Monday, October 29, 2018

ஆனந்தத்தின் அற்புதம்

அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்

யானையக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேடையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

8 comments:

  1. //அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்
    சமூக வலைத் தளங்களில்
    பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
    பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று
    ஆயினும் அவர்கள்
    பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்//

    ஆஹா..... வலைவீசித் தேடினாலும், வலைத் தளங்களில், இதுபோல பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்பவர்கள் தங்களைப்போல யாரோ இரண்டொருவர் மட்டுமே இருக்கலாம்.

    உண்மையோ பொய்யோ இந்தப் பதிவினில் தங்களின் எதிர்பார்ப்பு ’ஆனந்தத்தின் அற்புதம்’ ஆக வெளிப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. :)

    ReplyDelete
  2. /பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்/அந்த அவர்கள் வாழட்டும்

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பட்டியலில் குறிப்பிடத் தக்க இடத்தில் நீங்கள்

      Delete
  3. மிகவும் சரியான கருத்து பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ஆஹா சிறப்பாக சொன்னிர்கள் ஜி. அருமை.

    ReplyDelete