Wednesday, April 22, 2020

கடும் பயிற்சியில் வார்த்தைகள்...

.கவிதைத் தேர்வுக்குத்தன்னைத்
தயார்செய்துகொள்ளும்படியான
கடும் பயிற்சியிலிருக்கின்றன
வார்த்தைகள் அனைத்தும்

நாணலினும்
இன்னும் நெகிழ்வாய்

கூரிய வாளினும்
இன்னும் கூர்மையாய்

மலர் இதழ்களினும்
இன்னும் மென்மையாய்

குளிர் நிலவினும்
இன்னும் தண்மையாய்

தேக்கு மரம் போல்
மிக்க உறுதியாய்

மொத்தத்தில்
கவிஞனின் எந்த மன நிலைக்கும்

கவிதைக்குள் கிடைக்கும்
எந்தச் சிறு இடைவெளியிலும்

மிகச் சரியாய்த்
தன்னைப் பொருத்திக்கொள்ளும்படியாய்..

கடும் பயிற்சியிலிருக்கின்றன
தமிழ் வார்த்தைகள் அனைத்தும்

வள்ளுவனின் விழிபட்ட
கம்பனின் கைத்தொட்ட
வள்ளலாரின் கருணைப்பெற்ற
பாரதியின் நாவு நவின்ற
அவன் தாசனால் எழுச்சிப் பெற்ற
வார்த்தைகள் போல்

காலம் எத்தனைக் கடந்தும்
மலர்ந்து மணம் வீசும்
புத்தம் புது மலராய்
மணக்க வேண்டுமெனில்

மாற்றங்கள் எத்தனை நேரினும்
மதிப்பில் உயர்ந்தே நிற்கும்
முத்தாய்ப் பவளமாய்ப் தங்கமாய்
ஜொலிக்க வேண்டுமெனில்

கவிஞனின் கருணைப் பார்வையில்
படும் படியாய்
அவன் கவிதைக்குள் பொருத்தமாய்
விழும் படியாய்
அதற்குரிய தகுதிகள் அனைத்தும்
பெறும் படியாய்
இருந்தால் மட்டுமே சாத்தியமென
உணர்ந்த படியால்

கடும் பயிற்சியிலும்
தொடர் முயற்சிலும்
இருக்கின்றன
அழகுத் தமிழ் வார்த்தைகள்

வார்த்தைகளின்
அசுர பலமறியாது
உயர் நிலையறியாது
அதை உமிழ்ந்துச்  செல்வோரே
சற்று விலகியே செல்லுங்கள்

ஆம் தவமனைய
அதன்கடும் பயிற்சிக்கு
அதன் பெரும் முயற்சிக்கு
பங்கம் வந்துவிடாது

மௌனமாய்   ......
ஆம்
மௌனமாய்
முடிந்தால்ஆசிர்வதிச்சு மட்டும் செல்லுங்கள்


4 comments:

  1. அழகுத் தமிழ் என்றும் ஆட்கொள்ளும்...

    ReplyDelete
  2. பயிற்சி கொடுக்காத பலனா?

    ReplyDelete
  3. சிறப்பாக அமைந்துள்ளதே. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    ReplyDelete