Monday, August 27, 2012

அந்த நீலக் கடல்


அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது
அந்த நீலக்கடல்

 கடற்கரையோரம்
யாருமற்ற தனிமையில்
"இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை "
என்கிற திடமான முடிவுடன்
கடல் நோக்கி விரைந்து கொண்டிருந்தான்
இளைஞன் ஒருவன்

தன்னுடன் விளையாடத்தான்
அலைகள் தத்தித் தத்தி வருவதான நினைப்புடன்
கரைக்கும் கடலுக்கும் இடையில் ஓடி
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாள்
சிறுமி ஒருத்தி

"காமத்தில் திளைப்பவர்களுக்குத் தேவை
அடர் இருளும் யாருமற்ற தனிமையும்
தூய காதலுக்குத் தேவை
காற்று வெளியும் கடற்கரையும்தான் "
காதல் மொழிகள் பேசி
காதலியைக் கரைத்துக் கொண்டிருந்தான்
காதலன் ஒருவன்

ஒவ்வொரு பருவத்திலும்
கடல் தன்னுடன் கொண்ட பரிச்சியத்தை
நெருக்கத்தை நேசத்தை
அசைபோட்டபடி கடல் தாண்டிய வெறுமையில்
எதையோ தேடிக்கொண்டிருந்தார்
பெரியவர் ஒருவர்

என்றும் போல
எப்போதும் போல
தனக்கென ஏதுமற்று
கண்போருக்குத் தக்கபடி
மிகச் சரியாகப் பொருந்தியபடி
அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது
அந்த நீலக் கடல்

39 comments:



  1. இளைஞன்,சிறுமி ,காதலன்,பெரியவர் இவர்களின் ஊடே நீலக் கடலை நீங்கள் பார்த்த பார்வை அருமை.




    ReplyDelete
  2. தங்களை சந்தித்ததில் முகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உங்களை மேடையில் மரியாதை செய்ய எனக்கு கிடைத்த அந்த நொடியை மறவேன்.. த ம 3

    ReplyDelete
  3. என்ன ஒரு கவிதை
    நான்கு முனைகளில் உயிர்ப்புள்ள கவிதை சார்

    ReplyDelete
  4. படிப்போருக்குத் தக்கபடி
    மிகச் சரியாகப் பொருந்தியபடி
    அகன்று விரிந்து பரந்து பல கருத்துக்களை
    சொல்லி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
    உங்களின் இந்த நீலக் கடல் கவிதை

    ReplyDelete
  5. ம்ம்..நேற்று எங்கள் மெரினா கடற்கரையில்
    நீங்கள் காற்று வாங்கிய போது எழுதிய கவிதை
    எப்போதும் போல் தத்துவக் கடல்.

    ReplyDelete
  6. "தனக்கென ஏதுமற்று
    கண்போருக்குத் தக்கபடி... ஆர்பரிக்கும் கடல். அருமையான விளக்கம்.

    ReplyDelete
  7. அருமை சார்... (என்னை விட்டுவிட்டு போய் விட்டீர்களே)

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)

    ReplyDelete
  8. எல்லாரும் பதிவர் சந்திப்பை பற்றி பதிவு போட்ட நிலையில் உங்களின் பதிவு ஒரு மாறுதல்...நன்றி ....த ம 5

    ReplyDelete
  9. //தனக்கென ஏதுமற்று
    கண்போருக்குத் தக்கபடி
    மிகச் சரியாகப் பொருந்தியபடி//


    அருமையான படைப்பு.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. கண்போருக்குத் தக்கபடி
    மிகச் சரியாகப் பொருந்தியபடி
    அகன்று விரிந்து பரந்து
    ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது
    அந்த நீலக் கடல் நீங்காமல் மனதில் நிறைந்தது!

    ReplyDelete
  11. இந்த “நீலக்கடல்“ ஆழமுள்ளது தான்!

    அருமைங்க ரமணி ஐயா.

    ReplyDelete
  12. கடலின் ஆழமும் ,அதை காண்போரின் மன ஆழமும் மிகப்பெரியது,அதில் உள்ள ஆர்ப்பரிப்புகள் நிறைய நிறையவே/

    ReplyDelete
  13. எந்தப் பருவத்தினரையும் ஈர்க்கும் விஷயங்களில் முதலானது கடல்! உற்சாகம்,அமைதி இரண்டையும் பிரதிபலிக்கும்! சலிப்பைத் துரத்தும்..!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. கரையில் நடக்கும் எத்தனை ஆர்ப்பாட்டங்களைக் கடல் தனக்குள் சேமித்து வைத்திருக்கும் !

