Monday, November 11, 2013

அந்தநாள் எனக்குப் பொன் நாள்

கவியது படைக்க எண்ணி      
மனமது முயலும் போதே
சதியது செய்தல் போல
சங்கடம் நூறு நேரும்
எதிரியாய் எதுகை மாறி
எடக்கது செய்து போக
புதிரென மோனை மாறிப்
புலம்பிட வைத்துப் போகும்

இனியொரு கவிதை யாரும்
இயற்றுதல் கடினம் என்னும்
கனிநிகர் கவிதை யாக்க
கடிதுநான் முயலும் போதே
அணியது முரண்டு செய்து
மனமதை நோகச் செய்ய
பனியது விலகல் போல
படிமமும் ஒதுங்கி ஓடும்

யுகக்கவி இவனே என்று
உலகிது போற்றும் வண்ணம்
நவகவி ஒன்று நானும்
நவில்ந்திட முயலும் போதே
உவமையும் வெறுப்பை ஊட்டி
ஒழிந்துதன் இருப்பைக் காட்ட
அவதியில் மனமும் மாறிக்
கவிதையை வெறுத்துச் சாடும்

ஆயிரம் முறையே வீழ்ந்தும்
எழுந்திட முயலும் சேயாய்
காவியம் ஒன்றை வாழ்வில்
செய்திட முயல்வேன் ஓர்நாள்
மேவிடும் முயற்சிக் கண்டு
மனதினில் மகிழ்வுக் கொண்டு
காளியே அருள்வாள் ஓர்நாள்
அந்தநாள் எனக்குப்  பொன் நாள்

32 comments:

  1. கம்பன் வீட்டுக்
    கட்டுத்தறியும்
    கவிபாடும் என்பார்கள்

    சங்கம் வைத்துத்
    தமிழ் வளர்த்த
    மதுரை மண்ணின்
    மைந்தர்
    உங்ளுக்கு
    காவியம் செய்தலா
    கடினம் - எடுத்திடுவீர்
    எழுதுகோலை
    படைத்திடுவீர்
    புதுக் காவியம் ஒன்றை.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    ஆயிரம் முறையே வீழ்ந்தும்
    எழுந்திட முயலும் சேயாய்
    காவியம் ஒன்றை வாழ்வில்
    செய்திட முயல்வேன் ஓர்நாள்
    மேவிடும் முயற்சிக் கண்டு
    மனதினில் மகிழ்வுக் கொண்டு
    காளியே அருள்வாள் ஓர்நாள்
    அந்தநாள் எனக்குப் பொன் நாள்
    ------------------------------------------------------------------------
    என்ன வார்த்தைகள் ஆகா..ஆகா... கவிவரிகள் ஒவ்வொன்றும் உயிரோட்டம் உள்ளது ஐயா... நீங்கள் எங்களுக்காக கவிபடைப்பதே இந்த காளியின் அருள்தான் ஐயா.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கவிதை மிக நன்று. ரசித்தேன்

    ReplyDelete
  4. மிக மிக அருமை ஐயா! கவி படைக்கும் முறையை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
    உங்கள் காவியம் விரைவில் வரும், அதைப் படித்து மகிழ்வேன், அதில் ஐயமில்லை! பகிர்விற்கு நன்றி ரமணி ஐயா!
    த.ம.3

    ReplyDelete
  5. ஆஹா! அற்புதம் சார்!

    // ஆயிரம் முறையே வீழ்ந்தும்
    எழுந்திட முயலும் சேயாய்
    காவியம் ஒன்றை வாழ்வில்
    செய்திட முயல்வேன் ஓர்நாள்//

    நீவிர் படைத்திடுவீர்!

    நாங்களும் படித்து மகிழ்ந்திடுவோம்!

    ReplyDelete
  6. அந்த நாள் தூரமில்லை,
    அழிவிலாக் கவிதைநூலைப்
    உங்களின் நெஞ்சம் பாடி,
    ஊரெலாம் புகழும் நன்னாள்!
    பொறுத்திரும் ரமணி ஐயா,
    புதுமையா உலகில் இல்லை,
    உமக்கொரு கருவை ஈந்து
    உயர்கவி வழங்குதற்கே?

    ReplyDelete
  7. நீங்களே இப்படிச் சொன்னால் என்னனைப்போல் கத்துக் குட்டிகள் என்ன சொல்வது.சொற்களில் விளையாடி இருக்கிறீர்கள்!அருமை.

