கறை கொள்வதிலும்

நீதி மன்றங்கள்
தலையில் கவனம் கொண்டு
மது விற்பனையில்
அக்கறை கொள்ளதிருப்பதுவும்

குடிப்பதற்கு வகை வகையாய்
சரக்குகளை உற்பத்தி செய்ய
அனுமதி கொடுத்து விட்டு
குடிக் கூடங்களை நிறையத் திறந்து விட்டு
அரசு வருவாய்ப் பெருக்க முனைவதிலும்

குடி குடும்பத்தைக் கெடுக்கும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு
என்கிற வாசகங்கள்
அவசியம் என்பதில் மட்டும்
நீதிமன்றங்கள் கவனமாய் இருப்பதுவும்

ஒட்டு மொத்த மனிதன்
குறித்த அக்கறைவிடுத்து
அவன் தலையை மட்டும் குறிவைக்கும்
அவைகளின் சமூக அக்கறை
அப்பப்பா
நினைத்தாலே புல்லரிக்கிறது

சட்டெனச் சாவதை தடுத்து
மெல்ல மெல்லச் சாக ஆவன செய்யும்
அதன் மக்கள் மீதான கரிசனம்
அம்மம்மா
நினைத்தாலே மெர்ஸலாகிறது

வாழ்க அரசும்
நீதி மன்றங்களும்

வளர்க அவைகளின் இதுபோன்ற
சமூகச் சிந்தனைகளும் அக்கறையும்...

Monday, June 29, 2015

சூட்சுமம் ?

நாம்தான் சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோமா  ?

அழகிய மலரினைப்போல
குழந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல

அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்

மறைப்புகள் ஏதுமின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகையில்

நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடும்
மூடனாகத் திரிகிறோமா  ?

 தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....

வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..

கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..

அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட

விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போக
போதி மரமாகி போக

நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோமா  ?

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சூட்சுமம் அறியும்  உபாயமறியாதிருந்து
 சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ?

Friday, June 26, 2015

ஏனில்லை எதிலும் தமிழ் ?

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர் பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர் பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது
விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்
எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  
அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

Thursday, June 25, 2015

சில சந்தேகங்கள்

சராசரிகள் எல்லாம் பள்ளி நாட்களில்
புத்திசாலிகளாய் ஜொலிக்க
உலகுக்கு பல அபூர்வ கண்டுபிடிப்புகளைக்
கொடுத்தவர்கள் எல்லாம் ஏன்
பள்ளியில் சேரவே
தகுதியற்றவர்களாய்க் கருதப்பட்டார்கள் ?

கல்வித்திட்டம் சரியில்லையா அல்லது
நம் அனுமானங்கள் சரியில்லையா ?

சராசரிகள் எல்லாம் இளமைக்காலங்களில்
அறிவுப் பெருக்கத்திற்கு
நூல்களையும் சான்றோர்ளையும் சார்ந்திருக்க
தீர்க்கதரிசிகள் எல்லாம் ஏன்
தனிமையையும் காடு மலைகளையும்
விலங்கினங்களையும் சார்ந்தே இருந்தார்கள் ?

நூல்களைவிட தனிமையும் விலங்கினங்களும்
அதிகம் சொல்லித் தருமோ ?

அறிஞர்களும் சான்றோர்களும்
தங்கள் உணர்வுகளை எண்ணங்களை
நேரடியாக வெளிப்படுத்திப் போக
எல்லையற்ற சக்திமிக்கவனுக்கு மட்டும் ஏன்
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
ஒரு அவதாரமோ ஒரு தூதுவனோ
அவசியத் தேவையாக இருக்கிறது ?

ஆண்டவன் என்பவன் மனிதனுக்கு
மட்டும்தானா ? அல்லது
மனிதனுக்குத் தான் ஆண்டவன் தேவையா ?

Wednesday, June 24, 2015

சர்வாதிகாரி- மிகக் குறைந்த அதிகாரத்தில்

பகலும் இரவும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பகலில் இரவில்
எதைச் செய்வது என்பது மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

பருவமும் காலமும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பருவத்திற்கும் காலத்திற்கும்
தகுந்தார்ப்போல நம்மை
தகவமைத்துக் கொள்ளும்
அதிகாரம் மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

ஆயுளும் முடிவும்
நம் கட்டுப்பாட்டில் நிச்சயம் இல்லை
ஆயுள் முடிவதற்குள்
எதைச் செய்து முடிப்பது என்பதை
முடிவு செய்யும்
அதிகாரம் மட்டுமே
நம் வசம் உள்ளது

வார்த்தைகளும் அதற்கான
அர்த்தங்களும் நம் கட்டுப்பாடில் இல்லை
அதனை முழுமையாகப் புரிந்து
மிகச் சிறந்த படைப்பைத் தருவது மட்டுமே
நம் அதிகாரத்தில் இருப்பதைப் போலவும்....

Tuesday, June 23, 2015

தலைமையின் பலமும் பலவீனமும்

அந்த முக்கியப் பிரமுகர் கடந்து செல்வதற்காக
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்

அந்தச் சிவப்புச்  சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது

போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது

போரடிக்காது இருப்பதற்காகவோ
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்

"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்

சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"
என்றான்

எல்லோரும் அமைதியாக
என் முகத்தைப் பார்த்தார்கள்

"இதோ உனக்கான பதில்
நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்

"புரியவில்லை "என்றனர் கோரஸாக

"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே

ஆயினும்

மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்

அவருடைய முழுத் திறனையும்
அதில் ரசிப்போம்

அவருக்கும்  நம்மைப் போல்
கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்

அவர்களுக்கு என் பதில்
புரிந்ததாகத் தெரியவில்லை

போக்குவரத்து சீராகிக்  கொண்டிருந்தது

Monday, June 22, 2015

தொலைக்காட்சியில் தோன்ற சுருக்கு வழி

 "தொலைக்காட்சியில் நீயும்
 உன் குடும்பமும் தோன்றவேண்டுமா ?
என்றான் நண்பன்

ஆர்வத்தில் "அதற்கு யாரைப் பார்க்கணும்
என்ன செய்ய வேண்டும் " என்றேன் நான்

"அதற்கு ஏஜெண்டுகளைப் பார்க்கவோ
சென்னை செல்லவோ வேண்டாம் "
என்றான் சிரித்தபடி

"பின் எப்படிச் சாத்தியம் "
என்றேன் எரிச்சலுடன்

அவன் பொறுமையாய்ச் சொன்னான்

"தொடர்ந்து தமிழில் வருகிற அத்தனை
தொடர்களையும் விடாதுப் 
பார்த்தாலே போதும் "

" பார்த்தால் போதுமா ?
நாம் பார்ப்பது எப்படி
அவர்களுக்குத் தெரியும் ?"
என்றேன் அவசரக் குடுக்கையாய்

"அவசரப்படாதே அவர்கள் நம்மைத் தெரிந்து
கொள்ள வேண்டிய அவசியமே இல்லை
நாம் கவனமாய்த் தொடர்களை தொடர்ந்து
கவனித்து வந்தால் மட்டும் போதும்

எப்படி எல்லாம் துரோகம் செய்யலாம்
எப்படி எல்லாம் ஒரு குடும்பத்தைக் கெடுக்கலாம்
என்பன போன்ற அற்புதமான
வித்தைகளையெல்லாம்
மிகத் தெளிவாக ஒரு குழந்தைக்குச்
சொல்வதைப்போலச் சொல்லி நமக்குப்
புரிய வைப்பார்கள்

தொடர்களில் முதல்  எபிஸோடில் சிரித்த
நல்லவர்கள் கடைசி
எபிசோடில்தான் சிரிப்பதும்..

