Thursday, July 2, 2015

மாறா விதிகள் அறியும் ஞானம்...

நாளும் பொழுதும் காமக்  கடலில்
மூழ்கிக் கிடந்த போதும்-உலகில்
வாழும் நாளில் மன்ன னாக
பவனி வந்த போதும்

போதும் போதும் என்று சொல்ல
மனது ஒப்ப வில்லையே-காலன்
"வாரும் " என்று அழைக்கச் செல்ல
மனது ஒப்ப வில்லையே

சோறு தண்ணி ஏதும் இன்றி
தவித்துக் கிடந்த போதும்-காக்க
நாதி ஏதும் இன்றி நாளும்
நாறிக் கிடந்த போதும்

கேடு கெட்ட வாழ்வை வெறுக்க
மனது ஒப்ப வில்லையே-பாழும்
கூடு விட்டு உயிரை இழக்க
துளியும் ஒப்ப வில்லையே

கோடி நூல்கள் படித்து முடித்து
அறிஞன் ஆன போதும்-உலகே
கூடி நாளும் தொழுதுப் போற்றும்
ஞானி ஆன போதும்

இன்னும் வாழ எண்ணும் மனதில்
மாற்றம் ஏதும் இல்லையே-இந்த
மண்ணை விட்டு விண்ணில் ஏகும்
திண்ணம் தோன்ற வில்லையே

என்ன மாயம் இருக்கு இந்த
உலகில் என்று  நானும்-நாளும்
எண்ணி எண்ணி மூளை கசக்கி
விடையைத் தேடும் போதும்

குழப்பம் மட்டும் மனதில் கூடி
கும்மி அடித்துப் போகுதே-சரியாய்
விளக்கம் ஏதும் தோன்ற விடாது
"பழிப்புக் " காட்டிப் போகுதே

       வேறு

புத்தி நித்தம் புலன்கள் காட்டும்
பாதை போகும் மட்டும்-கொண்ட
சித்தம் தன்னில் ஆசை கூடி
ஆட்டம் போடும் மட்டும்

பதில்கள் இல்லா கேள்வி மட்டும்
பாலாய்ப் பொங்கி நிற்குமே-மாறா
விதிகள் அறியும் ஞானம் வந்தால்
எல்லாம் விளங்கத் துவங்குமே

25 comments:

  1. பதில்கள் இல்லா கேள்வி மட்டும்
    பாலாய்ப் பொங்கி நிற்குமே-மாறா
    விதிகள் அறியும் ஞானம் வந்தால்
    எல்லாம் விளங்கத் துவங்குமே

    துறவர ஆசை தோன்றுதா மனதில்
    வரவர பதிவுகள் வார்த்தைகள் தனதில்!!?

    ReplyDelete
  2. மிக அருமையாக இருக்கிறது ஐயா

    தம 3

    ReplyDelete
  3. ஜி எம் பி ஸாரும் இதே போன்ற எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    ஏனோ இந்த எண்ணங்கள் இப்போது?

    ReplyDelete
  4. ஸ்ரீராம். said...//
    ஜி எம் பி ஸாரும் இதே போன்ற எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
    ஏனோ இந்த எண்ணங்கள் இப்போது//

    நமக்கும் விரக்தி எண்ணத்திற்கும்
    தூரம் ஜாஸ்தி

    ரேடியோவில் "கண்ணன் என்னும் மன்னன்
    பெயரைச் சொல்லச் சொல்ல " என்னும்
    அருமையான இருசீர் பாடலைக் கேட்டேன்

    கேட்கச் சுகமாய் இருந்தது

    அதே இருசீரில் ஒரு விரக்திப்பாடல்
    எழுதினால் என்ன என்று யோசித்து எழுதினேன்

    அவ்வளவே.தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

  5. புலவர் இராமாநுசம் said.//

    ..துறவர ஆசை தோன்றுதா மனதில்
    வரவர பதிவுகள் வார்த்தைகள் தனதில்!!?

