Monday, July 11, 2011

பயனற்ற பூமாலை

சிந்தனையைத் தூண்டாத கல்வி
சங்கடத்தில் உதவாத நட்பு
நம்பிக்கை தாராத பக்தி
பயன்படுத்த இயலாத சக்தி
தன்மதிப்பைக் கூட்டாத செல்வம்
சமயத்தில் இணையாத சுற்றம்
நம்மோடு இருந்தால்தான் என்ன?
இல்லையென்று ஆனால்தான் என்ன?

பயனின்றி பேசுகின்ற பேச்சு
ஆக்ஸிஜன் இல்லாத காற்று
தயார் நிலையில் இல்லாத படைகள்
உடலுறுப்பு மறைக்காத உடைகள்
மனமகிழ்ச்சி  தாராத கூத்து
நடப்படாது கட்டிவைத்த நாற்று
கணக்கின்றி  இருந்தால்தான் என்ன ?
இல்லையென்று போனால்தான் என்ன ?

நோய் நொடிகள் தீர்க்காத மருந்து
நோக்கமற்று எழுதுகின்ற எழுத்து
பார்வையற்று திறந்திருக்கும் விழிகள்
ஒழுக்கமற்ற அழகான பெண்கள்
தாய்தந்தை பேணாத தனயன்
தனனலத்தை துறக்காத தலைவன்
மேற் சொன்ன எல்லாமே வீண்தான்
பிணத்தின்மேல் பூமாலை போல்தான்

48 comments:

  1. மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதற்கான மிக அருமையான அறிவுரை வார்த்தைகள் வரிகளில் இங்கு மிக அருமையாக வரையப்பட்டுள்ளது ரமணி சார்...

    மனிதனாய் பிறப்பவன் நல்லக்காரியங்கள் செய்து மற்றவரை தன் வார்த்தைகளால் புண்படுத்தாது மகிழ்வித்து, சந்தோஷங்களை அன்புடன் கொடுத்து, உதவிகளை பிரதிபலன் கருதாமல் செய்து, மூத்தவர் வார்த்தைகளை அடக்கத்துடன் ஏற்று, ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து கருணையுடன் இருந்து இறந்தப்பின்னும் நம் வாழ்க்கை ஒரு சரித்திரமாகவேண்டுமென்றால் இதோ மேற்சொன்ன கவிதையில் வந்த உன்னத வரிகளை பின்பற்றி நடந்தால் கண்டிப்பாக அவன் வாழ்க்கை ஒரு சரித்திரமாகும்....

    எளிய நடையில் எல்லோரும் பயனுற்று வாழ வழி செய்த அருமையான படைப்பான கவிதை தந்தமைக்கு என் அன்பு நன்றிகள் ரமணி சார்.....

    ReplyDelete
  2. சூப்பர் கவிதை. அழகான நடை.

    ReplyDelete
  3. நோக்கமற்று எழுதுகின்ற எழுத்து
    ஒழுக்கமற்ற அழகான பெண்கள்
    சிந்தனையைத் தூண்டாத கல்வி
    இப்படி நிறைய சங்கதிகள் நன்றாக விழுந்துள்ளது. அருமை. வாழ்த்துகள்.
    Vetha.Elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  4. நல்ல கவிதை... ஒவ்வொரு விஷயமும் மனதில் பதிவது போல இருந்தது.

    ReplyDelete
  5. அத்தனையும் கருத்துள்ள வரிகள் ,ஒப்பீடுகள் ...

    ReplyDelete
  6. கவியரசர் கண்ணதாசனின் தத்துவக் கவிதையை வாசித்தது போல் இருந்தது. அருமையாக எழுதி இருந்தீர்கள்.

    ReplyDelete
  7. மனிதன் தன் நிலை மறந்தால் அவன் மனிதனில்லை. . .அருமையான வரிகள் sir. . .

    ReplyDelete
  8. நம்மோடு இருந்தால்தான் என்ன?
    இல்லையென்று ஆனால்தான் என்ன?//

    ஒவ்வொரு வரியும் அருமையான பாடம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. பயனற்றவை பற்றி, காலத்திற்கேற்றாற் போல கருத்துள்ள கவிதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    தத்துவக் கவிதையாக, இந்தப் பயனற்றவை வித்தியாசமான முறையில் வந்துள்ளது.

    ReplyDelete
  10. சிறப்பாக வந்துள்ளது

    ReplyDelete
  11. பிரிவுத்துயரை பிழிந்தெடுத்த வரில்கள்
    உடம்பில ஆணி அறைஞ்ச்சால் போல் ஒவ்வொரு வரிகளும்.
    வரிகளின் மேல் வரிகள் யதார்த்தமும் உண்மையும்
    அழகான வரி கோர்ப்பு அப்படியே சரளமாக போகிறது

    ReplyDelete
  12. ரமணி

    அருமையான பதிவு வார்த்தைகள் மிகப்பொருத்தம்

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  13. சாட்டையடி வரிகள்.. செம கவிதை.

