Tuesday, February 4, 2020

எழுதுபவர்களைக் குற்றம் சொல்லாதீர்கள்

எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள்
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

கொஞ்சம் தூரமாயினும்
அமருமிடமும்
பறிமாறும் நேர்த்தியும்
திருப்திப்படவில்லையாயினும்
 ருசியும் தரமும்
சரியாயிருந்தால் சரி
என்ற காலம் போய்.....

ருசியும் தரமும் கொஞ்சம்
முன்பின்னாயினும்
ஹோட்டல் இருப்பிடமும்
கார் பார்க் வசதியும்
பரிமாறும் நேர்த்தியும்
சரியாய் இருந்தால்தான்
திருப்திப்படுகிறது என்பதால்

வசதியற்றவனாயினும்
நேர்மையானவனாக
எளிமையானவனாக
கூப்பிட்ட குரலுக்கு
உடன் வருபவனாக
இருந்தால் போதும்
என்ற காலம் போய்.....

ஜெயித்தப்பின்
காணாமல் போகிறவனாயினும்
கிரிமினல் குற்றவாளியாயினும்
தேர்தல் சமயத்தில்
கொடுப்பவருள்
கூடுதலாய் கொடுப்பவனாய் இருந்தால்
சரியானவனாய்ப் படுகிறது என்பதால்

ஒப்பனைகளாயினும்
அழகுக் கடங்கியும்
பாவனைகளாயினும்
அறிவுக் கடங்கியும்
அளவுகோள்கள்
நெகிழும் தனமையற்றும்
இருந்த.காலம் போய்...

அழகென்பதே
ஒப்பனைகளாய்
அறிவென்பதே
பாவனைகளாய்
நெகிழத் தக்கதே
அளவுகோள்களாய் இருந்தால்தான்
சந்தைப்படுத்த முடிகிறது என்பதால்

சொல்லத் தக்கதை
பயனுள்ளதை
எளிமையாய்
மிக உறுதியாய்
சொல்வதென்பதே
மதிக்கத் தக்கதென
இருந்தகாலம் போய்...

பொய்யாயினும்
சுவாரஸ்யமாய்
பயனற்றதாயினும்
நேரங்கடத்தியாய்
இருக்கத் தகுந்ததே
மதிக்கத் தகுந்ததாய்
வியாபாரமாகிறது என்பதால்...

இது சரியானது
இதற்கானது எது என்பது போய் ...
எனக்கிது சரி
இதற்கானது எது
என்பதுவே
இன்றைய   சூழலின்
தர்மமாகிப் போனதால்

எப்போதும்,
இனியேனும்
எழுதுபவர்களைக்  குற்றவாளியாக்காதீர்கள்
எழுத்தாளர்களைக் குறைகூறி அலையாதீர்கள்

4 comments:

  1. உங்கள் ஆதங்கம் புரிகிறது.

    நல்லதொரு பகிர்வு. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

    ReplyDelete
  2. ஆதங்கம் ஆர்பரிக்கும் கடல் அலைகளாய் சீறி, எழுத்தில் CONTINUOUS FLOW உடன் வெளியாகி உள்ளது. பாராட்டுகள்.

    ReplyDelete