இரண்டாம் எபிஸோடில் இருந்து
கடைசிக்கு முந்திய எபிஸோடுவரை
சந்தோஷமாய் இருக்கும் தீயவர்கள் எல்லாம்

உனக்குள்  நிச்சயம் ஒரு ஒரு மாற்றத்தை
ஏற்படுத்திப் போவார்கள் " என்றான்

"அப்புறம் என்ன "என்றேன் அப்பாவியாய்

அவன் மிகத் தெளிவாக

"அப்புறம் என்ன ?
சொல்வதெல்லாம் உண்மை  நிகழ்ச்சிக்கு
நீயும் கதாநாயகன்  போல ஆகி விடுவாய்
அப்புறம் உன்னை தொலைக்காட்சிக்காரர்கள்
தேடி வந்துதானே ஆகணும்  ? "
என்றான் தீர்மானமாக

Sunday, June 21, 2015

கவிதைக் கன்னி

அவன் பேழையுள்
அள்ள அள்ளக் குறையாத
பொக்கிஷமாய்
ஆயிரமாயிரம் கருத்துக்கள்

இவன் மூளையுள்
சொல்லச் சொல்லக் குறையாத
அட்சயமாய்
ஆயிரமாயிரம் சொற்கோவைகள்

இவர்கள்
இருவருக்குமிடையில்

இவைகள்
இரண்டும் கொண்டவனை
எதிர்பார்த்தபடி

கையைப் பிசைந்தபடி
கண்ணீர் மல்கியபடி
காலங்காலமாய் காத்து நிற்கிறாள்
கவிதைக் கன்னி

முன்னறித் தெய்வப்பட்டியலில்...

முன்னறித்  தெய்வப்பட்டியலில்
இரண்டாவதாயிருப்பதுக்  குறித்து
அவர்கள் கவலைப்பட்டதே இல்லை

குழந்தைகளின்முன்னேற்றம் குறித்துச்
சிந்திப்பதில் அவர்கள் எப்போதும்
முதலாவதாகவே இருக்கிறார்கள்

மாதா துவங்கி தெய்வத்தில் முடியும்
அந்த நால்வர் பட்டியலில்
குருவுக்கு முன்னர் இடம்பெற்றது
வெறும் வார்த்தை ஜாலத்திற்காக இல்லை

உலகைப் புரிந்து கொள்ளக்
கற்றுக் கொடுப்பதில் அவர்கள்
அனைத்து விஷயத்திலும் நிஜமாகவே
குருவுக்கு முன்னால்தான் இருக்கிறார்கள்

அன்னையர் தினம் அளவு
தந்தையர் தினம் கொண்டாடப்படுவது குறித்தும்
அவர்கள் சஞ்சலப்படாதே இருக்கிறார்கள்

ஆணுக்கென இந்தச் சமூகம் விதித்திருக்கும்
சில விசித்திர விதிகளினால்
அவர்கள்  உணர்வுகளை எப்போதும்
உள்ளத்தில் அடக்கிவைத்தே அலைகிறார்கள்

நம்மை வயிற்றில் சுமக்காது போயினும்
காலமெல்லாம் நெஞ்சில் சுமந்து சுகங்காணும்

நமக்குப் பாலூட்டி வளர்க்காது போயினும்
காலமெல்லாம் சிகரத்தில் வைக்க தினம்சாகும்

தந்தையரின் தியாகங்களை
சிந்தையினில் எந்நாளும் கொள்வோம்-அவரின்
கனவுகளை நினைவாக்கி
அவர்மனதைக் குளிர்வித்து மகிழ்வோம்

அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

Saturday, June 20, 2015

விதியும் விதிகளும்

விதி எனில்
விதிக்கப்பட்டது
எவராலும் மாற்ற இயலாதது
என நம்பப்படுவது

விதிகள் எனில்
நம்மால் உருவாக்கப்பட்டது
பயனில்லையாயின்  மாறுதலுக்குட்பட்டது
என ஏற்றுக் கொள்ளப்பட்டது

அருளப்பட்டதான
இறக்கப்பட்டதான நம்பிக்கையில்
மாற்றவே இயலாததான
மதத்தின் பாதுகாப்பில் விதி

அனுபவத்தின் அடிப்படையில்
வகுக்கப்பட்டதே ஆயினும்
முன்னேற்றத்திற்குமுட்டுக்கட்டை எனில்
மாறியாக வேண்டியது
விதிகளின் விதி

மாற வேண்டியவர்கள்

விதியை சொல்லித் தன்
பிழைப்பை ஓட்டுபவர்கள் மட்டுமல்ல

விதிகளைச் சொல்லி
தன்னை நிலை நிறுத்த விரும்புவர்களும் கூட..

அநாகரீகத்தை
நாகரீகமாகச் சொல்லுதல் கூட
சகித்துக் கொள்ளக் கூடியதே

நாகரீகத்தை
அநாகரீகமாகப் போதித்தல்
நிச்சயம் அநாகரீகமானதே

Friday, June 19, 2015

மீண்டும் ஞானப்பழம்

இருவேறு துருவங்கள்
ஒரு மையப்புள்ளியில்
நேராக சந்தித்ததுபோல்
பல வருடங்களுக்குப்பின்
நானும் அவனும் சந்தித்திருந்தோம்

முக்கிய மூன்று தேவைகளின்
அசுர நெருக்கடியில்
அல்லும் பகலும் அவதியுறும் நான்...
பள்ளி நாட்களில்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
கல்லூரிப் படிப்பினில்
தங்கப்பதக்கம்வென்றவன்

அதிகார மையங்களின் மிக அருகில்
வசதி வாய்ப்புகளில் மிக உச்சத்தில்
நாளும் பவனி வரும் இவன்...
பள்ளி நாட்களில்
"மக்கு"என பட்டம் பெற்றவன்
கல்லூரி முடிக்கையில்
தோல்விக் கோட்டின் மிக அருகில்
வெற்றி வாய்ப்பைப் பெற்றவன்

அவனின் அதீத வளர்ச்சி
மகிழ்வினைத் தந்தாலும்
மிக அதிசயமாகவும் இருந்ததால்.
அது குறித்து விவரம் தெரிந்தால்
அனைவருக்கும் ஆகுமே என
அவனிடம் அதுபற்றிக் கேட்டு வைத்தேன

"எல்லாம் நாரதர்கனி தந்த பாடம்" என்றான்
விளங்காது நான் விழித்து நிற்க
அவனே விளக்கமும் சொன்னான்.

"நீங்களெல்ல்லாம்
கனிக்கான போட்டியில்
வேலிருக்கும் மயிலுருக்கும்
உள்ளார்ந்த தெம்பினில்
உலகம் சுற்றப்போகும் முருகன்கள்

நாங்களெல்லாம்
உலகமே அம்மையப்பன்
அம்மையப்பனே உலகமென்று
அவர்களைச் சுற்றியே
கனியினைப்பெறும் வல்லவர்கள்" என்றான்

"என் கேள்விக்கும்
இந்த பதிலுக்கும்
என்ன சம்பந்தம் " என்றேன்

"தத்துவங்களை ரொம்ப விளக்கக்கூடாது
விளக்கினால் நீர்த்துப் போகும்"எனச் சொல்லி
சிரித்தபடி என்னைக் கடந்து போனான்.

 எனக்கு எதுவும் விளஙகவில்லை
ஆனாலும்
எனக்கென்னவோ
அவன் கையில் ஞானப் பழம்
கொண்டு போவது போலவும்
நான் கோவணம் கட்டி
தெருவில் நிற்பது போலவும் பட்டது

பாவப்பட்ட ஆண்டிகள்

தன்னையொத்தவர்கள்
தன்னருகில் இருக்கக் கூட
அதிர்ஷ்டம் வேணுமோ ?

சிறுவயதில் கிராமத்தில்
தன் வீட்டுக்கு எதிரே
பண்ணையார் வீடிருக்க
தன் வீடு குடிசை போல் தெரிய
நொந்துதான் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த ஓட்டுவீடு
கண்ணில் படவே இல்லை

படித்து முடித்து
அரசு வேலைக்குப் போய்
குடியிருப்பில் குடியேற
அடுத்த வீடாய்
அதிகாரியின் வீடாய் அமைய
வெறுத்துப் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவன் வீட்டுக்கு எதிரிலிருந்த
தன்னொத்த வீடு
சரியாகத் தெரியவில்லை

முப்பது ஆண்டு கால சேமிப்பில்
சொந்தமாய் ஒரு வீடு கட்டி முடிக்க
நேர் எதிரே ஒரு அரசியல்வாதி
வீடுகட்டித் தொலைய
மனமொடிந்து போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த
அறு நூறு சதுர அடி வீடு
வீடாகவே தெரியவில்லை

எல்லாம் முடிந்து
சுடுகாட்டில் புதைத்துத் தொலைக்கையில்
ஒரு புறம
ஒரு ஐ.பி. ஸ் அதிகாரியின் சமாதியும்
மறுபுறம்
உள்ளூர் சேர்மன சமாதியும்
கம்பீரமாய் எழுந்து நிற்க
இரண்டாம் முறை
செத்தே போனான ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு எதிர் இருந்த
சமாதி மண்மேடு
சமாதியாகவேப் படவில்லை

