Saturday, September 18, 2021

நடிகவேள்...ஒரு சகாப்தம்..

 இத்தனை வருடங்களில் இப்படியொரு படம் வந்ததே இல்லை’ என்று சொல்லும்படியான படங்கள் வந்திருக்கின்றன. பாசத்தைச் சொன்ன படம், காதலைச் சொன்ன படம், கண்ணியத்தைச் சொன்ன படம், கடவுளைச் சொன்ன படம், சமூகத்தைச் சொன்ன படம், சமூக அவலத்தைச் சொன்ன படம், கலையைச் சொன்ன படம் என எத்தனையெத்தனை படங்களோ வந்து நம் மனம் தொட்டிருக்கின்றன. மகத்தான வரிசையில் இடம்பிடித்திருக்கின்றன. தனி மனித ஒழுக்கத்தையும் ஒழுக்க மீறலால் உண்டான சீர்கேட்டையும் சொன்னவகையில், ஆனந்தக் கண்ணீருடன் தனியிடம் பிடித்து நிற்கிறது ‘ரத்தக்கண்ணீர்’.

இளம் வயதிலேயே நாடகத்துறைக்குள் நுழைந்து, அந்த நாடகத்திற்குள் சமூகக் கருத்துகளைச் சொல்லிக்கொண்டே வந்தார் எம்.ஆர்.ராதா. நாடகம், கலை என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் அல்ல என்பதில் உறுதியாக இருந்தவரை, அவரின் நடிப்புத்திறன் கண்டு, திரையுலகம் வரவேற்று அழைத்துக்கொண்டது. 37ம் ஆண்டில் திரையிலும் உலா வந்தவர், நான்கைந்து படங்கள் நடித்தார். பிறகு ‘சினிமாவே வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்தார். ‘நாடகமே போதும்’ என்று தொடர்ந்து மேடையேறினார்.


பிறகு பனிரெண்டு ஆண்டுகள் ஓடிய நிலையில், ‘சினிமாவுக்கு வாங்கண்ணே’ என்று பலரும் சொன்னார்கள். ‘ராதாண்ணே வாங்கண்ணே’ என்று சிவாஜி உட்பட பலரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். திருவாரூர் தங்கராசுவும் வலியுறுத்தினார். ஒருவழியாக, பனிரெண்டு வருடங்கள் கழித்து, எம்.ஆர்.ராதா மீண்டும் திரையுலகிற்கு வந்தார். அவர் நடித்த படம் தீபாவளித் திருநாளுக்கு வந்தது. தீபாவளியென்றால் பட்டாசும் பாமும் சரவெடிகளும் இருக்கும்தானே. அப்படியொரு தெளசண்ட் வாலா பட்டாசாக, யானை வெடியாக, ஆட்டம்பாமாக வந்தது அவருடைய திரைப்படம். அதுதான் ‘ரத்தக்கண்ணீர்’.


ஒருபடத்துக்குள் என்னென்னவெல்லாம் சொல்லிவிடமுடியும்? என்போம். ‘ஒரேயொரு படத்துக்குள் இதைவிட என்ன சொல்லிவிடமுடியும்?’ என்பதுதான் ‘ரத்தக்கண்ணீர்’.


காசும்பணமும், வீடும் வாசலும் இருக்கலாம். அதற்காக பணத்திமிருடன் இருக்கக்கூடாது என்பதைச் சொல்லியிருந்தார்கள். வெளிநாட்டில் சென்று படிக்கலாம். அந்தக் கல்வியைக் கொண்டு நம் நாட்டுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதை இதில் வலியுறுத்தினார்கள். மேல்நாடுகளுக்குச் சென்றாலும் நம் நாட்டு நாகரீக, கலாச்சார, பண்பாடுகளை விட்டுவிடக்கூடாது என்பதை அறிவுறுத்தினார்கள். பெற்ற தாயை மதிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். மனைவியை நேசிக்க வேண்டும் என்று போதித்தார்கள் .மனைவிக்கு துரோகம் செய்யாதே, வேறொரு பெண்ணை நினைக்காதே என்பதை கோபத்தோடு உபதேசித்தார்கள். குற்றம் புரிந்தவனுக்கு நிம்மதியே இல்லை என்பதுதான் மிகப்பெரிய தண்டனை என்று படத்தில் பாடம் நடத்தினார்கள். இவை அனைத்தும் ஒரே படத்தில் செய்ததுதான் ‘ரத்தக்கண்ணீர்’ எனும் மூன்று மணி நேரப்படத்தை, மூன்று தலைமுறை கடந்தும் காவியமாக்கியிருக்கிறது.

மிகப்பெரிய பணக்காரராக மோகனசுந்தரமாக மோகனாக எம்.ஆர்.ராதா. பணத்திமிர், வெளிநாட்டில் படித்த திமிர், கலை என்பதையும் நாகரீகம் என்பதையும் தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு லீலைகளில் தன்னையே மறக்கிற மோக குணம் என்பதன் மொத்த உருவம். படத்தின் நாயகன் எம்.ஆர்.ராதா தான். அநேகமாக, என்னதான் படத்தின் ஹீரோவாக இருந்தாலும் படம் முழுக்க, படத்தில் ஹீரோ வருகிற காட்சிகள் முழுக்க, ஒரு ஹீரோவுக்கு கைத்தட்டல் கிடைக்குமா, கிடைத்திருக்குமா... தெரியவில்லை. அப்படி, படம் முழுக்க கரவொலிகளை வாங்கிக்கொண்ட கலைஞன் எம்.ஆர்.ராதாவாகத்தான் இருக்கமுடியும்.


அம்மாவை, கவுன் போட்டுக்கொள்ளச் சொல்வதில் இருந்து, கூரை மேலே நெருப்பு இருந்தா அணைக்கிறே. மலையில் ஏத்தினா மட்டும் கும்பிடுறே என்று நாத்திகம் பேசுவது வரை இவரின் டயலாக் டெலிவரியில், வெடித்துச் சிரித்தார்கள் ரசிகர்கள். ஆத்திக நாத்திக பேதமின்றி ராதாவை ரசித்தார்கள்


அம்மாவை காயப்படுத்துவார். ‘துரை தூங்கறார், துரை சாப்பிடுறார்னு சொல்லு’ என்பார். மாமனாரைப் பார்த்து, ‘என்ன மிஸ்டர் பிள்ளை, இதென்ன கையில நெத்தில கோடு’ என்பார். ‘என்னடா தண்ணி இது, ‘கார்ப்பரேஷன் தண்ணி போல இருக்கு’ என்று கிண்டலடிப்பார். ‘ரோடு போடுறதுக்கு கல்லை மட்டும் கொண்டாந்து இறக்கிடுறானுங்க. அப்புறம் ரோடு எப்பவாவது போடுறானுங்க’ என்று இப்படித்தான் படம் நெடுக நக்கல் பேச்சு, நையாண்டி வார்த்தைகள், லூட்டி மாடுலேஷன்கள், அநாயசமான டயலாக் டெலிவரிகள்.


காசுத் திமிரில், காம வேட்கையில், மனைவியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் உறவாடுவதும் அதனால் பெருநோய் எனப்படும் குஷ்டத்துக்கு ஆளாகி எல்லாவற்றையும் இழந்து, தெருவில் சுற்றித் திரிவதும், ஒருகட்டத்தில் கண் பார்வையையும் பறிபோய், வாழத் தகுதியற்றவனாகி நொந்து அலைவதும் என படம் முழுக்க ராதா ராஜ்ஜ்ஜியம்தான்.

