Tuesday, September 4, 2012

பெண்ணெழுத்து

ஆட்சிப்பொறுப்பில்
மக்களின் தலையெழுத்தை
நிர்ணயிக்கும் நிலைக்கு
உய்ரந்திருந்த போதும்

பல்வேறு நிர்வாக நிலைகளில்
ஆணுக்கு நிகர் என்பதனைத் தாண்டி
 முயன்று முதலெழுத்தாய்
முன்னேறிய போதும்

சமூகத்தின் பல்வேறு தளங்களில்
ஆணுக்கு மிகச் சமமாய்
சமுக மாற்றத்திற்கு உயிர் மெய்யாய்த்
திகழ்கிற போதும்

குடும்ப உறவுகளில் மட்டும்
பெண்ணென்பவள் இன்னும்
தனித்து இயங்க இயலாது
ஒரு ஒற்றெழுத்தாகவோ
துணையெழுத்தாகவோ மட்டும்
இருந்து தொலைக்கவேண்டியிருக்கிறது ?

பெயரில் ஆயுதம் இருந்தும்
அதிகம் பயன்படுத்தப்படாது துருப்பிடித்திருக்கும்
ஆயுத எழுத்தைப் போல
சக்தி சக்தியெனச் சொல்லியே
மூலையில் அமர்த்தி சாமரம் வீசி
செயல்படவிடாது ஏய்க்கும்
ஆணாதிக்கச் சமூகத்தினைப் புரியாத வரையில்
பெண்ணினத்தின் தலையெழுத்தும்
ஒற்றெழுத்தும் துணை எழுத்தும் தானோ  ?

37 comments:

  1. நம் தந்தையர் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் நம் காலத்தில் பெண்கள் மீதான குடும்பக் கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டுள்ளன! எதிர்காலத்தில் தளர்தல் மேலும் வேகமெடுக்கும் என நம்புவோம்!

    ReplyDelete
  2. ஒவ்வொரு வசனங்களும் ஒவ்வொரு அம்புகளாய்...
    ///////////////////
    பெயரில் ஆயுதம் இருந்தும்
    அதிகம் பயன்படுத்தப்படாது துருப்பிடித்திருக்கும்
    ஆயுத எழுத்தைப் போல//////////////////////

    ஆழமான வரிகள்..

    த.ம 3

    ReplyDelete
  3. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.தவிர பெண்களில்லா உலகம் வெறும் மாயை ஆகி விடும்.அவர்களது பங்க் இல்லாத சமூகம் வெற்றுக்கூடாகி காட்சி தருவது இயல்பு/

    ReplyDelete
  4. என்னதான் மாற்றங்கள் வந்தாலும் இன்னும் ஆணாதிக்க சமுதாயமாகவே இருக்கிறது என்ற தங்கள் கருத்து உண்மைதான்.
    அறிவு பெண்ணுரிமையை ஏற்கிறது.மனம் பெண்ணுரிமையை மறுக்கிறது. காலம் தான் மாற்றும்.

    ReplyDelete
  5. குடும்ப உறவில் பெண்ணின் நிலையை மிகவும் அற்புதமாய் பதிவு செய்திருக்கிறீர்கள். சக்தி சக்தியென சொல்லி, மூலையில் அமர்த்தி சாமரம் வீசும் சாமான்யர்களின் சாமர்த்தியம் புரியாதவளா பெண்? புரிந்தும் பொறுமை காக்கும் ரகசியம், குடும்பக்கட்டமைப்பு தன்னால் சிதறிவிடக்கூடாதே என்னும் சிரத்தையால்தானே. பெரும்பாலானப் பெண்டிரின் வாழ்வியலை நுட்பமாய்ப் பதிவு செய்தமைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  6. இந்த நிலை மாறி வருகிறது... கண்டிப்பாக மாறியே தீரும்...(6)

    ReplyDelete


  7. // குடும்ப உறவுகளில் மட்டும்
    பெண்ணென்பவள் இன்னும்
    தனித்து இயங்க இயலாது
    ஒரு ஒற்றெழுத்தாகவோ
    துணையெழுத்தாகவோ மட்டும்
    இருந்து தொலைக்கவேண்டியிருக்கிறது //

    இதுதான் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் அவல நிலை!உண்மை படமாகவும், பாடமாகவும இவ்
    வரிகள் உணர்த்துகின்றன!நன்றி இரமணி!

    ReplyDelete
  8. // சக்தி சக்தியெனச் சொல்லியே
    மூலையில் அமர்த்தி சாமரம் வீசி
    செயல்படவிடாது ஏய்க்கும்
    ஆணாதிக்கச் சமூகத்தினைப் புரியாத வரையில்
    பெண்ணினத்தின் தலையெழுத்தும்
    ஒற்றெழுத்தும் துணை எழுத்தும் தானோ ?//

    முற்றிலும் உண்மை நண்பரே பட்டமாய் பறந்தாலும் நூல் இன்னும் ஆண்கள் கையில் தான்

    ReplyDelete
  9. தங்கள் எழுத்து பிரமாதம்!

    ReplyDelete
  10. குடும்ப உறவுகளில் மட்டும்
    பெண்ணென்பவள் இன்னும்
    தனித்து இயங்க இயலாது
    ஒரு ஒற்றெழுத்தாகவோ
    துணையெழுத்தாகவோ மட்டும்
    இருந்து தொலைக்கவேண்டியிருக்கிறது ?//இந்நிலைமை இப்பொழுது மாறிவருகிரது.

    ReplyDelete
  11. அனைத்திற்கும் தான் மூளைச்சலவை செய்யப்படுவதும் கூட
    புரியாமல் நம்பி வாழும் பெண்களுக்கு ஏளனமும் எகத்தாளமும்
    மிச்சம். புரிந்து தன்மானமும் , பொருளாதார சுதந்திரம் கொண்டு
    துணிவே துணை என்று தனியாக வாழ்ந்தால் ' திமிர் பிடித்தவள் '
    என்ற பட்டம் மிச்சம் . அந்த ஒற்றுஎழுத்தின் , துணை எழுத்தின்
    துணை தேடி இணைய முதல் எழத்து வரும் நேரத்தில் அதுவே
    உயிர் எழுத்து ஆகி விடும் தருணத்தை ஆணினம் ஒப்புக்கொண்டு துணிவாக
    ஏற்றுக் கொள்ளும் போது விடிவு ஜன்னல் திறக்கும்.

    ReplyDelete
  12. பெண்ணெழுத்து

    உயிர் எழுத்து !!!

    ReplyDelete
  13. போலியாக பெண்ணுரிமையை பேசும் அரசியல்வாதிகளுக்கும் ,சமூகத்துக்கும் இது ஒரு சாட்டையடி கவிதை...

    ReplyDelete
  14. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
    அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
    உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
    யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
    - பாடல்: கண்ணதாசன் (படம்: பறக்கும் பாவை)

    ReplyDelete
  15. சரியான கோணத்தில்.....மிக சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  16. //சமூகத்தின் பல்வேறு தளங்களில்
    ஆணுக்கு மிகச் சமமாய்
    சமுக மாற்றத்திற்கு உயிர் மெய்யாய்த்
    திகழ்கிற போதும்
    குடும்ப உறவுகளில் மட்டும்
    பெண்ணென்பவள் இன்னும்
    தனித்து இயங்க இயலாது
    ஒரு ஒற்றெழுத்தாகவோ
    துணையெழுத்தாகவோ மட்டும்
    இருந்து தொலைக்கவேண்டியிருக்கிறது ?//


    உண்மை

    ReplyDelete
  17. ஹை நான் ஓட்டு போட்டது வந்திருச்சே :)

    ReplyDelete

  18. ஆட்சியில் உயிரெழுத்தாகவும் , சமூகத்தில் மெய் எழுத்தாகவும் இருக்கும் பெண் குடும்ப உறவுகளில் உயிர்மெய் எழுத்தாய் விளங்குகிறாள் , ஒற்றெழுத்தாக அல்ல என்பது என் அபிப்பிராயம்

    ReplyDelete
  19. அட்டகாசமான தலைப்பு ( பெண்ணெழுத்து) சீரிய சிந்தனை.... ஆரம்பமே அசத்தல்.... ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வரியும் ரசித்து மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.. நானும் பெண்ணென்பதால் தானோ???

    அரசியலில், பொதுவாழ்வில், நிர்வாகத்தில், அலுவலகத்தில் இப்படி எல்லா இடத்திலும் பெண் விஸ்வரூபம் எடுத்தாலும் வீட்டில் மட்டும் ஆணைச்சார்ந்து இருக்கும் கொடுமையை மிக அருமையாக அலசி இருக்கிறீர்கள் ரமணிசார்... எப்படி எப்படி? பெண்ணெழுத்து தலைப்பில் தொடங்கி... முதலெழுத்தாய் பெண்ணை கம்பீரமாய் நடக்கவிட்டு.... உயிர் மெய்யாய்.... பெண் என்பவள் இங்கு எத்தனை முக்கியமாக கருதப்படுகிறாள் என்று போற்றியது மிகச்சிறப்பு.....

    எங்கும் பெண்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் குடும்பத்தில் மட்டும் பெண் ஆணை சார்ந்து இருப்பதை மிக துல்லியமாக துணை எழுத்து என்று எழுதி இருப்பது அருமை. ஒற்றை எழுத்து என்று குறிப்பிட்டது ஒற்றை பெற்றோராகவும் விதவையாகவும் பொருள் கொள்ளலாம் தானே ரமணி சார்?? தனித்து இயங்க இயலாது என்பது இரண்டாம் பட்சம் ரமணி சார்... முதலில் கருத்தை அல்லது சஜஷனை ஏத்துக்கிறாங்களா வீட்டில் எல்லோரும்?

    ஒரு முக்கியமான முடிவெடுக்கும்போது வீட்டில் உள்ள பெண்களிடம் என்ன செய்யலாம் சொல்லுன்னு கேட்பாங்களா? ஹூம்... இங்க குவைத்ல ஒரு முறை ஒரு பூஜைக்கு போயிருந்தேன்.... அங்கு பூஜை முடிய மதியம் மேல் ஆகிவிட்டது... பூஜை முடிந்ததும் என்ன செய்தார்கள் தெரியுமோ?? பெண்கள் குழந்தைகளை முதலில் உட்காரவைக்காமல் முதலில் ஆண்களை உட்காரவெச்சு பரிமாறினா சாப்பாடு....

    சில பேரோட வீட்ல இன்னமும் இது தான் நடக்கிறது....

    பெண் என்ற சக்தி விஸ்வரூபமெடுத்தாலும் அடக்கி மூலையில் உட்கார்த்தி வைக்கிறதுல ரொம்பவே மும்முரமா இருப்பாங்கன்னு சாட்டையடியா சொன்ன வரிகள் அசத்தல் ரமணிசார்....

    உன்னால முடியாது... நீ சும்மா இரு.... உனக்கு ஒன்னும் தெரியாது.... கம்முனு இரு... ஆம்பிளைகள் பேசும்போது என்ன ஒரு தைரியம் இடையில் வந்து கருத்துச்சொல்ல... ஏண்டா உன் பொண்டாட்டியை அடக்கிவைக்கமாட்டியா??

    இது தான் நிதர்சனம்....

    அழகிய உவமை, அற்புதமான வரிகள்.... பெண்ணை ஒடுக்கி வைத்து ஒடுங்கி போகவைப்போர் மத்தியில் பெண்ணுக்காக, பெண்ணின் சக்தியை எடுத்துக்காட்ட, பெண்ணை தனித்து இயங்கவிட்டு பாருங்க... பெண்ணின் மென்மை, பெண்மைன்னு பேசிக்கிட்டு இருக்காம பெண்ணாலும் சாதிக்கமுடியும்னு சாதித்த பெண்களை நினைத்து பாருங்கன்னு அழகிய கவிதை இயற்றி ரசிக்கவைத்தீர்கள் ரமணிசார்...

    பெண்ணினத்திற்காக அவர்கள் கம்பீரத்தை அறியச்செய்தமைக்கு அன்பு நன்றிகள் ரமணிசார்...

    ReplyDelete
  20. ஒரு ஒற்றெழுத்தாகவோ
    துணையெழுத்தாகவோ மட்டும்
    இருந்து தொலைக்கவேண்டியிருக்கிறது ?


    அழுத்தமான ‘ம்’ என்னிடமிருந்து !

    ReplyDelete
  21. ஒற்றெழுத்து மிக அவசியம் அல்லவா?
    சக்தி இன்ரி சிவம் தனித்து இயங்க முடியுமா?
    நல்ல சிந்தனை.

    ReplyDelete
  22. உயிரும் மெய்யும் சேர்ந்தால் தான் உயிர்மெய் எழுத்து.

    இங்கே குடும்ப உறவில் பெண்ணெழுத்து என்பது உயிரும் அவளே மெய்யும் அவளே என்றே கொள்ளவேண்டும் என்பது தான் என் கருத்து. பெண்கள் பேதைகள் அல்ல.
    அவள் தனக்காக வாழும் சுயநலவாதி இல்லை.
    விட்டுக்கொடுத்து வாழும் தன் நலவாதியாக வாழுகிறாள்.
    ஆண்கள் விட்டுக்கொடுத்துப் பாருங்கள்....

    ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணின் பின்னும்
    ஒரு பெண் நிச்சயம் இருப்பாள். (பழைய மொழி தான்)

    ரமணி ஐயா... பெண்களைத் தாழ்த்தித் தாழ்ந்தவர்களாகக் காட்டியது போதும். அவர்களை உயர்த்துங்கள். மேலும் உயர்வார்கள்.

    நன்றி ரமணி ஐயா.


    ReplyDelete
  23. உண்மையான கருத்துக்கள்! இன்னும் பல இடங்களில் பெண்கள் மிதிக்கப்படுகிறார்கள்!

    இன்று என் தளத்தில்
    பழஞ்சோறு! அழகான கிழவி!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

    ReplyDelete
  24. //பெயரில் ஆயுதம் இருந்தும்
    அதிகம் பயன்படுத்தப்படாது துருப்பிடித்திருக்கும்
    ஆயுத எழுத்தைப் போல
    சக்தி சக்தியெனச் சொல்லியே
    மூலையில் அமர்த்தி சாமரம் வீசி
    செயல்படவிடாது ஏய்க்கும்
    ஆணாதிக்கச் சமூகத்தினைப் புரியாத வரையில்
    பெண்ணினத்தின் தலையெழுத்தும்
    ஒற்றெழுத்தும் துணை எழுத்தும் தானோ ?//

    சிறப்பான சிந்தனை....

    த.ம. 13

    ReplyDelete
  25. துருப்பிடித்த ஆயுத எழுத்து - சிந்திக்க வைக்கும் படிமம்.

    ReplyDelete
  26. //துணையெழுத்தாகவோ மட்டும்
    இருந்து தொலைக்கவேண்டியிருக்கிறது ?//

    பெண்ணியம் பேசும் ஆண்கள் மிகவும் குறைவு.. நல்ல சிந்தனை நல்ல கவிதை அருமை..

    ReplyDelete
  27. //ஒற்றெழுத்தும் துணை எழுத்தும் தானோ ?//

    அதானே...

    ReplyDelete
  28. துருப்பிடித்த ஆயுத எழுத்து
    அருமையான சிந்தனை.
    இந்நிலை நிச்சயம் ஒரு நாள் மாறும்

    ReplyDelete
  29. அருமையான பகிர்வு .வயதில் மட்டும் அல்ல அனுபவத்திலும் பெரியவர் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  30. ''..அறிவு பெண்ணுரிமையை ஏற்கிறது.மனம் பெண்ணுரிமையை மறுக்கிறது. காலம் தான் மாற்றும்...''Murali.

    காலமும் மாற்றுமோ தெரியாது.
    இவைகளைக் கேட்டும் வாசித்தும் புளித்து விட்டது.
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  31. பெண்ணை உணர்ந்து எழுதிய விதம்...உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

    ReplyDelete
  32. சிந்திக்கத் தூண்டும் நல்லதொரு கவிதை !

    ReplyDelete
  33. ரமனி ஐயா,உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறது என் கவிதை முயற்சி.

    ReplyDelete