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
 ஒருசிறு படிப்பினையை அறியாததால்
ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை

பாவம் பாவப்பட்ட ஆண்டிகள்




Thursday, June 18, 2015

நிஜமாகும் கட்டுக்கதை

ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம் சாத்தியமற்றதென்றும்
ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து
சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும் எங்கிருக்கும் உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது
அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
உயிரை பிரித்து வைத்து உலவிய
 அரக்கனின் கதையும் கூட
சாத்தியமென்றே படுகிறது எனக்கு 

பருவ வயது உளறல்கள்

அவன் அவசரமாய்
அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்

"இப்போது வேதியல்  வகுப்பில்
உன்னைக் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் "

" என்னைக் குறித்தா?
வேதியல்  வகுப்பிலா ?"
அவள் பதில் செய்தி அனுப்பினாள்

"ஆம்.
தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்
பக்கத்தில் இருக்கும் பொருளை
மாறுதலடைச் செய்யும் பொருளை
டீச்சர் கிரியா ஊக்கி என்கிறார்
நான் அது நீ என்கிறேன் சரியா ?
அவன் அழகாய்ப் பிதற்றினான்

"இங்கு கூட இயற்பியல்  வகுப்பில்
உன் எதிர்காலம் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் " என்றாள்

"இயற்பியல் வகுப்பிலா ?
என்  எதிர்காலம் குறித்தா "
அவன் வியந்துபோய்க்  கேட்டான்

அவள் இப்படிச்  செய்தி அனுப்பினாள்

"எந்த ஒரு செயலுக்கும்
எதிர் விளைவுகள் உண்டு என்கிறார் சார்
இப்படி படிக்கிற நேரத்தில்
செய்தி அனுப்பிக் கொண்டிருந்தால்
 நாளை  நீ நிற்கப் போவது
நடு ரோட்டில்தானே  ? "

அவன் பதில் செய்தி அனுப்பவில்லை

Monday, June 15, 2015

பெரும்பான்மை என்பதே.....

பெரும்பான்மை என்பதே
தரம் தாழ்ந்ததென்பதில்லை

பொதுவாக தேர்தலில்வெற்றியோ
அல்லது சினிமாவின் வெற்றியோ
பெரும்பான்மையோரின் முடிவுப்படிதான் உள்ளது

ஆனால் பெரும்பான்மை எப்போதும்
தரமற்றதையே தேர்ந்தெடுக்கிறது என்கிற
கருத்து பரவலாக்கப்பட்டு அதுதான் உண்மை
என்பதுபோல் ஒரு கருத்து உலகில்
உருவாகப்பட்டுள்ளது

இது உண்மையில்லை என்பது சில
தேர்தல்களில் நிருபிக்கப் பட்டிருக்கிறது

சில சினிமாக்களும் இதை நிரூபித்திருக்கின்றன

தேர்தல் குறித்துத் தனியாக பரிசீலிப்போம்

இந்தப் பதிவில் சினிமா குறித்து மட்டும்
அலசுவோம்

ஒரு சினிமா வெற்றி பெற வேண்டுமானால்
ஸ்டார் வேல்யூ இருக்கவேண்டும்

பிரமாண்டம் இருக்கவேண்டும்

அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்

பிரபலமான தொழில் நுட்பக் கலைஞர்கள்
(இயக்குநர் உட்பட ) இருக்கவேண்டும்

ஒரு கவர்ச்சி நடனம், அரங்குக்கு
இழுத்துவரும்படியான கிட் பாடல்கள் வேண்டும்

இப்படி எத்தனையோ  "வேண்டும்கள் "
வேண்டும் என நாம் மூளைச் சலவைச்
செய்யப்பட்டு,

அதன் காரணமாகவே அதைப் போலப்
படங்களாகவே கொடுத்து நம்மை
கேவலப்படுத்திக் கொண்டிருந்த திரையுலகில்

இவை அனைத்தும் பொய் என நீரூபித்து
வெகு ஜனத்தின் ரசனையும் உயர்வானதே
என ஒரு படம் நிரூபித்திருக்கிறதென்றால்
நிச்சயம் அது காக்கா முட்டைத்
திரைப்படம்தான்

உலகத் தரமான படங்கள் தமிழில் இல்லை
அது வருவதற்கும் சாத்தியமில்லை என்று
பினாத்திக் கொண்டு கட்டுரைகள்
எழுதிக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள்
எல்லாம் அவசியம் பணம் கொடுத்து அரங்கில்
இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்

எப்படி கோடம்பாக்க ஸ்டுடியோக்களில்
அடைபட்டுக் கிடந்து மூச்சுத்
திணறிக் கொண்டிருந்தசினிமாவை
வெளி உலகுக்குக் கொண்டு வந்து
நிஜமான கிராமத்தையும் கிராம மக்களையும்
அவர்களது உணர்வுகளையும் பரிபூரணமாய்
காண்பித்து இயக்குர்நர் பாரதி ராஜா அவர்கள்
தமிழ் சினிமா உலகுக்குப் பெருமை சேர்த்தாரோ

அதைப்போலவே

இத்தனை ஆண்டு காலமும் இவையெல்லாம்
இருந்தால்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று
வியாபார வல்லூறுகள் ஏற்படுத்தி இருந்த
பிம்பத்தை சிதற அடித்த படம் எனில்
நிச்சயம் அது காக்கா முட்டைப் படம்தான்

இந்தப் படம் பெரும் பொருளாதார வெற்றீயே
தமிழ் திரை உலகின் வருங்காலப் போக்கை
முடிவு செய்யும் என்பதால்..

நல்ல சினிமா குறித்த எதிர்பார்ப்பு உள்ள
அனைவரும் அவசியம் இந்தத் திரைப்படத்தை
அரங்கில் கண்டு களிப்பதோடு

அதன் சிறப்புக் குறித்துப் பகிர்வோம்

மாறுதலுக்காக பல்வேறு தளங்களில்
பல்வேறு வகையில் முயன்று கொண்டிருக்கும்
சமூகத்தின்பால் ஆழமான பற்றுக்
கொண்டவர்களைப் போல

பதிவர்களாகிய நாமும் நல்ல விஷயங்களை
இதுபோல் உரக்கச் சொல்வதன் மூலம்
நமது சமூகக்கடமையை நிறைவேற்றி
 நாமும் மன மகிழ்வு கொள்வோம்

Sunday, June 14, 2015

காக்கா முட்டை- ஒரு தாமதமான விமர்சனம்

நாமிருக்கும் இடத்தில் அல்லது
நாம் புழங்கிக் கொண்டிருக்கும் இடத்தில்
நம் சூழலுக்கு
நம் பண்புக்கு
கலாச்சாரத்திற்குத்
தேவையில்லாத பொருள் ஒன்று
வியாபாரம் என்கிற பெயரில்
நம்மைக் கவரும்படியாக விரித்துவைக்கப் படுகிறது

அதன் விளம்பரக் கவர்ச்சியில்
அது இருக்கும் எட்டாத உயரத்தில் மயங்கி
நம் சக்திக்கு மீறி முயற்சியை மேற்கொண்டு
அதை அடைய  முயலுகையில்
நேரும் உதாசீனங்களையும் மீறி
நாம் அதனை அடைகிறோம்

அதை அடைந்ததும் தான்
எந்தச் சிறப்பும் இல்லாத
இதற்கா நாம் இவ்வளவு முயன்றோம்
என்னும் எண்ணம் நம்முள் தோன்ற
நாம் ஏமாற்றம் கொள்கிறோம்

படத்தை பீட்ஸாவுடன்  மட்டும் ஒப்பிடாமல்
இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் அனைத்துடனும்
ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் படத்தின் அருமை புரியும்

படத்தைத் தயாரித்துக் கொடுத்த
 இயக்குநர் வெற்றிமாறன்
மற்றும் நடிகர் சிம்பு மற்றும்
படத்தின் இயக்குநர் மணிகண்டன்
ஆகியோர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்  

Friday, June 12, 2015

முள்ளை முள்ளால் ( 4 )