தவறான பாதையில் செல்பவன் சீரழிவான் என்பதைச் சொல்லும் ஒன் லைன். ஆனால், திரைக்கதையாக்கிய விதத்திலும் கூர்மையான வசனங்களும் என படத்திற்கு பலம் சேர்த்திருப்பார் வசனகர்த்தா திருவாரூர் தங்கராசு. அந்த வசனங்களையும் கதையையும் மோகன் எனும் கேரக்டரையும் மொத்தப் படத்தையும் தூக்கிச் சுமந்திருப்பார் எம்.ஆர்.ராதா.


1952ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது ‘பராசக்தி’. நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார்தான் தயாரித்திருந்தார். சிவாஜியை அறிமுகப்படுத்தினார். சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் நாடகங்களில் ஒன்றாக நடித்தவர்கள் என்றாலும் ‘என் அண்ணன் அவர். எனக்கு ராதாண்ணன் குரு’ என்று மரியாதையுடன் சொல்வார் சிவாஜி . ஏற்கெனவே திரையில் நடித்து வந்து, சினிமாவே வேண்டாம் என்று விலகிச் சென்ற எம்.ஆர்.ராதாவை, 12 வருடங்கள் கழித்து, தன் நேஷனல் பிக்சர்ஸ் ‘ரத்தக்கண்ணீர்’ மூலம் மீண்டும் சினிமாவுக்குக் கொண்டுவந்தார் பெருமாள் முதலியார். 54ம் ஆண்டு தீபாவளிக்கு வந்தது ‘ரத்தக்கண்ணீர்’.


பராசக்தி’யை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு தான் இந்தப் படத்தையும் இயக்கினார்கள். சிதம்பரம் ஜெயராமன் என்கிற சி.எஸ்.ஜெயராமன் படத்துக்கு இசையமைத்திருந்தார். படத்தின் பின்னணி இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று டைட்டிலில் இடம்பெறுகிறது.


தோற்றவனின் கதையைப் பெரும்பாலும் சினிமாவில் சொல்லுவதில்லை என்பார்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே, மொத்த வாழ்விலும் தோற்றுப் போய், வாழ்க்கையையே தொலைத்தவனின் கதையாக போதித்திருப்பதும் கூட ‘ரத்தக்கண்ணீர்’ படத்தின் அசுர சாதனை.

மனைவியாக ஸ்ரீரஞ்சனி, நண்பனாக எஸ்.எஸ்.ஆர், சந்திரபாபு முதலானோர் நடித்திருந்தனர். மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் மயங்கிச் சரியும் எம்.ஆர்.ராதாவை ஆட்டுவிக்கும் பதுமையாக எம்.என்.ராஜம் நடித்திருப்பார். இவரின் கேரக்டரை பிரமாதப்படுத்தியிருப்பார். இவரின் கேரக்டர் பெயரான ‘காந்தா’வும் எம்.ஆர்.ராதா பேசுகிற ‘அடியே காந்தா...’வும் ரொம்பவே பிரபலம். ரொம்பவே என்றால்... தலைமுறை கடந்தும் பிரபலம்!


படம் முழுக்க ப்ளாஷ்பேக் என்பதும் அப்போது ஆச்சரிய அதிசயம்தான். குஷ்ட உடலுடன் கையில் கோலுடன் பரதேசி போல் நிற்கும் எம்.ஆர்.ராதாவின் சிலை. அருகில் கூட்டம். அந்தக் கூட்டத்தில் இருந்துகொண்டு, எஸ்.எஸ்.ஆர்., தன் நண்பனைப் பற்றி, தன் நண்பன் சீரழிந்தது பற்றி கதை போல் பிரசங்கம் செய்வதில் இருந்துதான் ப்ளாஷ்பேக் விரியும்.


மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் இது. இதன் பின்னர், எம்.ஆர்.ராதாவுக்கு வரிசையாக படங்கள் வந்தன. வில்லன், குணச்சித்திர கேரக்டர், காமெடி ரோல் என்று வெரைட்டி வெரைட்டியாக வந்தன. வெளுத்து வாங்கினார் அவரும்! ‘நான் ‘ரத்தக்கண்ணீர்’ ல ஹீரோவா நடிச்சவன். அதனால ஹீரோவாத்தான் நடிப்பேன்’ என்று முரண்டுபிடிக்காத, அந்த முன் கோப எம்.ஆ.ராதாவிடம் நடிப்புடன் சேர்த்து பலதையும் கற்றுக்கொள்ளவேண்டும் நடிகர்கள்.