    ReplyDelete
  8. வலுவான நம்பிக்கையே நல் வழிகாட்டும் ஒரு நாளிங்கே தளர்வேனோ ஐயா உனக்குத் தரமான கவிதை படைத்தும் !!வாழ்த்துக்கள் ஐயா தங்கள் எண்ணம்போல் கவிதை சிறக்கட்டும் ..

    ReplyDelete
  9. நீங்களே இப்படி உளம் நலிந்தால்...
    இல்லை வேண்டாம் கவலை ஐயா..
    யுகக்கவி என்று இந்த உலகமே பாராட்டும் உங்களை...
    நீங்களும் மகிழ்ந்து எமையும் மகிழ்விக்கும் தருணம் வரும்!

    ஆதங்கக் கவிதை அருமை!
    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  10. அந்தநாள் சீக்கிரம் கிடைக்கட்டும். ஆனால் இது சிறந்தது என்ற திருப்தி நமக்குக் கிடைப்பதுதான் கடினம்!

    ReplyDelete
  11. பா (கவிதை) புனைதலில்
    எழும் ஐயங்கள்
    எதுகை, மோனை, அணி என
    குறுக்கிடும் இலக்கணங்கள்
    நெடும்பா (காவியம்) புனைதலில்
    பாட்டுடைத் தலைவன்,
    பாட்டுடைத் தலைவி
    இருவரும் சூழ்ந்த சூழலும்
    இருந்து விட்டால் போதுமென
    உணர வைத்த
    தங்களது அறிவூட்டல்
    நன்று நன்று!

    ReplyDelete
  12. நிச்சயம் வெல்வீர்கள் .
    நேரமே கவித்தருவீர்கள்
    துச்சமாய் எல்லா வரிகளும்
    தூய இலக்கியம் படைப்பீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. கவிதையை மழையாய் பொழியும் உங்களுக்குக் காவியம் படிக்கும் நாள் வெகு விரைவில் வந்து விடும் . காளி உங்களுக்கு அருள் புரிவாள் பாருங்கள்.

    ReplyDelete
  14. பாரதியைப் போலே காளியை வணங்கி இருக்கிறீர்கள் .
    அவனைப் போலே ஓர் அழியாக் காவியம் படைக்க
    என் வாழ்த்துக்கள் . விரைவில் அது வெளி வருவதற்கான
    முஸ்தீபுகள் இக்கவியில் தெரிகின்றன.

    ReplyDelete
  15. வணக்கம் அய்யா.
    சங்கம் வைத்த மதுரைதனில்
    தன் அங்கம் வைத்து
    கவிஎழுத அத்தனையும் காவியமாகும்
    காளியவள் அருள் தந்து
    காவியம் பிறக்கத் துணைபுரிவாள்
    காவியம் படைத்திடும் அந்நாளே
    எங்களுக்கும் பொன்நாள்
    விரைவில் வந்திடும் அந்நாள்..
    கவிவரிகள் அத்தனையும் அருமை அய்யா. தங்கள் வரிகள் என்னைக் கூட ஏதோ கிறுக்கச் செய்து விட்டதே. விரைவில் பொன்னாள் அமைய வாழ்த்துக்கள் அய்யா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. கவிதை மிக நன்று. ரசித்தேன் tha.ma 10

    ReplyDelete
  17. ஆழ்த்தினீர் அதிர்ச்சி தன்னில்
    அதிரடி கவிதை தந்து.
    தாழ்த்தினேன் சிரத்தை பணிந்து
    தங்களின் அடக்கம் கண்டு.
    வாழ்த்துகள் தந்தேன் நானும்
    வரகவி பலவும் ஆக்க
    வீழ்த்துவீர் காவியக் கனியை
    வில்லெனும் தமிழைக் கொண்டு.

    ReplyDelete
  18. காளியே அருள்வாள் ஓர்நாள்
    அந்தநாள் எனக்குப் பொன் நாள்..
    கவிஞர்களாகிய நமக்கு அருளாமல் போவாங்களா காளி. நல்ல கவிதை ஐயா.

    ReplyDelete
  19. ''..மேவிடும் முயற்சிக் கண்டு
    மனதினில் மகிழ்வுக் கொண்டு
    காளியே அருள்வாள் ஓர்நாள்
    அந்தநாள் எனக்குப் பொன் நாள் ..'' Eniya vaalththu..
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  20. // ஆயிரம் முறையே வீழ்ந்தும்
    எழுந்திட முயலும் சேயாய்
    காவியம் ஒன்றை வாழ்வில்
    செய்திட முயல்வேன் ஓர்நாள்
    மேவிடும் முயற்சிக் கண்டு
    மனதினில் மகிழ்வுக் கொண்டு
    காளியே அருள்வாள் ஓர்நாள்
    அந்தநாள் எனக்குப் பொன் நாள் //

    உங்கள் முயற்சி காளியின் அருளால் வெல்லட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. ஆயிரம் முறையே வீழ்ந்தும்
    எழுந்திட முயலும் சேயாய்
    காவியம் ஒன்றை வாழ்வில்
    செய்திட முயல்வேன் ஓர்நாள்
    மேவிடும் முயற்சிக் கண்டு
    மனதினில் மகிழ்வுக் கொண்டு
    காளியே அருள்வாள் ஓர்நாள்
    அந்தநாள் எனக்குப் பொன் நாள்

    விரைவில் காளியே அருள்வாள் ஓர்நாள்

    இதுவே காவியத்தின் முன்னுரை தானே இரமணி!

    ReplyDelete
  22. தினந்தோறும் சுவைபட கவிபடைக்கும் உங்களுக்கு காவியம் கைவந்த கலையாகும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. அருமை! கவிதை எழுதும் போது வரும் சங்கடங்களை நயங்களோடு சொன்னது அருமை! விரைவில் காவியம் படைக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. விரைவிலேயே அந்தப் பொன்நாள் உங்களுக்கு அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. “அந்த நாள் எங்களுக்கும் பொன் நாள்“ இரமணி ஐயா.

    ReplyDelete
  26. காவியம் படைத்துக் காவிய நாயகனாய் வலம் வர முதலில் வாழ்த்துக்கள். மரமது மரத்தில் ஏறி மரமதை கையில் கொண்டு என்ற சொற்ச்சுவைப் பாடல் இக்கவிதையைப் படிக்கும் பொது ஞாபகத்திற்கு வந்தது

    ReplyDelete
  27. சந்திரகௌரி //

    .தங்கள் பின்னூட்டம் அதிக மகிழ்வளித்தது
    பாரதியின் இதந்தரு மனையினீங்கி எனத் துவங்கும்
    விளம் மா தேமா அமைப்பில் அமைந்த
    பாடல் சந்தத்தில் எழுத ஆசைப்பட்டு
    எழுதிய பாடல் இது
    தாங்கள் குறிப்பிட்டுள்ள பாடலை நான்
    படித்ததில்லை,பகிர்வீர்கள் ஆயின் மகிழ்வேன்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. ஆயிரம் முறையே வீழ்ந்தும்
    எழுந்திட முயலும் சேயாய்
    காவியம் ஒன்றை வாழ்வில்
    செய்திட முயல்வேன் ஓர்நாள்
    மேவிடும் முயற்சிக் கண்டு
    மனதினில் மகிழ்வுக் கொண்டு
    காளியே அருள்வாள் ஓர்நாள்
    அந்தநாள் எனக்குப் பொன் நாள் //

    மிகவும் இரசித்த வரிகள்! முயற்சி திருவினையாக்கும்! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! அற்புதமான படைப்பு! திரும்பத் திரும்ப படித்து இரசித்தேன்! நல்லதொரு பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  29. ஆயிரம் முறையே வீழ்ந்தும்
    எழுந்திட முயலும் சேயாய்
    காவியம் ஒன்றை வாழ்வில்
    செய்திட முயல்வேன் ஓர்நாள்
    மேவிடும் முயற்சிக் கண்டு
    மனதினில் மகிழ்வுக் கொண்டு
    காளியே அருள்வாள் ஓர்நாள்
    அந்தநாள் எனக்குப் பொன் நாள்

    இந்த மன உறுதி ஒன்று போதுமே ஓராயிரம் கவிதை எழுதலாமே
    ஏந்துங்கள் எழுதுகோலை வண்ணமாய் வடிவுறும் உம் எண்ணங்கள் நின் காவியம் உயிர் பெறும். கனவுகள் நிறை வேறும். நீக்கமற நெஞ்சில் நிறைந்திருப்பாள், கருணை புரிவாள் அந்தக் காளி என்றும் உமக்கு

    அருமையான கவிதை வரிகள்.....!.
    மிகவும் ரசித்தேன்......!
    பகிர்வுக்கு நன்றி....! தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  30. அற்புதமான கவிதை

    ReplyDelete
  31. காளியே அருள்வாள் ஓர்நாள்
    அந்தநாள் எனக்குப் பொன் நாள்//
    காளியின் அருள் என்றும் உண்டு உங்களுக்கு.

    ReplyDelete
  32. காவியம் பாடி வா தென்றலேன்னு பாடத் தோன்றுகிறது !
    +1

    ReplyDelete