இவன் கதையை இங்கு தொடர்ந்து
விலாவாரியாகச் சொல்லாமல் விரிவாகச்
சொல்வதன் காரணமே இதில்
ஏமாறுபவனின் பலவீனமும்
ஏமாற்றுபவனின் திறமையையும் புரிந்து
கொள்ளும்படியான சூட்சுமங்கள் இதில்
நிறைய இருக்கிறது

பொதுவாக பேங்க் வாசலில் பத்து ரூபாய்
நோட்டைக் கீழே போட்டுவிட்டு  அதிகம் பணம்
வைத்துள்ளவர்களிடம் அதைக் காட்டி
அவர் எடுக்க குனிகின்ற நேரம் கையில் பையில்
அவர்கள் வைத்துள்ள அதிகப் பணத்தை
பறித்துக் கொண்டு பறந்த கதைகளை
அடிக்கடி செய்தித் தாளில் பார்த்திருப்பீர்கள்

அதைப் போலத் தான்  ஏமாற்றுபவர்களும்
அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்கிற
சில தகவல்களை  அல்லது அவர்கள் முயன்று
சேகரித்த சில தகவல்களை
நம் முன்னே சிதறவிட்டு அதை நாம்
நம்பித் தொலைக்கிற வேலையில் சட்டென
நம்மைமுட்டாளாக்கி அவர்கள் காரியத்தைச்
சாதித்துக் கொள்கிறார்கள்

இந்த விஷயங்கள் தெரியாமல்தான் நாம்தான்
சட்டென சில முக்கியமான தகவல்களை
ஜாக்கிரதையாகக்கையாளாமல் சிந்த விட்டு விட்டு
அப்படிப்பட்டவர்களிடம்
எளிதாகச் சிக்கி கொள்கிறோம்

என் நண்பன் விஷயத்தில்

என் நண்பனும் இலாகா பொறியாளர்தான்
என்கிற சிறு தகவலையும்....

அவனுக்கும் கார்பரேஷன் எஞ்சினியருக்கும்
பழக்கமிருக்கிறது என்கிற தகவலையும்..

எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டு
நன்றாக விளையாடி இருக்கிறான்....

மறு நாள் நிச்சயம் வேலை நடந்திருக்காது
என்பதை நான் அவன் சொல்வதை வைத்தே
புரிந்து கொண்டேன்

இருப்பினும் அவன் மூலம் தெரிந்து கொள்வதே
மிகச் சரியாக இருக்கும் என நினைத்து மீண்டும்
அவனை " சொல்லுடா " எனத் தூண்டினேன்

அவன் சொல்லத் துவங்கினான்

"எனக்கும் அன்னைக்கு அதிகாரியுடன் ஸ்பாட்
இன்ஸ்பெக்ஸன் மாலை ரிவியூ மீட்டிங்னு
வேலை செம டைட்டா இருந்ததால இரவு
எட்டு மணிக்குத் தான் வீட்டுக்கு வந்தேன்

வரும்போதே மிகச் சரியாகப் பைப்பை
பொருத்தி இருப்பானா மண்போட்டு நிரப்பி
இருப்பானா வண்டியை ஏற்ற முடியுமான்னு
குழம்பிக்கிட்டே வந்தேன்

வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தா எதுவுமே
நடக்கவில்லை .வாசலும் தெருவும்
முன்னமாதிரியே இருந்தது.

அப்போது கூட எனக்கு அவன் மேல்
அவ நம்பிக்கை வரவில்லை.
கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில்
வேலை முடிஞ்சிருக்காது இங்கே நாளை
நடக்கலாம்னு நானா நினைச்சிக்கிட்டேன்

மறுநா காலையில  சீக்கிரம் எழுந்திருச்சி
தெருவோட கிழக்குக் கோடியும்
மேற்கும் கோடியும் பார்த்தபோதுதான்
லேசா சந்தேகம் தட்ட ஆரம்பிச்சது

காரணம் இரண்டு பக்கமும் ஏற்கெனவே
அடஞ்து போயிருந்த டிட்சைத் தோண்டி
அதுவரை வாய்க்கால் அடைப்பை எடுத்து
காலனியில் மேல் பகுதியல தேங்கி இருந்த
மழைத் தண்ணியை எல்லாம் முழுசும்
கடத்தி இருந்தாங்க

இதன்படிப் பார்த்தா இப்போ நம் பக்கம்
வாய்க்கால் தோண்ட வேண்டிய
அவசியமே இல்லை

பின்ன எப்படி அவன் சொன்னான் ?

நானும் எப்படி இதை நம்பினேன் ?

முதன் முதலா இப்படி முட்டாள்தனமா ஏமாந்ததை
நினைக்க நினைக்க மனசு ரொம்ப நொந்து போச்சு

எனக்கு ரூபாய் கூட பெருசா தெரியலை
திட்டம் போட்டு ஒருத்தன் என்னை இப்படி
முட்டாளாகிப் போனதை நினைக்க நினைக்க
ஒரு மாதிரியாகிப் போச்சு

அப்படி நான் நொந்து போய் வராண்டாவில்
அசந்து போய் சோபாவில் சாய்ந்திருக்கையில் தான்
வாசல் பக்கம் சார்னு யாரோ
கூப்பிடுகிற சத்தம் கேட்டுது

நிமிர்ந்து பாத்தா அடுத்தத் தெரு செட்டியார்
நின்றிருந்தார்

அவரிடம் பேசப் பேசத்தான் சும்மா கிடந்த
சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டிக் கதையா
இவரை அறியாமலேயே ஏமாற்ற
அவனுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருப்பது தெரிந்தது

நான் நொந்து போனேன் "" என்றான்


(தொடரும் ) 

முள்ளை முள்ளால் ( 3 )

என் நண்பனின் அன்றைய நிலையை
அவனிருந்த சூழலை அவன்
சொல்லிப் போவதை வைத்தே மிகத் தெளிவாக
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

வீட்டில் யாரும் இல்லாதது , அவனும்
அன்று லீவு எடுத்து இருக்க முடியாதிருந்தது
அன்றே வேலை நடக்க இருந்தது,
பள்ளம் தோண்டப்பட்டால் இரவுதான் அலுவலகம்
விட்டு வந்தால் வண்டியை
வீட்டில் ஏற்றமுடியாத நிலை...

இத்தனையும் ஒருசேர வந்தால் நிச்சயம்
ஏதாவது செய்தாகவேண்டுமே என வரும் பதட்டம்
யாராக இருந்தாலும் நிச்சயம் வரக் கூடியது
இயல்புதான் இல்லையா ?

முதலில் சொல்லத் துவங்குகையில்
என் நண்பனிடம்இருந்த கோபம் இப்போது இல்லை
கொஞ்சம் குறைந்திருந்தது

அதற்குக் காரணம் இத்தனை நாள்
இதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதலும்
இருக்கலாம் எனப் புரிந்து கொண்டேன்

பின் அவன் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்து
"அப்புறம் " என்றேன்

அவன் தொடர்ந்தான்

"நான்தான் என்னசெய்யலாங்கிற பதட்டத்தில
இருந்தேன்.அவன் ரொம்ப இயல்பாக இருந்தான்
அதுவே கூட எனக்கு அவன் பேரில் சந்தேகம்
வராததுக்குக் காரணமாயிருக்கலாம்னு
இப்போ நினக்கிறேன்

நான் அவங்கிட்டே வீட்டில் ஊருக்குப் போயிருக்கிற
விஷயத்தைச் சொல்லி நானும் இருக்கமுடியாத
நெலமையைச் சொல்லி என்ன செய்யலாம் என
அவங்கிட்டேயே கேட்டுத் தொலைச்சேன்

சார் நான் தான் இந்த வேலைக்குச் சப் -காண்டிராக்ட்
நீங்களும் எஞ்சினியர் அதுல எங்க எஞ்சினியருக்குத்
தெரிந்தவர் வேற.நீங்க ஏன் சார் பதறுறீங்க

உங்க வீட்டு வாசல் பத்து மீட்டர் வரும் சார்
இரண்டடி உள்கூடு பைப் நாலும் மூணு காலரும்
வாங்கிக் கொடுத்துப் போங்க சார்
நான் கையோட பதிச்சு வைக்கிறேன்

அதுக்கான கூலியை மட்டும்
நாளைக்குக் கொடுங்க சார்னு போதும்னு
சொன்னான்

அவன் காசு கேட்காம சாமான் வாங்கிக்
கொடுங்க சார்னுசொன்னதுமே அவன்
உண்மையாகவே காண்டிராக்ட்காரன்
ஏமாத்துப் பேர்வழி இல்லைங்கிற ஒரு
அசட்டு முடிவுக்குநான் வந்துட்டேன்

