Wednesday, April 5, 2017

புகழுடம்பு

தேடிநித்தம் சேர்த்ததெல்லாம்
தெருக்குப்பை ஆகிவிடும்
தேடியோடிப் படித்ததெல்லாம்
தொலைந்தெங்கோ  ஓடிவிடும்
கூடியாடிக் களித்ததெல்லாம்
வெறுங்கனவாய் மாறிவிடும்
தேடிவந்து காலனவன்
மூச்சடைக்க நடந்துவிடும்

வெளியோடி உள்ளோடி
உயிரதற்கு ஆதரவாய்
ஒலியதனைத் தினம்கடத்தும்
ஒப்பற்றச் சாதனமாய்
நொடிதோரும் உழைத்திட்ட
வளியதுவும் திசைமாறும்
வெளியோடு நின்றுடலை
பிணமாக்கி சுகம்காணும்

தினமுலவி வாழ்வதற்கும்
நிம்மதியாய் சாய்வதற்கும்
தினந்தோரும் வகைவகையாய்
தின்றுவுயிர் வளர்ப்பதற்கும்
மனமிளகித் தாய்போலத்
தனைத்தந்த நிலமகளும்
மனங்கெட்டு அரக்கியாகி
உடல்தின்னத் துணிந்துவிடும்

நதியாகித் தினமோடி
நாடெல்லாம் செழிப்பாக்கி
தவிப்பெடுத்த உயிரனைத்தின்
தாகமதை தினம்தீர்த்த
அதிமதுர நீரதுவும்
நிலைமாறும் முகம்மாறும்
பொதியான பிணம்கழுவும்
புழக்கடைநீர் போலாகும்

உடல்நலத்தைத் தினம்காக்கும்
உணவாக்க உறுதுணையாய்
கசடுயெனத் தினம்சேரும்
கழிவழிக்கப் பெருந்துணையாய்
உடனிருந்த பெருந்தீயும்
கொண்டகுணம் விட்டுவிடும்
உடலெரித்துப் பசியடக்கப்
பேராசைக் கொண்டுவிடும்

நான்கினையும் உள்ளடக்கி
ஏதுமில்லை என்பதுபோல்
காண்பதற்குத் தெரிந்தாலும்
கடவுள்போல் யாதுமாகி
ஆண்டுவரும் வெளியதுவும்
அரக்ககுணம் கொண்டுவுடல்
தாண்டிவரும் உயிரதனை
விழுங்கிடவே தினமலையும்

உடலோடு உயிரிருக்க
உள்ளன்பின் துணையோடு
உலகத்தார் மேன்மையுற
உழைக்கின்ற உழைப்பொன்றே
உடல்விட்டு உயிர்பிரிந்தும்
உலகுவிட்டு மறையாது
புகழுடம்பு எடுத்திங்கு
எந்நாளும் நிலைத்திருக்கும்

9 comments:

  1. உடலோடு உயிரிருக்க, உள்ளன்பின் துணையோடு
    உலகத்தார் மேன்மையுற, உழைக்கின்ற உழைப்பொன்றே ....

    ‘புகழுடம்பு’க்கான விளக்கம் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அருமையான வரிகள்

    ReplyDelete
  3. அருமையான வரிகள்

    ReplyDelete
  4. அற்புதமான வார்த்தைக் கோர்வைகள் கவிஞரே

    ReplyDelete
  5. 'தம் புகழ் நிறுவித் தாம் மாய்ந்தனரே' என்ற கருத்தைக் கவிதையாக்கி உள்ளீர்கள்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  6. யதார்த்தத்தை மிக நுணுக்கமாகக் கூறியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  7. அறிந்த அனைத்தையும் அறைகூவிச் செப்புகிறீர் வயது ஏற ஏற இம்மாதிரிச் சிந்தனைகள் சகஜம் போலும்

    ReplyDelete
  8. எது நிலைத்திருக்கும் எது நிலைத்திராது என்பதை நயம்பட ஒரு அழகான கவிதை மூலம் எடுத்துரைத்தற்கு மிக்க நன்றி.

    ReplyDelete