Sunday, February 28, 2016

மரமும் மனிதனும்

ஜடமாக உபயோகமற்று
 நிற்கும் மனிதனை
மரத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

அந்த ஒப்பீடு
மனிதனுக்கு வேண்டுமானால்
பெருமை சேர்ப்பதாக இருக்கலாம்.

ஆயினும் அது
மரத்தினை இழிவுபடுத்துவதாகவே அமையும்

மனிதனின் கழிவுகளைக் கூட
மனிதனுக்கான்
உயிர்காக்கும் உணவாக்கும் சூட்சுமம்
மரங்களுக்கு மட்டுமே தெரியும்

கிடைக்கிறவைகளை யெல்லாம்
உண்டு அனுபவித்துச் சுகித்து
கழிவுகளை  விருத்தி செய்யவே
மனித உடலுக்குத் தெரியும்

நீரிட்டு வளர்த்தவனைக் கண்டு
பூவாகிச் சிரிக்கவும்
கனியாகக் கொடுத்து இரசிக்கவும்
உயிருள்ள மரங்களுக்குத் தெரியும்.

படைத்துக் காத்தவர்களையே
மறக்கவும் இகழவும்
ஒதுக்கிவைத்து  வாழவுமே
ஆற்றவு மனிதனுக்குத் தெரியும்.

வெட்டுப்பட்டால்   கூட
நிலையாகி,சிலையாகி

பட்டுவிட்டால் கூட
விறகாகி உரமாகி

தன் வாழ்வினை
அர்த்தப்படுத்தும் வல்லமை
புனித மரங்களுக்கு உண்டு

இறந்த பின்பும் கூட
எதற்கும் பயனற்று
சகிக்கவொண்ணாப்  பொருளாகி
 தன் இருப்பை
சுமையெனச் செய்யும் வல்லமை
மனித உடலுக்குமட்டுமே உண்டு

இனிமேல் தயவுசெய்து
விளையாட்டாகக் கூட
ஜடமாக நிற்கும் மனிதனை
மரங்களோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

ஏனெனில்
அந்த ஒப்பீடு
மனிதனுக்கு வேண்டுமானால்
பெருமை சேர்ப்பதாக இருக்கலாம்.

11 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான பதிவு ஐயா.

கீதமஞ்சரி said...

மிகச்சரியான கருத்து. பாராட்டுகள் ரமணி சார். மனிதனோடு மரத்தை ஒப்பிடும் இந்த விஷயத்தில் வள்ளுவரோடும் எனக்கு பிணக்குதான்.

KILLERGEE Devakottai said...

சவுக்கடியான கருத்துகள் கவிஞரே அருமை
தமிழ் மணம் 2

மீரா செல்வக்குமார் said...

ஒரு கவிதை நினைவுக்கு வந்தது..

"மரங்கள்
தங்களுக்குள்
பேசிக்கொண்டன
எங்களிலிருந்து
சிலுவை தயாரிக்கும்
உங்களுக்கு
உங்களிலிருந்து
ஏசுவை
ஏன்
தயாரிக்க
முடியவில்லை."

Unknown said...

அருமையான கருத்து! ஒப்பீடு உள்ளத்தைத் தொட்டது!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை. பாவம் மரங்கள்....

வைசாலி செல்வம் said...

அருமையான கவிதையில் மரத்தையும் மனிதனையும் ஒப்பிட்ட ஒரு பதிவு ஐயா.அருமை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிந்தனையைத் தொட்ட பதிவு.

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

Unknown said...

உன்னதமான ஒப்புவமை

Unknown said...

உன்னதமான ஒப்புவமை

Post a Comment