சரி பைப் விலை என்னவரும்னேன்

சார் ஒரு பைப் காலரோட இரண்டாயிரத்து ஐநூறு
வரும் சார் அப்புறம் ஏத்துக் கூலி இறக்குக் கூலி
ஒரு ஐநூறு வரும் சார்.ஆக மொத்தம்
லேபர் கூலியோட ஒரு பன்னிரண்டாயிரம் வரும் சார்

அடுத்த தெருச் செட்டியாரு கூட எங்கிட்டதான் சார்
பைப் வாங்கச் சொல்லி காசு கொடுத்திருக்கார்
வேண்டுமானா சொல்லுங்க அந்தக் கடையிலேயே
இருந்து இறக்கச் சொல்றேன்.
பாதிக் காசு கொடுத்துப் போங்க
மீதியையும் கூலியையும் கூட நாளைக்குக்
கொடுங்க சார்னு சொன்னான்

எனக்கு அடுத்தத் தெரு செட்டியாரைப் பத்தித் தெரியும்
படு கெட்டி.அவரே நம்பி கொடுத்திருக்கார்னா
நம்ம சந்தேகப் படவேண்டியதில்லைன்னு
முடிவுக்கு வந்துஅதுலேயும் ரொம்பப் சுதாரிப்பா
இருக்கறதா நினைச்சுஉள்ளேயிருந்து
ஒரு ஆறாயிரத்தை மட்டும்எடுத்துக் கொடுத்திட்டு
மீதியை நாளைக்கு வேலை முடிஞ்சதும்
தர்றேன்னு சொன்னேன்

அவனும் பெருந்தன்மையா உங்க கிட்ட இருந்தா
பேங்கில கிடக்கிறமாதிரின்னு சொல்லிப்புட்டு
நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க சார்னு
சொல்லிப்புட்டு கிளம்பிப் போயிட்டான்

அவன் போனவுடனேதான் அவன் செல் நம்பரை
வாங்கித் தொலைச்சிருக்கலாமே ,வேலை
நடக்குதாங்கிற விஷயத்தை மதியம் கூட
கேட்டுத் தொலைக்கலாமேன்னு நினைச்சேனே தவிர
அப்பக் கூட அவன் மேல லேசாகக் கூட
சந்தேகம் வரல"ன்னு சொல்லி நிறுத்தினான்

இப்போது எனக்கு ஓரளவு ஏமாந்த கதையும்
ஏமாந்த தொகையும் தெரிந்து போனதால்
கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து போனது

ஆனாலும் ஏமாந்தது எப்படித் தெரிந்தது
எனத் தெரிந்தால்தானே கதை முழுமையடையும்
என்கிற எண்ணம் லேசாக கிளம்ப
"அது சரி அவன் ஏமாத்தினாங்கிற எப்படித் தெரிஞ்சது
என்னக்குத் தெரிஞ்சது " என்றேன்

"அதையேன் கேட்கிற " என முதலில்
மெல்ல முனங்கியவன்
பின் சரளமாய்ச் சொல்லத் துவங்கினான்

(தொடரும் )

Thursday, June 11, 2015

முள்ளை முள்ளால் ( 2 )

நண்பன் சொல்லப் போகிற ஏமாந்த கதை
சுவாரஸ்யமாக மட்டுமல்லாது கூர்ந்து
கவனிக்கத் தக்கதாயும் இருக்கும் என்பதால்
அருகில் இருந்த டீக்கடை பெஞ்சில்
அமர வைத்துப்பின்...

 " ம்.. இப்போ சொல்றா " என அடியெடுத்துக்
கொடுத்தேன் நண்பன் சொல்லத் துவங்கினான்

"இது நடந்து ஆறு மாசங்கள் ஆகி இருந்தாலும்
ஒவ்வொரு அசைவும் மிகத் தெளிவா
நினைவில் இருக்கு

அன்னைக்கு  ஒரு திங்கட்கிழமை.
மீனாட்சியும் ஊர்ல இல்லை
சொந்தக்காரங்க கல்யாணம்னு
குழந்தைகளோட மாமியார் ஊர் போயிருந்தா

அன்னைகுன்னு எனக்கு மேல் அதிகாரிங்க
இன்ஸ்பெக்ஸனுக்கு வருவதாக இருந்ததால
நானும் காலையிலஎட்டு மணிக்கே
குளிச்சு  முடிச்சு  ஆபீஸ் போக
தயாராகிக்கிட்டிருந்தேன்

அப்போ வாசலில் ஏதோ பைக் நிற்கிற மாதிரித்
தெரியவே சட்டையை மாட்டிக்கிட்டு
வாசலுக்கு வந்தேன்

இந்த படுபாவிப் பய பைக்கை ஓரம்
நிறுத்திவிட்டுஎன் வீட்டு வாசலில்
வந்து நின்றான்

நீ இப்போ சொன்னயே அதே நிலைதான்
எனக்கும்  அன்னைக்கு

அவனை இதற்கு முன்பு
எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது
ஆனா எங்கே எப்போ எனத் தான் தெரியல

ஆனோ அவனோ என்ன ரொம்பத் தெரிஞ்ச மாதிரி
என்ன சார் ஆபீஸ் கிளம்பிட்டீங்களா
உங்களுக்குத் தகவல் தெரியும்தானே
நேத்தே சொல்லி இருப்பாங்களேன்னான்

என்ன தகவல் யார் சொல்லி இருப்பாங்களேன்னு
நான் அந்த நினைப்புபுல போக......

அவன் "சார் நேத்து கார்பரேசன் எஞ்சினியர்
இன்ஸ்பெக்ஷன் வந்தார் சார்.
உங்க வீடு பூட்டி இருந்தது
உங்களைக் கேட்டார் சார்  அப்படின்னான்

எனக்கும் எஞ்னியரைத் தெரியும் என்பதால்
ஒருவேளை கேட்டிருக்கலாம்
என யூகித்துக் கொண்டேன்

பின் அவனே சொன்னான் அங்கே பாருங்க
உங்க மெயின் தெரு போய்ச் சேருகிற
கிழக்காவும் மேற்காகவும் இரண்டு பொக்லைன்
வேலைக்கு வந்து ரெடியா நிக்குது .

முந்தா நாள் மழையிலே
ரோட்டுக்கு மேற்கால தண்ணி ரொம்பத் தேங்கிக்
கிடக்குதுன்னு கமிஷனர்கிட்டே ஏரியாக்கார்ங்க
எல்லோரும் ரிபோர்ட் பண்ண அவர்
இன்ஸ்பெக்ஸன் வந்து உடனே உங்க வீட்டு
ரோடு சைடுலநெடுக வாய்க்கால் தோண்டி
தண்ணிய கடத்தச் சொல்லிட்டார்

இப்பத் தோண்டஆரம்பிச்சுடுவாங்க
அப்படித் தோண்டினா உங்க வீட்டு வாசல்ல
கார் ஏறப் போட்டிருக்கிற ஸ்லோப்பை
எடுக்கவேண்டி இருக்கும்.அதைத்தான்
சொல்லி உங்களை  சிமெண்ட் பைப் எதுவும்
வாங்கிக் கொடுத்தால் கையோட  பதிச்சு
மூடிடலாம்னு எஞ்சினியர் சொல்ல வந்தார்
நீங்க இல்ல எனச் சொல்லி நிறுத்தினான்

எனக்கு அது அதிர்ச்சியான தகவலாக இருந்தது

உனக்குத்தான் தெரியுமே.என் வீட்டித் தெருவில்
நாலு வீடு தவிர வேறு வீடு இல்லை
நியாயப்படி என் வீட்டுப் பக்கம் வெட்டிவிட்டு
வாய்க்கால் கட்டினால்தான் சரியாகவும் வரும்

ஆனால் இந்த கார்ப்பரேஷன்காரன் தோண்டினா
அவன் வாய்க்கால் கட்டி முடிக்க
மூணுமாசமாவது ஆக்குவான்.
அதுவரை வண்டியை எங்கே நிறுத்துவது ?

கையோட மட்டம் பார்த்து பைப்பை
பதித்துவிட்டால் பிரச்சனையில்லை.

ஆனால் நிச்சயமாக இன்று வீட்டில் இருந்து
இதைப் பார்க்கவோ பைப் வாங்க்கிக் கொடுக்கவோ
என்னால் முடியாது

நான் குழப்பத்தில் சிக்கித் தவித்தேன்

நாம குழம்ப ஆரம்பிச்சாலே ஏமாறத்
தயாராகிட்டோன்னுதானே அர்த்தம்

ஏமாத்த நினைக்கிறவனுக்கும் அந்தக் குழப்பம்
தானே நல்ல லீட் இல்லையா ? " என்றான்

( தொடரும் )

Monday, June 8, 2015

முள்ளை முள்ளால் ( 1 )

" நான் பலமுறை பல விதமா பலரால
ஏமாத்தப்ப்பட்டிருக்கேன். இத்தனைக்கும்
எனக்கு கெட்டிக்காரனூன்னு வேற ஊர்ல பேரு
ஆனா இவங்கிட்ட  ஏமாந்தது மா திரி
எவங்கிட்டெயும் ஏமாறலை.

அதோ முதுகு தெரிகிறார்ப்பல நிக்கிறவனை
நல்லாப்  பார்த்துக்கோ.
பின்னால் விவரம் சொல்றேன் "என்றான் நண்பன்

நான் அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்க்க
சுமார் முப்பது வயது மதிக்கத் தக்க
ஒருவன் இருந்தான்

அவனது நடை உடை பாவனைகளை நான்
அனுமானித்தவரையில் எனக்கு
இவன் குறிப்பிடுவது போல
ஏமாற்றுக்காரனாகத் தெரியவில்லை

ஏதோ படித்தவன் நல்ல வேலையில் உள்ளவன்
போலத்தான் தெரிந்தான்.

அதே சமயம் எனக்குப் புதியவனாகவும்
தெரியவில்லை
எங்கள் பகுதியிலேயே அதிகம் பார்த்த ஞாபகம்
இருக்கிறது. ஆனால் எங்கு  எப்போது என்பது
எப்படி முயன்றும் நினைவுக்கு வரவில்லை

நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அவனுடன் பேசிக் கொண்டிருந்தவர்
பர்ஸை எடுத்துபணத்தை எண்ணிக்
கொடுத்துக் கொண்டிருந்தார்

அவன் அதை மிக மரியாதையாக வாங்கி
பேண்ட் பாக்கெட்டில் வைத்தபடி
"அவசியம் சாயந்திரம் கடைக்கு வருகிறேன் "
எனச் சொல்லியபடிஅருகில் சாய்த்து
நிறுத்தி இருந்த பைக்கை ஸ்டாட் செய்து
எடுத்துக் கொண்டு கிளம்பினான்

" நான் இவனை அடிக்கடி பார்த்த ஞாபகம்
 இருக்கு அடுத்த முறைப் பார்த்தால்
அவசியம் அடையாளம் கண்டுபிடிச்சிடுவேன்
.சரி இப்போ சொல்லு இவன் எப்படி
உன்னை ஏமாத்தினான். எங்கு ஏமாத்தினான்  "
என்றேன்

"அதை அப்புறம் பார்ப்போம்.முதல்ல
பணம் எடுத்துக்கொடுத்தவரை
கொஞ்சம் விசாரிப்போம்
ஒருவேளை அவருக்குத் தெரிந்தவராக
இருக்கலாம் இல்ல

தெரிந்தவராக இருந்தால் நல்லதாப் போச்சு
அவனை அவனிடத்தில வச்சே பிடிச்சிடலாம் "
என்றான்

எனக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது

பணம் கொடுத்த பெரியவரை அணுகி
நான்தான் பேச்சைத் துவங்கினேன்

" ஐயா இப்போது போகிற பையன் என்
உறவுக்காரப் பையன் போலத் தெரியறான்.
சரியாக யார் எவர் என சட்டென அடையாளம்
தெரியலை.கூப்பிட்டுக் கேட்கலாம்னு
 நினைப்பதற்குள்ளவண்டியை எடுத்து  போயிட்டான்
நமக்குத் தெரிந்த பையன் தானுங்களா ?
 நம் ஏரியா தானா ? என்றேன்

அவர் என்னையும் என் நண்பனையும்
ஏதோ பார்வையாலேயே அனைத்தையும்
கணித்துவிடுகிறவர்போல கொஞ்சம்
ஏற இறங்கப் பார்த்துவிட்டு

" நம் நகரைச் சேர்ந்தவனாகத்தான்
 இருப்பான்போல இருக்கிறது.
எல்லாம் சரியாகச் சொல்றான்  "

"அப்படியா நீங்கள் ஏதோ ரூபாய் கூட
கொடுத்தீங்க  போலத் தெரிஞ்சது .
எதுவும் வியாபாரம் செய்கிறானா ? " என்றேன்

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை தம்பி.நமக்கு
எட்டத்து உறவாய் இருப்பான் போல இருக்கு
எல்லோரையும் சரியாச் சொல்றான், பாவம்
ஸ்கூலுக்கு பையனுக்கு பணம் கட்ட
 வந்திருக்கிறான்

இரு நூறு குறைவாக இருந்திருக்கு
பண மிஷினில் எடுக்கப் போயிருக்கிறான்
அதில் பணமில்லையாம்.

அந்தச் சனியன் அடிக்கடிஅப்படித்தானே பண்ணுது.
ஒரு இரு நூறு இருந்தால்கேட்டான்.கொடுத்தேன்.
என் கடை அவனுக்குதெரிந்திருக்கிறது.
சாயந்திரம் வந்து தருவதாகச்
சொல்லிப் போறான் ". என்றான்

"அவன் பெயர்  தெரு ஏதாவது தெரியுங்களா "
என்றேன்

"கேட்கலையே தம்பி அதுதான் சாய்ந்திரம்
வரப்போறானேஅது எதுக்குன்னு கேட்கலைத் தம்பி
வேண்டுமானா சாய்ந்திரம் வரும்போது கேட்டு
வைக்கிறேன்.என் கடை அந்த லெட்சுமி
ரைஸ் மில்லுக்குஒட்டின கடைதான்.
அவசியம்னா வந்து தெரிஞ்சுக்கங்க "

"சரிங்க பெரியவரே சாய்ந்திரம் வந்தா
விசாரித்து வைங்கநாளைக்கு வர்றோம் "
என்றபடி என நண்பன் என் கையை
வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு கொஞ்சம்
தள்ளி வந்து....

"பெருசுக்கிட்ட இன்னைக்கு போணி
பண்ணிட்டான். நமக்காக இல்லையென்னாலும்
அடுத்து இப்படி நடக்கக் கூடாது.அதுக்காகவாவது
அவன் வீட்டைச் சரியா கண்டுபிடிச்சு
கைய கால உடைச்சு கேவலப் படுத்தனும் "
என்றான் படு கோபத்துடன்

" இப்படி கோபப் படுகிற அளவுக்கு என்னடா
பண்ணினான் ? எப்படி உன்னை ஏமாத்தினான் "
என்றேன்

அவன் சொல்லத் துவங்கினான்

(தொடரும்  )

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்.......

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

புராண காலங்களில்
மன்னர் பரம்பரைகளில்
வ்ம்சமற்றுப் போகையில்
மன்னர்களைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு
பட்டத்து யானைகள்
ஒரு வரப் பிரசாதமாகவே
இருந்திருக்கின்றன

எனவே ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

யானைகளில் ஜாதி உண்டுதான்
ஆயினும் அவைகளுக்கு
ஜாதி பார்க்கத் தெரியாது
யானைகளுக்கும் மதம் பிடிக்கும்தான்
ஆனால நம் மதம் பற்றித் தெரியாது
தனியாக அதனிடம்மாட்டினால்
மாட்டியவர்கள் பிரியாணிதான்
ஆனால் அது சைவம்தான்

ஆகையால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

அதனைப் பராமரிக்க
அதிகம் செலவில்லை
தேர்தல் காலங்களில் ஒரு நாளின் செலவு
அதற்கு ஓராண்டுக்குப் போதும்
தேர்தல் பணியாளர்கள் பாதுகாப்புப் பணி
எல்லாவற்றையும் கூட்டிப் பார்க்க
செலவே இல்லாதது போலத்தான்

அதனால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

அதனிடம் உள்ள பெரும் நிறை
எடை மட்டுமல்ல
நம்மைப் போல தலைவர்களைத் தேடி
அந்தப் புறங்களிலும்
தர்பார் மண்டபங்களிலும்
தலைவர்களின் ரகசிய வீடுகளிலும் அலையாது
மாட வீதிகளிலும்
மக்கள் கூடும் இடங்களிலேயேதான்
மாலையோடு தேடித் திரியும்

அதற்காகவாவது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

ஒரே ஒரு குறை
அதற்கு ஐந்தறிவு
நமக்கு ஆறு
அறிவு இருந்து பயன்படுத்தாதற்கும்
அது இல்லாமல் இருப்பதற்கும் கூட
அதிக வித்தியாசமில்லை
என்வே அது கூடஒரு குறையில்லை

இதை உணர்ந்தாவது
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்

ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

இலவச பிச்சை
மாறி மாறிக் கூட்டணி
ஜாதி வெறித் தூண்டல்
பரஸ்பர சாக்கடைச் சேறு வீச்சு
சவால் சவுடால் பேச்சு
இத்தனை சனியன்களையும்
ஒட்டுமொத்தமாய் ஒழித்துத் தொலைக்கவாவது
நாம் நிம்மதியாய் இருந்து தொலைக்கவாவது

இனி வரும் காலங்களிலேனும்
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை 
வளர்க்கத் துவங்குவோமா ?