    மேலே சொன்னபடி நமக்கும் விரக்தி எண்ணத்திற்கும்
    தூரம் ஜாஸ்தி
    வித்தியாசமாக இருக்கட்டுமே என எழுதிப்பார்த்தேன்
    அவ்வளவே.தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. R.Umayal Gayathri sai..
    மிக அருமையாக இருக்கிறது //
    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. //மாறா விதிகள் அறியும் ஞானம் வந்தால்
    எல்லாம் விளங்கத் துவங்குமே//

    ஒன்றுமே, ஒருபோதும், விளங்கவே விளங்காது.

    ஞானமாவது, அவ்வளவு சுலபமாக வருவதாவது?

    சும்மா மிகப்பெரிய ’ஞானம்’ ஏற்பட்டுவிட்டது போலவும், சாவை எதிர் நோக்கிக் காத்திருப்பது போலவும், ஏதேதோ சிலர் சொல்லித்திரிகிறார்கள் என்பதே இதில் உள்ள மிகப்பெரிய உண்மை, சார்.

    எல்லோருக்குமே இவ்வுலகில் வாழ மட்டும்தான் ஆசையுண்டு.

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் //
    //மாறா விதிகள் அறியும் ஞானம் வந்தால்
    எல்லாம் விளங்கத் துவங்குமே//
    சிலர் சாவை எதிர்கொள்ள காசி சென்று
    தங்கிவிடுவது கூட ஒரு வகை முதிர்ச்சிதான்

    ReplyDelete
  10. தளிர்’ சுரேஷ் said...//
    சிறப்பான கவிதை அருமை! வாழ்த்துக்கள்!//

    உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. எனக்கும் உடனே இன்றைய GMB ஐயா பகிர்வு தான் ஞாபகம் வந்தது... ஸ்ரீராம் சாருக்கு சொன்ன கருத்துரையில் மகிழ்ந்தேன்...

    ReplyDelete
  12. ஞானம் வருவது அவ்வளவு எளிதா என்ன?
    அருமை

    ReplyDelete
  13. நீங்கள் எழுதியதற்கும் என் பதிவுக்கும் துளி கூட சம்பந்தம் இருப்பதாகப் படவில்லை. எழுதுபவரின் எண்ணங்கள் சரியாகப் போய்ச் சேராததற்கு இதுவும் ஒரு உதாரணம் விரக்தியே இல்லை என் எழுத்தில் யதார்த்தத்தை எதிர் கொள்ளத் துணியும் எழுத்தே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. G.M Balasubramaniam //

    .மிகச் சரி
    தங்கள் பதிவில் விரக்தி இருப்பதாகத் தெரியவில்லை
    எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும்
    தைரியமும் அல்லவா தெறித்து வீழ்ந்திருக்கிறது

    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  15. திண்டுக்கல் தனபாலன் //வழக்கம்போல்
    உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்



    ReplyDelete
  16. சென்னை பித்தன் said...//
    ஞானம் வருவது அவ்வளவு எளிதா என்ன?
    அருமை//


    உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. கவிதை சிந்தனையைத் தூண்டியது.

    ReplyDelete
  18. நுணுக்கமான செய்திகளைக் கவிதைகளின் மூலமாக தாங்கள் பகிர்ந்துகொள்ளும் பாணி பாராட்டத்தக்கதாய் உள்ளது. நன்றி.
    தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

    ReplyDelete
  19. கேள்வியும் கேள்விக்களுக்கான பதிலும் தாங்களே தந்துவிடுகிறீர்கள்.

    ReplyDelete
  20. அடுக்கடுக்காக எத்தனை கேள்விகள் ம்..ம்..ம் வாழ்கையே ஒரு புதிர் தானே இல்லையா . அழகான வரிகள் ஒவொன்றும் ரசித்தேன் .நன்றி வாழத்துக்கள் ...!

    ReplyDelete
  21. //அழைக்கச் செல்ல// இங்கு ஒற்று வேண்டுமா? பொருள் மாறுகிறதே.

    //தொழுதுப் போற்றும்// தொழுதும் போற்றும் ?

    ReplyDelete
  22. சிந்தனையைத் தூண்டிய பகிர்வு.

    த.ம. +1

    ReplyDelete
  23. நல்ல கவிதை....வரிகள் அழகு!

    ReplyDelete