Thursday, December 1, 2016

வெல்லுதலுன் நோக்கமெனில் உள்ளமதில் இதைக்கொள்...

அழகைச் சொன்னதைவிட
அழகாகச் சொன்னதும்
புரிந்ததைச் சொன்னதைவிட
புரியச் சொன்னதும்
நல்லதைச் சொன்னதைவிட
நன்றாகச் சொன்னதும்
நிலை பெறும் உலகிது
நினைவினில் இது கொள்

உள்ளத்தைச் சொன்னதை விட
உள்ளதுபோல் சொன்னதும்
உண்மையைச் சொன்னதைவிட
உண்மைபோல் சொன்னதும்
பயனுறச் சொன்னதைவிட
நயமுறச் சொன்னதும்
வென்றிடும் உலகிது
நெஞ்சினில்    இதைக் கொள்

சொல்வதைப் பொருத்தன்றி
சொல்பவனைப் பொருத்தும்
நல்லதனைப் பொருத்தன்றி
வெல்வதனைப் பொருத்தும்
நிலைமாறும் நிறம்மாறும்
கலையறிந்த  உலகமிது
நிலைத்திட  நினைக்கினில்
நினைவினில்  இதைக்கொள்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
என்கிற சொலவடை
மின்னுவதொன்றே  பொன்னென
முற்றாக  மாறி
காலம் வெகுவாகிவிட்டது
ஞாலம் குணம் மாறிவிட்டது
வெல்லுதலுன் நோக்கமெனில்
உள்ளமதில் இதைக்கொள் 


8 comments:

  1. ஒவ்வொரு வரியையும் நன்கு பின்னிப் பின்னி எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். :)

    ReplyDelete
  2. வைகோ ஸாரை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  3. ராஜேந்தர் வசனம் போல இருந்தது. இருப்பினும் நுணுக்கத்தை உணரமுடிந்தது.

    ReplyDelete
  4. யதார்த்த உலகை புரியவைக்கும் கவிதை .அருமை

    ReplyDelete
  5. அழகிய கோர்வை,,,யதார்த்தம்! ரசித்தோம்!

    ReplyDelete