Saturday, June 6, 2015

முடிவின் விளிம்பில்

 குழப்பம் என்னுள் சூறாவளியாய்
சுழன்றடிக்கிறது
நான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்?
இருக்கிறேன் என்பது சரியா?
அல்லது
கிடக்கிறேன் என்பது சரியா?
அல்லது
இறக்கிறேன் என்பதுதான் சரியா?

ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை
முழுவதும் இழந்து போனதால்
கால உணர்வு அற்றுப்போனதா?
கால உண்ர்வு அற்றுப்போனதால்
அனைத்தையும் இழந்து போனேனா?

தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
விடையற்ற கேள்விகளை புறம்தள்ளி
விழிகளைத் திறக்க முயல்கிறேன்

இருப்பிடம் தெரியாது இருந்த
இமைகள் இரண்டும்
சிதிலமடைந்த அரண்மனையின் 

புறவாயில்கள்போல்
கனத்து கிறீச்சிடுகின்றன
பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறல்களே பரவிச் சிரிக்கின்றன
பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?

எரிமலையாய் என்னுள்
மரணபயம் வெடித்துச்சிதற
அதன் அக்கினிக்குழம்புகள்
என் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய
என் சக்தியனைத்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்


மலைச்சரிவினில் உருண்டுவரும் பெரும்பாறைபோல்
ஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு
என் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது
நான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா?

தன் முகத்தையே
என் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்
முட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி
முப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்
காந்த அலையாய் பரவித் தெறிக்கிறது
விழிமூடும் முன் ஒருமுறையேனும்
அவளை த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்
என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன
எரிகின்ற வீட்டின்முன்
செயலற்றுக் கதறுபவர்கள்போல்
யார் யாரோ கூக்குரலிட்டு அழுவது
மிக லேசாய் கேட்கிறது
நான்தான் எரிந்துகொண்டிருக்கிறேனா?

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல
இத்துணை  அவஸ்தைகளுக்கும் மத்தியில்
இவைகளுக்கெல்லாம்

 தொடர்பே இல்லாததுபோல்
தென்றலின் குளுமை அடிவயிற்றை நிறைக்க
நாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல
சிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலங்களோடு

 தங்கத்தின் தகதகக்கும் ஜொலிப்போடு
ஒரு ஒளிக்கொத்து
லேசாக மிக லேசாக
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது

அந்த ஒளிக்
கொத்தின் மாயாஜாலத்தில்
என்னுள் பேயாட்டம் போட்ட
அத்துணை வலிகளும்
அத்துணை துயர்களும்
ஒளிகண்டு ஓடும் இருள் போல
எங்கோ ஓடி மறைகிறது

அந்தக் கருணை ஒளி
முகம் நோக்கி ஈரடியாய்
பின்னோக்கி ஓரடியாய்
தொடர்ந்து மெல்ல நகர
அது கடந்த வழியெல்லாம் சில்லிட்டுப்போக
அது நடக்கும் வழியெல்லாம் பரவசம்  பரந்து விரிய
நானே பாதி உடலாகவும்
நானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்

இனி எப்போதுமே திரும்பமுடியாத உலகுக்கும்
இனி போய்ச் சேரவேண்டிய வெட்டவெளிக்கும்
இடையிலான லட்சுமணக்கோட்டில்
என் உயிர்மூச்சு ஊசலாடிக்கொண்டிருக்கிறது
இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினிில்
செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி
"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்
கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது

தொப்புள்கொடி அறுபட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?
காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?
காலவெளியில் காலத்துளி

 மீண்டும் இணைதல்தான் காலமாதலா?

காலத்தாயை அடைகிற வெறியில்
உயிர்த்துளி என்னை விலக்கிப் பறக்கிறது
நான் பிணமாகிறேன்
அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது



(மரண அவஸ்தையை  ,அந்த நொடியைச் சொல்ல 
ஒரு சிறு முயற்சி  )

Friday, June 5, 2015

நெத்தியடி

காங்கிரஸ்  கொடிக்கும்
இந்திய அரசின் கொடிக்கும்
மிகச் சரியாகக் கவனித்தால் மட்டுமே
புரியக் கூடிய சிறு வித்தியாசம் போல

ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும்
ஒரு சிறு வித்தியாசம் உண்டு

அது மிகச் சரியாகப் புரியாததால்தான்
நாத்திகவாதிகளின் சதிராட்டமும்
ஆத்திகவாதிகளின் கொண்டாட்டமும்
இவ்வுலகில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது

இதை சீர் செய்ய
மதவாதிகளும் விரும்பமாட்டார்கள்
நாத்திக வாதிகளும் விரும்பமாட்டார்கள்

காரணம்
இதனைச் சீர் செய்தால்
இருவர் பிழைப்பும் நாசமாகிப் போய்விடும் என்பது
அவர்கள் இருவருக்கும் தெரியும்

இதனைப் புரியாது
என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே
நாம் தான் இரண்டையும்
போஷித்துக் கொண்டிருக்கிறோம்
நாம்தான்  நாசமாகிக் கொண்டும் இருக்கிறோம் 

Thursday, June 4, 2015

இருண்மை

எழுதுதலை கொஞ்சம்
நிறுத்தி இருந்தான் நண்பன்
காரணம்கேட்டேன்

"புரியாததை
புரியாதபடியே
படிப்பவர்களும்
புரிந்து கொள்ளாதபடியே
மறை பொருளாய் எழுதினேன்
பலர் முகம் திருப்பிப் போனார்கள்

மாறுதலாக
புரிந்ததை
புரிந்து கொண்டபடி
படிப்பவர்களும் புரிந்து கொள்ளுபடி
தெளிவாக எழுதிப் போனேன்
பலரும் பாராதே போனார்கள்
அதுதான் எழுதுவதில்லை "என்றான்

நான் சிரித்துக் கொண்டேன்

"பட்டப் பகலும்
நடு நிசியும்
அதிகம் போற்றப்படுவதில்லை
பாடப்படுவதும் இல்லை
பட்டப் பகலில் எல்லாமே தெளிவாகத் தெரியும்
அதில் சொல்ல என்ன இருக்கிறது

நடு நிசியில் எதுவுவேதெளிவாகத் தெரியாது
அதில் சொல்ல என்ன இருக்கிறது

விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
அப்படி முயற்சி செய்

அம்மணம் நிச்சய ம்  ஆபாசம்
முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை
ஒளிவு மறைவே பேரழகு என்றேன்

புரிந்தது போலவும்
புரியாதது போலவும்
தலையாட்டிப் போனான் அவன்

என்ன புரிந்து கொண்டான்  என்பது
அடுத்த கவிதையில் தான் தெரியும் 

பாலபாடம்

 தொழுகைச் சப்தம் கேட்டு
பஷீர் வீடு வரும் அல்லா
எதிர்வீட்டு
ஜேம்ஸ்ஸின் வேண்டுதலை
ஏன் கண்டுகொள்வதில்லை ?

பிரார்த்தனைக்கு உருகி
ஜேம்ஸ் வீடு வரும் ஏசு
தவறியும்
ஏன் பஷீரைப் பார்ப்பதேயில்லை ?