    ReplyDelete
  15. வழக்கம் போல் அருமையான கவிதை (TM 9)

    ReplyDelete
  16. அவரவர் அனுபவத்திற்கேற்ப, வயதிற்கேற்ப பார்வைகள் வித்தியாசப்படும் அழகை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  17. பேராசிரியர் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய ஒரு நூலின் பெயர். “கடற்கரையிலே” என்பதாகும். இதில் கவிஞரும் கலைஞரும் கடற்கரையில் நின்று பேசுவது போன்று இலக்கியக் கட்டுரைகள் இருபது உள்ளன. அதே போன்று நமது கவிஞர் ரமணி அவர்கள் கடற்கரையில் நின்று “அந்த நீலக்கடல்”
    என்று பாடுகிறார். வார்த்தை விளையாட்டில் சிக்காத எளிமையான கவிதை.



    ReplyDelete
  18. என்றும் போல
    எப்போதும் போல
    தனக்கென ஏதுமற்று
    கண்போருக்குத் தக்கபடி
    மிகச் சரியாகப் பொருந்தியபடி
    அகன்று விரிந்து பரந்து
    ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது
    அந்த நீலக் கடல்

    அட அப்போ எங்கள் ரமணி ஐயா போல்
    என்று சொல்லுங்கள் :) வாழ்த்துக்கள்
    ஐயா கவிதையில் அழகிய சிந்தனை
    பொதித்து உள்ளீர்கள் .மேலும் தொடரட்டும் .

    ReplyDelete
  19. கடல் சொல்லும் பாடம்.
    ஹேமாவின் பின்னூட்டமும் நன்று.

    ReplyDelete
  20. உங்களை ஞாயிறு அன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அதிகம் பேச இயலவில்லை. இந்த வாரம் மதுரை வரும் வாய்ப்பு உள்ளது. முடிந்தால் சந்திக்கிறேன்

    ReplyDelete
  21. என்னேரமும் ஓய்வே இல்லாமல் இருக்கும் கடல் சொல்லும் பாடம்....

    நான்கு பேர்களின் பார்வையில் நன்று...

    த.ம. 13

    ReplyDelete
  22. மனிதர்களிடம் எத்தனையோ அனுபவங்கள் இருக்கிறது மற்றவரிடமும் உற்றவரிடமும் பரிமாறிக்கொள்ள....

    மனிதர்கள் மட்டும் தான் அனுபவங்கள் பகிரமுடியுமா? ஏன் நிலையற்று இருக்கும் இந்த மனிதர்கள் பகிர அனுபவங்கள் இருக்கும்போது சூல் கொண்ட கடல்கன்னி என்னிடமும் பார் எத்தனை எத்தனை அனுபவங்களும் இருக்கிறது என்று கடல் சொல்லுவது போல் கவிதை வரிகள் அமைத்தது சிறப்பு...

    வீட்டில் கிடைக்காத தனிமைக்காக சிலரும்...
    வீட்டில் இருந்தால் குழந்தைகளின் நச்சரிப்பும் மனைவியின் முணுமுணுப்பும் தாங்காத சிலரும்....

    காதலில் மொத்தமாய் திளைத்து உலகத்தை மறந்து காதலரும்...
    வெறுமையை மென்றபடி நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டு முதியோரும்...
    விளையாட நண்பர்களே இல்லன்னா என்ன கடலில் ஆடி ஓடி விளையாடலாமே ஆர்ப்பரிக்கலாமே என்று சின்ன குழந்தைகளும்....

    கவிதை வரியில் சொன்னபடி உலகம் வெறுத்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள கடல் அன்னை மடியை தஞ்சமடைய சிலரும்...

    வயிற்றுப்பிழைப்புக்காக அங்கே சிறுவர்களும் முதியோர்களும் பொருட்கள் விற்று குழந்தைகளுக்கு வித்தைகள் காண்பித்து கடலின் உப்புக்காற்றை சுவாசித்து அங்கேயே வானமே கூரையாய் வாழ்ந்துக்கொண்டு

    இப்படி எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் நிம்மதியை தரும் கடற்கரை பற்றி நீங்க கவிதை எழுதி இருக்கீங்கன்னா....

    கண்டிப்பா மெரினா பீச் பக்கம் போய் காற்று வாங்கி இருப்பீங்களோன்னு நினைச்சேன்.. ஸ்ரவாணியின் பின்னூட்டம் அதை மெய்ப்பித்தது...

    எல்லோரும் ஏதோ ஒரு காரணத்துக்காக கடற்கரை போய் இருக்காங்கன்னா...

    நீங்க காற்று வாங்க போய்விட்டு கவிதையை சுமந்து இங்கே வடிச்சிருக்கீங்க ரமணி சார்...

    காற்று வாங்கப்போய்விட்டு அருமையான சிந்தனையை உயிர்ப்பித்து எல்லோருக்கும் புரியும்படி எளிய வரிகளில் வார்த்தைகளை கோர்த்து வழங்கிய கவிதை மிக சிறப்பு...

    அன்பு வாழ்த்துகள் ரமணி சார்...


    ReplyDelete
  23. கடைசி para கொள்ளையடிக்கிறது..

    ReplyDelete
  24. மிக மிக அருமை சார்.
    http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

    ReplyDelete
  25. கடற்கரை
    காலத்தை போக்கதான்
    காதலியுடனா
    அல்லது ,,,,,,?
    அவரவர் சூழ்நிலையை பொறுத்து


    இனிய சந்திப்பு
    பதிவர் விழாவில்

    நன்றி

    ReplyDelete
  26. '''...எப்போதும் போல
    தனக்கென ஏதுமற்று
    கண்போருக்குத் தக்கபடி
    மிகச் சரியாகப் பொருந்தியபடி
    அகன்று விரிந்து பரந்து
    ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது
    அந்த நீலக் கடல்....''
    நம் மனதையும் அப்படியே வைதத்தால்
    அந்த சொர்க்கும் நம் காலடியில்.
    நல்ல வரிகள்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  27. ஒவ்வொரு பருவத்திலும்
    கடல் தன்னுடன் கொண்ட பரிச்சியத்தை
    நெருக்கத்தை நேசத்தை
    அசைபோட்டபடி கடல்

    இப்படி எத்தனை நெருக்கங்களை நெருடல்களை பிரிவுகளை உறவுகளை சந்தித்திருக்கும் கடல்
    அருமை ஐயா,கவிதை

    ReplyDelete
  28. "காமத்தில் திளைப்பவர்களுக்குத் தேவை
    அடர் இருளும் யாருமற்ற தனிமையும்
    தூய காதலுக்குத் தேவை
    காற்று வெளியும் கடற்கரையும்தான் "
    ////////////////////////

    அர்த்தமுள்ள வரிகள் சார்......|TM 15

    ReplyDelete
  29. காற்று வாங்கப் போன நீங்கள் கவிதை வாங்கி வந்திருப்பதில் வியப்பில்லை ரமணி சார்.
    அந்த நீல(ள)க் கடலும்,கடற்கரைக் காட்சியும் உங்கள் பார்வையில் படமாகியிருக்கும் விதம் அருமை.

    ReplyDelete
  30. கடலலை போல தொடர்ந்து பதிவுகளால் மனதில் இடம்பிடித்துவிட்டீர்....

    ReplyDelete
  31. கடல்.... இயற்கையின் அழகிய படைப்பு... உங்கள் கவிதை போல...

    ReplyDelete
  32. கடலின் தரப்பில் பார்வையா சாட்சியா என்ற கேள்வியை எழுப்பிவிட்டுப் போனது கவிதை. மனிதரின் தரப்பில் கடலுக்கு எத்தனை விதப் பயன்பாடுகள் என்ற உண்மையையும்.

    ReplyDelete
  33. கடல் தன்பாட்டுக்கு தனது வேலையை செய்துகொண்டிருக்கிறது

    கடல் குறித்த அவரவர் பார்வையும் நோக்கமும் தான் வெவ்வேறு .
    மிக அழகாய் கடலை ரசித்து கவிதையாய் அளித்ததற்கு நன்றி அண்ணா .

    ReplyDelete
  34. பார்க்கப் பார்க்கத் திகட்டாத கடல். சில மணித் துளிகள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது கற்பனைகள்கவிதையாக மாறும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. கடலும் யானையும் பார்க்க பார்க்க திகட்டாதவை

    ReplyDelete