    ReplyDelete
  14. அத்தனையும் உண்மைதான். இதெல்லாம் கிரியேட்டிவிட்டியின் அபத்தங்கள். பிறக்காமலே இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  15. //பார்வையற்று திறந்திருக்கும் விழிகள்
    ஒழுக்கமற்ற அழகான பெண்கள்
    தாய்தந்தை பேணாத தனயன்
    தனனலத்தை துறக்காத தலைவன்//.
    அருமை அருமை
    மனதில் ஆயிரமாயிரம் கேள்விக் கணைகளை பதித்த பதிவு ரமணி சார் , பயனற்றவை இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன என வாழ்க்கையின் அர்த்தத்தை , நெறிமுறையை வலிமையாக சொன்ன கவிதை வரிகள் சார்

    ReplyDelete
  16. வரி தோறும் விழி ஒட
    வள மிக்க தமிழ் ஆட
    சரி யான கவிதையே தந்தீர்
    சந்தன மாகவே வந்தீர்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. பிரயோசனமற்ற அத்தனையும் தூக்கி எறிந்திருக்கிறீர்கள் !

    ReplyDelete
  18. ஒவ்வொன்றும் கருத்துள்ள வரிகள். பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  19. பிணத்தின் மேல் பூமாலை வீணாயிருந்தாலும் இறந்தவனுக்கு ஒரு மரியாதை அல்லவா.?பயனற்ற விஷ்யங்களின் பட்டியலில் எனக்கு உடன்பாடே. ஆக்க பூர்வமான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. கருத்துள்ள நல்ல கவிதை!

    ReplyDelete
  21. ஒவ்வொரு வரிகளும் கருத்தாழமிக்க அசத்தல் வரிகள்,

    ReplyDelete
  22. உங்கள் ஆழமான தத்துவ கவிதை வரிகளை என் மனதில் நீங்காது இட்டு வைத்து உள்ளேன் பாஸ்,
    கண்ணதாசனில் எழுத்தை படிப்பது போல் ஒரு பிரமை, உண்மையில் மனம்தொட்ட கவிதை பாஸ்

    ReplyDelete
  23. அத்தனையும் உண்மை. அளவோடு அளந்திருக்கின்றீர்கள். வீண் என்று தெரிந்தும் விளங்காத ஜென்மங்கள் வாழும் உலகில் விளக்கி விளக்கித் தேயவேண்டியது எழுத்தாளன் கடமை. அவ் எழுத்தாளனே விடயம் இல்லாது வீணே எழுதினால் என் செய்வோம் பராபரமே

    ReplyDelete
  24. உங்கள் ஆக்கம் நாளும் மெருகேறி வருகிறது உண்மையில் பாவின் இலக்கணம் வேறுமாதிரியாக சொல்லுவார்கள் சிறுகதை அல்லது கவிதை போன்றவற்றில் போதனை இருக்க கூடாது என்பார்கள் அது கலை கலைக்காகவே என்கிற மூடர் கூட்டம் பாராட்டுகள் தொடருங்கள் ......

    ReplyDelete
  25. பயனற்ற பூமாலையின் ஒவ்வொரு வரியும் பயனுள்ளது.
    சிந்தனையைத் தூண்டாத கல்வி
    சங்கடத்தில் உதவாத நட்பு
    நம்பிக்கை தராத பக்தி
    பயன்படுத்த இயலாத சக்தி
    ரமணி சார் 'The Great'

    ReplyDelete
  26. உங்களின் ஆக்கம் மிகவும் பாராட்டும் படி அதுமட்டுமில்லாமல் படைபாளி இந்த சாமுகத்திர்க்கு தன்னாலான உண்மையான கடமையாற்ற வேண்டும் என எண்ணுகிறீர்கள் உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி

    ReplyDelete
  27. ரமணி சார் முடிவின் விளிம்பில் என்ற உங்கள் பதிவை தேடிக்கொண்டே இருக்கிறேன் கிடைக்கவில்லையே :( எங்கே பதிவிட்டு இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  28. பயனின்றி பேசுகின்ற பேச்சு
    ஆக்ஸிஜன் இல்லாத காற்று/

    /சங்கடத்தில் உதவாத நட்பு
    நம்பிக்கை தாராத பக்தி
    பயன்படுத்த இயலாத சக்தி/

    ஆகா எல்லாமே நச்சென்று விழுது அற்புதமான கவிதை..
    கருத்துக்கள் நிறைந்த உணர்வைத்தட்டுகின்ற கவிதை...
    வாழ்க,,,,அண்ணனே உங்கள் கவித்துவம்...

    ReplyDelete
  29. //பயனற்ற பூமாலை//...எளிய நடையில் மிகவும் அற்புதமாக இருக்கிறது!