பஜனைக்கு உருகி
பழனியைப் பார்க்க வரும் பார்த்தன்
பஷீரையோ ஜேம்ஸையோ
ஏன் சட்டைசெய்வதே இல்லை

இறைவனும்
கட்சித் தலைவன் போல்தானா ?

மாற்றுக் கட்சியினர் மனோபாவம்
வாலறிவனுக்கு எதற்கு ?

குழப்பச் சகதியில்
புரண்டுக் கிடந்தேன் நான்

என்னைக் கண்டு சிரித்த நண்பன்

"யானையைக் கூடையில் அடைக்கவும்
கோழியைச் சங்கிலியில் கட்டவும்
முயலுகிற மூடனாகிப் போனாய் நீ

நாசியால் கேட்கவும்
காதால் நுகரவும் எத்தனிக்கும்
கோட்டியாகிப் போனாய் நீ

அறிவுக்கும் நம்பிக்கைக்கும் என்றும்
ஏழாம் பொருத்தமே

அறிவு சாதிக்காததை
நம்பிக்கை சாதிக்கும்

அறிவு நம்பிக்கையை என்றும்
வம்புக்கே இழுக்கும்

பாலபாடம் இது
புரிந்தால் மட்டுமே
முன்னதற்கு விளக்கம் கிடைக்கும்

இல்லையெனில் குழப்பமே
கூடுதலாகிப் போகும்

இது நம்பிக்கை குறித்த விஷயம்
ஆராச்சிக்குரியதில்லை"என்றான்

பாலபாடம் கற்கத் துவங்குகிறேன் நான்

Wednesday, June 3, 2015

நாமும் கவிமன்னர்கள்தான்...

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே

Tuesday, June 2, 2015

ஸ்பான்ஸர் ( 4 )

ஹரி நேரடியாகவே விஷயத்திற்கு வந்தது
எனக்கு வசதியாய்ப் போயிற்று

"மாமா இங்கு உங்கள் வீட்டிற்கு முன்
விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும்
நல்லபடியாக வேலையில் செட்டில்
ஆகிவிட்டோம். நான் உட்பட பத்து பேர்
வெளி நாட்டிலும் ஐந்து பேர் வடக்கிலும்
இரண்டுபேர் மட்டும் தமிழ் நாட்டிலும்..

நான் பத்து வருடங்களுக்குப்  பின்பு
நான் ஊர் வருவதால் ஒரு கெட்-டுகெதருக்கு
ஏற்பாடு செய்யாலாமெனப் க்ரூப்பில்
பேசிக் கொண்டிருந்தபோது..
எல்லோரும் நல்லவிதமாகப் படித்ததும்
அதிர்ஷ்டம் இருந்ததும் காரணமாக
இருந்த போதிலும் அதையும் தாண்டி
நாங்கள் எல்லோருமே நல்ல விதமாகச்
செட்டில் ஆனதற்கு நாங்கள் (வேறு வேறு
பள்ளிக் கல்லூரிகளில் படித்தாலும்) தொடர்ந்து
பள்ளிக் கல்லூரி நாட்களில் தொடர்பில்
இருந்தததுதான் காரணம் என
எல்லோருக்கும்பட்டது

அதற்கு இந்த விளையாட்டுத் தான் காரணம்
எனப் பட்டது.

எனது மாமா ஒருமுறை வெளி நாட்டில்
இருந்து வந்தபோது " வாடா எங்கள் கல்லூரி வரை
போய் வருவோம் " என என்னை அழைத்துக் கொண்டு
தியாகராயர் கல்லூரி வரை அழைத்துப் போனார்

அங்கு கல்லூரியின் மெயின் சாலையில்
லைப்ரரிக்கு முன் இருந்த ஆலமரத்தடையில்
வெகு நேரம் உட்கார்ந்திருந்து பெருமூச்சுவிட்டார்

பின்"கல்லூரிக்கு முன் வருபவர்கள்
அடுத்தவர்களுக்காகஇங்குதான்அமர்ந்திருப்போம்.
கல்லூரி முடிந்து முன்னால்
வந்தவர்கள் அடுத்து வருபவர்களுக்காகவும்
இங்குதான் தினம் அமர்ந்திருப்போம்.பாடம்
கல்லூரி,வாத்தியார் குறித்து மட்டும் இல்லை
எங்கள் எதிர்காலம் குறித்த அக்கறையான பேச்சுக்களும்
இந்த ஆலமரத்தின் அடியில்தான் அதிகம் நடக்கும்

எங்களில் யார் எப்போது மதுரை வந்து போனாலும்
நிச்சயமாக இந்த ஆலமரத்தடியில் வந்து அமர்ந்துதான்
போவோம்.அது அத்தனை மன நிறைவைத் தரும்"
என்றார்

அப்போது எனக்கு அந்த அருமை புரியவில்லை

இப்போது அதுபோல் நினைத்துப் பார்க்கையில்
எங்கள் எல்லோருக்குமே ஒன்று சொன்னார்ப்போல
உங்களையும்உங்கள் வீட்டின் முன் உள்ள
தெருவையும் தான் நினைக்கத் தோன்றியது

மிகக் குறிப்பாக உங்களைத்தான் நினைத்தோம்

உங்களுக்குத்தான் தெரியுமே ...

விளையாட்டுக்கு ஸ்பான்ஸர் செய்பவர்கள்
எல்லோரும் தம் கம்பெனி விளம்பரம் தொடர்ந்து
இரசிகர்களின் கண்ணில் படவேண்டும் என்பதற்காக
எந்த இடத்திற்கு அதிகம் கேமரா செல்லுமோ
அந்த இடத்திற்கு கூடுதலாக எவ்வளவு தரவும்
தயாராக இருப்பார்கள்

விளையாட்டுக்கு ஏற்பாடு செய்பவர்களும்
அதைப் பொருத்தே அந்த இடத்திற்கான
ஸ்பான்ஸர் தொகையையும் முடிவு செய்வார்கள்

இரண்டுமே வியாபாரம்தான்

அந்த வகையில் பார்க்கையில் எங்களிடம்
எந்த வித பிரதி உபகாரமும் எதிர்பாராமல்
ஒரு நாள் போல நீர் எடுத்து வைத்ததும்..

அந்த இரப்பர் பந்தின் விலை என்னவோ
அப்போது இரண்டு ரூபாய்தான் இருக்கும்
அதையும் பொறுப்பாக சிறு பிள்ளைகள்போல
வாங்கி வைத்திருந்து தேவைப்படுகையில்
தாமதமின்றி எடுத்துக் கொடுத்ததும்...

இப்போது நினைத்தாலும் எங்களுக்கெல்லாம்
நிச்சயம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

உங்களுக்கு வேண்டுமானால் அது சாதாரண
விசயமாக இருக்கலாம்.எங்களுக்கு அப்படியில்லை

அந்த வயதில் நாங்கள் டைவர்ட் ஆகாமல்
இருந்ததற்கும் எங்களுக்குள் பல காங்கிரீட் ஆன
விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும்
இந்த விளையாட்டுத்தான் காரணமாக இருந்தது

அதற்கு நீங்க்கள்தான் காரணமாக இருந்தீர்கள்

ஸ்பான்ஸர் என்பதற்கு கோடிக் கோடியாகத்தான்
இருக்கவேண்டும் என்பதில்லை " எனச் சொல்லி
ஸோபாவுக்கு அருகில் இருந்த பார்சலை எடுத்து
"எங்கள் சிறு அன்புக் காணிக்கை "
எனச் சொல்லிக் கொடுத்தான்

கொடுக்கையில் அவன் கண்கள் லேசாக
கலங்கி இருந்தது

எனக்கும் இந்தச் சின்ன விஷயத்தில் இத்தனை
இருக்குதே  என மலைப்பு வந்தது

அதே சமயம் இந்த நேரம் புதிதாக நான்
வீடுகட்டிக் குடியேறியுள்ள பகுதியில்
அருகில் உள்ள பொட்டலில் விளையாடும்
இளைஞர்கள் வந்திருக்கக் கூடுமே அவர்கள்
கிரிகெட் பேட்டும் ஸ்டம்பும் நம் வீட்டில் தானே
இருக்கிறது, மனைவி வேறு வெளியில்
போகவேண்டும் எனச் சொன்னாளே என்று
நினைவு வர அவனுக்கு
மனமார்ந்த நன்றியைக் கூறி வேகமாக
வீடு நோக்கி நடக்கத் துவங்கினேன்