பதினேழு ரீல் ஓடுகிற படம் இது. இந்த பதினேழு ரீலுக்குள், எம்.ஆர். ராதா போடுகிற பட்டாசுகளும் அவர் சிகரெட் பிடிக்கிற ஸ்டைலும் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பினால், வந்து வந்து ஆடுகிற சுருள்முடியும், நடையும் தோரணையும் நக்கல் பேச்சும் என நடிப்பு ராட்சஷனாக உச்சம் தொட்டிருப்பார் எம்.ஆர்.ராதா.

54ம் ஆண்டு, அக்டோபர் 25ம் தேதி வெளியானது ‘ரத்தக்கண்ணீர்’. படம் வெளியாகி 67 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் இன்னும் 33வருடங்களாகும் போது ‘ரத்தக்கண்ணீர் நூற்றாண்டு’ என்று எழுதிக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். பேசிச் சிலாகித்துக் கொண்டிருப்பார்கள்.


காதலை, இல்வாழ்க்கையை, பணத்திமிரை, காமத்தின் பிடியில் சிக்குண்ட அவலத்தை, மேல்நாட்டு கலாச்சாரத்தில் மோகம் கொண்டு வீழ்ந்ததை, சமூகத்தை, அரசியலை, ஆத்திக நாத்திகத்தை, தனி மனித ஒழுக்கமே முக்கியம் என்பதை ஒரு படத்தில், ஒரேயொரு படத்தில், பாடமாகவே நடத்திய ‘ரத்தக்கண்ணீர்’ படத்தை எவரால்தான் மறக்கமுடியும்?


நன்றி தி இந்து நாளிதழ்



8 comments:

  1. உண்மை
    எம்.ஆர்.ராதா ஒரு சகாப்தம்

    ReplyDelete
  2. காந்தாவை உண்மையாக நெஞ்சில் எட்டி உதை என்று சொன்னவர்...

    இன்று இதே போல் படம் வராது... வந்தாலும் வசனங்கள் பல தடை செய்யப்படும்... அந்தளவு படத்தில் உண்மை வசனங்கள் இருந்தன...

    ReplyDelete
  3. என வாழ்க்கையில் அவருடன் நடித்த நாட்களை ஞாபகபடுத்திய தங்களுக்கு நன்றி. அவையெல்லாம் கோல்டன் டேய்ஸ். அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete
  4. அந்தப் படத்தை மீண்டும் இப்போது எடுத்தால்!?...

    குலை நடுங்குகின்றது!..

    ReplyDelete
  5. வரைமுறை மீறிய வார்த்தையை பகிரங்கமாகப் பேசத் தொடங்கியதும் இந்தப் படத்திலிருந்து தான் என்று சொல்வார்கள்..

    ReplyDelete
  6. இந்தப்படம் பார்த்ததில்லை. ஆனால் மிகவும் பேசப்பட்டபடம் என்றும் எம் ஆர் ஆரின் நடிப்பும், வசனங்களும் மிகவும் பேசப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெரியும்

    கீதா

    ReplyDelete
  7. இந்தப்படம் பார்த்ததில்லை. ஆனால் மிகவும் பேசப்பட்டபடம் என்றும் எம் ஆர் ஆரின் நடிப்பும், வசனங்களும் மிகவும் பேசப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெரியும்

    கீதா

    ReplyDelete
  8. தனக்கென்று தனி பாணியை வகுத்துக் கொண்டார்.  அவர் போன்ற திறமையாளர்களால் சிறந்திருந்தது தமிழ் சினிமா. 

    ReplyDelete