    ReplyDelete
  30. //பிணத்தின்மேல் பூமாலை போல்தான்...

    நல்ல கவிதை ரமணி சார்...
    குறிப்பாக கடைசி வரி..மனதை தைத்தது...அதில்தான் தொடங்கியிருப்பீர்கள்னு நினைக்கிறேன்...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  31. ஒவ்வொரு வரியும் ஒரு ந‌றுமணமுள்ள‌ மலராய்த்தெரிகிறது எனக்கு!
    அத்தனை மலர்களையும் ஒரு பூமாலையாகக் கட்டி எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள்!
    நறுமணத்தை நுகர்வாறே இங்கே தங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

    ReplyDelete
  32. உங்க ப்ளாக் தலைப்பு அருமையா இருக்கு...
    கவிதையும் கூட...

    ReplyDelete
  33. உண்மையை தெளிவாக சரியான விதத்தில் கூறீயுள்ளீர்கள்

    ReplyDelete
  34. அப்பப்பா..எப்படி சார் கவிதைக்கு இப்படி அருமையான வரிகளை தேர்ந்தெடுத்து கவிதை மாலை தொடுக்கின்றீர்கள்!!!!!!!!!!!

    ReplyDelete
  35. அருமை சார்.... இதற்கு கருத்து கூறாமல் இருந்தால் படித்து என்ன பயன் ?

    ReplyDelete
  36. மிக மிக அருமையான சொல்லாடல்கள். வரிகளுக்கு வரிகள் உணர்வுகள் கோர்க்கப்படிருக்கு மனிதஉள்ளங்களுக்கு உறைக்கும்படி..

    ReplyDelete
  37. சாதாரண வரிகள் அல்ல...வாழ்க்கை முறை நெறிகள்.. வரிகள் ஒவ்வொன்றும் அனைவரும் குறித்து வைத்துக்கொள்ள

    ReplyDelete
  38. சாதாரண வரிகள் அல்ல...வாழ்க்கை முறை நெறிகள்.. வரிகள் ஒவ்வொன்றும் அனைவரும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.... நானும் குறித்து வைத்துக்கொண்டேன்...நன்றி ஐயா...

    ReplyDelete
  39. அருமையான உண்மையை உணர்த்தும் நல்ல கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    [ஒரு வாரம் வெளியூர் சென்றிருந்தேன். உடல்நலக்குறைவும் கூட.
    வீட்டில் இண்டெர்நெட் கனெக்‌ஷனில் சில பிரச்சனைகளும் ஆகியுள்ளது.
    அதனால் தாமதமாக இந்தப் பின்னூட்டம் அளிக்கும்படி ஆகிவிட்டது.
    சோதனை மேல் சோதனையாக உள்ள காலக்கட்டம்.
    ஒரு வாரத்தில் எல்லாம் சரியாகி விடும். பின் மீண்டும் சந்திப்போம்.அன்புடன் vgk]

    ReplyDelete
  40. கவிதை, மோர் சாதம் வதக்கின பச்சை மிளகாயுடன் சாப்பிட்ட மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
  41. இன்றுதான் முதன் முதலாக தங்கள் தளம் வந்தேன் .

    முதல் பகுதியே மனதை கொள்ளை கொண்டுவிட்டது .

    நம்பிக்கை தாராத பக்தி

    சமயத்தில் இணையாத சுற்றம்

    சங்கடத்தில் உதவாத நட்பு

    அருமை ,அத்துனையும் உண்மை .

    நன்றி

    ReplyDelete
  42. மேற் சொன்ன என்றிருக்கட்டும்.

    ReplyDelete
  43. வரிகள் அருமை!
    எனக்க மிகவும் பிடித்த வரிகள்...
    சங்கடத்தில் உதவாத நட்பு
    நோக்கமற்று எழுதுகின்ற எழுத்து
    தாய்தந்தை பேணாத தனயன்

    ReplyDelete
  44. ஒழுக்கமற்ற அழகான பெண்கள்
    தாய்தந்தை பேணாத தனயன்//

    கவிதை, கருத்து அருமை இவை இரண்டையும் தவிர ரமணி சார்..

    இதை ஆண், பெண் என பிரிக்க கூடாது என்பதென் கருத்து..

    ஒழுக்கத்தின் அளவுகோல் என்னென்ன.? தாங்கள் பாலியல் தொழிலாளி பற்றி எழுதிய கவிதை நியாபகம் வந்தது இந்நேரம்..

    பெற்றோரை மகன் தான் கவனிக்கணும் என்ற பழங்கால வழக்கத்தில் நம் எழுத்தின் மூலம் மாற்றம் கொண்டு வரணும்..தங்களைப்போன்றோர் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்..

    ReplyDelete
  45. கவிதை என்றும் அனைவர் உள்ளத்திலும் மணக்கும் !

    ReplyDelete
  46. ஸ்ரவாணி //

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete