Thursday, June 4, 2015

பாலபாடம்

 தொழுகைச் சப்தம் கேட்டு
பஷீர் வீடு வரும் அல்லா
எதிர்வீட்டு
ஜேம்ஸ்ஸின் வேண்டுதலை
ஏன் கண்டுகொள்வதில்லை ?

பிரார்த்தனைக்கு உருகி
ஜேம்ஸ் வீடு வரும் ஏசு
தவறியும்
ஏன் பஷீரைப் பார்ப்பதேயில்லை ?

பஜனைக்கு உருகி
பழனியைப் பார்க்க வரும் பார்த்தன்
பஷீரையோ ஜேம்ஸையோ
ஏன் சட்டைசெய்வதே இல்லை

இறைவனும்
கட்சித் தலைவன் போல்தானா ?

மாற்றுக் கட்சியினர் மனோபாவம்
வாலறிவனுக்கு எதற்கு ?

குழப்பச் சகதியில்
புரண்டுக் கிடந்தேன் நான்

என்னைக் கண்டு சிரித்த நண்பன்

"யானையைக் கூடையில் அடைக்கவும்
கோழியைச் சங்கிலியில் கட்டவும்
முயலுகிற மூடனாகிப் போனாய் நீ

நாசியால் கேட்கவும்
காதால் நுகரவும் எத்தனிக்கும்
கோட்டியாகிப் போனாய் நீ

அறிவுக்கும் நம்பிக்கைக்கும் என்றும்
ஏழாம் பொருத்தமே

அறிவு சாதிக்காததை
நம்பிக்கை சாதிக்கும்

அறிவு நம்பிக்கையை என்றும்
வம்புக்கே இழுக்கும்

பாலபாடம் இது
புரிந்தால் மட்டுமே
முன்னதற்கு விளக்கம் கிடைக்கும்

இல்லையெனில் குழப்பமே
கூடுதலாகிப் போகும்

இது நம்பிக்கை குறித்த விஷயம்
ஆராச்சிக்குரியதில்லை"என்றான்

பாலபாடம் கற்கத் துவங்குகிறேன் நான்

10 comments:

  1. நம்பிக்கை இல்லை என்றால் ஏசு, அல்லா, பார்த்தன்....எல்லாம் ஒன்றே....நம்பிக்கை தான் காரணம். நன்றாக அலசலில் ஒரு கவிதை...நன்றி ஐயா

    தம 2

    ReplyDelete
  2. இந்த பால பாடம் எங்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

    ReplyDelete
  3. //பஜனைக்கு உருகி
    பழனியைப் பார்க்க வரும் பார்த்தன்//

    அப்படி யாரும் என்னைப் பார்க்க வரவில்லையே?

    ReplyDelete
  4. நம்பிக்கை அறிவு சார்ந்ததாக இருந்தால் நல்லது. மூட நம்பிக்கைகளே மலிந்து கிடக்கின்றன. அறிவு சாதிக்காததை நம்பிக்கை சாதிக்கும் என்பதும் நம்பிக்கையே அறிவு சார்ந்தது அல்ல என்பது என் கணிப்பு.

    ReplyDelete
  5. அருமையான சிந்தனை அய்யா.
    கவிக்கோ அப்துல்ரகுமானின் “ராங்நம்பர்“ கவிதை யை நினைவூட்டியது. தொடர்க.

    ReplyDelete
  6. அனைவரையும் சற்றேனும் யோசிக்க வைக்கும் பாலபாடம் அருமை.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    சிந்தனைக்குஅறிவான கருத்து பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. இத்தனை நாள் நான் எங்கே தொலைத்தேன் இந்த பதிவுகளை...அருமை...

    ReplyDelete