Sunday, March 16, 2014

மூடுபனி

அன்று விருதுநகரில் நடைபெற்ற என் உறவினரின்
திருமணத்திற்குச் சென்றிருந்தேன்

மறுநாள் அவசியம் அலுவலகம் செல்லவேண்டும் லீவு
எடுக்கமுடியாது என்கிற  நிலைமை இருந்ததாலும்
திருமண முகூர்த்தம் அதிகாலையாக இருந்ததாலும்
முதல் நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பிற்கே
சென்றுவிட்டு இரவு மண்டபத்தில் தங்கிவிட்டு மறுநாள்
முகூர்த்தம் முடிந்ததும் மதுரை திரும்ப
 உத்தேசித்திருந்தேன்

மாலை டிபன் இரவு சாப்பாடு எல்லாம் முடித்து
இரவு தூங்கத் துவங்குகையில்தான் விருது நகர்
கொசுவின் அருமை பெருமைகள் புரிய ஆரம்பித்தது

மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் இருக்கிற
அறைகளைபங்கிட்டுக் கொள்ள
பெண்வீட்டைச் சார்ந்தவன் என்பதால்
இருக்கிற இடத்தில் அட்ஜஸ்ட் செய்து
கொள்ளவேண்டிய நிலைமை,

என்னால் இரவு சாப்பிடாமல் கூட இருந்துவிட முடியும்
ஒரு நாள் இரவு தூக்கம் கெட்டால் மறு நாள்
கிறுக்குப் பிடித்தவன் போலாகிவிடுவேன்
என் உடல் வாகு அப்படி.

திருமண மண்டபத்திற்கு அருகில் லாட்ஜ் ஏதும்
இல்லையென்பதால் என்ன செய்வது
என குழப்பத்தில் இருந்தபோதுதான்
 "என்ன மாப்பிள்ளை..எப்போது வந்தீர்கள் "
என விசாரித்தபடி நான் படுக்கத் தாயாராகிக்
கொண்டிருந்த இடத்திற்குசோமு வந்தார்.

சோமுவுக்கு என்னைவிட ஐந்து வயது கூட இருக்கும்
சம்பந்த முறையில் எனக்கு உறவு
எனது ஒன்று விட்ட மைத்துனர் உறவாக வேண்டும்
எப்போதும் என்னை அதிக உரிமையுடன் மாப்பிள்ளை
எனத்தான் அழைப்பார்.அவர் பேச்சு எப்போதும்
உச்சஸ்தாயியிலும் இருக்கும்.அதில்
அதிக அன்னியோன்யமும் இருக்கும்

எதனாலேயோ எனக்கு சம்பந்த வகையில்
அவரைரொம்பப் பிடிக்கும். அவரும்  என்னிடம்
அதிக உரிமை எடுத்து பேசுவதில் இருந்து
அவருக்கும் அப்படித்தான் இருக்கும்
என்கிற நம்பிக்கை  எனக்கும் உண்டு

அருகில் வந்தவர் "கொசுக்கடியில் இந்த ஹாலிலா
படுக்கப் போகிறீர்கள்.இங்கே ஒரு லாட்ஜில் ரூமுக்குச்
சொல்லி இருக்கிறேன்.இப்போது கார் வரும்
இருவரும் போய் அங்கு தங்கி விட்டு குளித்து முடித்து
ஃபிரஸ்சாக அதிகாலையில் வருவோம் "என்றார்

அவர் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே
வாசலில் மிக உயர்தரக் கார் ஒன்று வந்து நின்றது
அதிலிருந்து யுனிஃபாம் அறிந்த டிரைவர் ஒருவர்
 இறங்கிவந்து அவருடைய சூட்கேஸை
 கையில் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடக்க
நானும் அவரைத் தொடர்ந்தேன்

அந்தக் காரின் மதிப்பு,அந்த டிரைவர் காட்டிய அதீத
மரியாதை எனக்கு ரொம்ப ரொம்ப
வித்தியாசமாகப்பட்டது

மூன்று வருடத்திற்கு முன்னால்...

ராமனாதபுரம் ஜில்லாவில் மிகச் சாதாரணமான
ஒரு கடலோரக் கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில்
அவர்கள் கொடுத்த ஒரு அறை வீட்டில் அவர்கள்
கொடுக்கிற மிகச் சொற்பமான ஊதியத்தையும்
அரிசியையும் நம்பி தன் மனைவி மக்களுடன்
திருமணம் ஆகாத இரண்டு தங்கைகளுடன்
மிகக் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தவர்.....

இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில்
ஒரு மிகப் பெரிய வீட்டை வாங்கி இன்னும்
கூடுதலாக செலவு செய்து மிக மிக ஆர்பாட்டமாக
கிரஹப் பிரவேசம் செய்ததும்.

கடந்த வருடம் தனது மூத்த மகளுக்கு அதிக நகையும்
வரதட்சனையும் கொடுத்து இதுவரை அந்த ஊரில்
யாரும் செய்யாத அளவில் மிகச் சிறப்பாக திருமணம்
செய்து வைத்ததும்...

இப்படி வருகிற இடங்களில் எல்லாம் மிகப் பெரிய
இடத்து தொடர்புகளை ஏற்படுத்தி வைத்து இருப்பதுவும்..

எங்கள் உறவினர்களுக்கு மத்தியில் அவர் குறித்த
ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது

நானும் திருமணமான புதிதில் அவர் வீட்டிற்குப்
போய் அவருடைய வறிய நிலையை அறிந்திருந்தவன்
என்கிற முறையிலும் ,கடந்த மூன்று ஆண்டுகளில்
அவர் கொண்ட அபரிதமான வளர்ச்சிக் குறித்து
எனக்கும் ஏதோ ஒரு சந்தேகம் இருந்து
கொண்டே இருந்தது

அந்தக் கார் விருதுநகரிலேயே அதிக வசதிகள் கொண்ட
அதிக வாடகைக் கொண்ட லாட்ஜில் நுழைந்ததும்,,,

முன் சென்ற டிரைவர் அந்த ஏ ஸி அறையில்
சோமுவின் பெட்டியை செல்ஃபில்
மிகப் பௌமியமாக வைத்துவிட்டு
" ஐயா எதுவேணுமின்னாலும் உடன்
போன் செய்யச் சொன்னார்கள்
நீங்கள் ஊரில் இருக்கிற வரையில் காருடன்
என்னையும் உங்களுடன் இருக்கச் சொன்னார்கள் "
என்றதும்

எனக்கும் நிச்சயம் இவரிடம் ஏதோ ஒரு  மர்மம்
இருக்கிறது என ஊர்ஜிதமாக ஆரம்பித்தது

(தொடரும் )

26 comments:

  1. சிறந்த பகிர்வு
    தங்கள் தொடரை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  2. ஆவலுடன் படித்து வரும் சமயம் "தொடரும்" போட்டு விட்டீர்களே.

    ReplyDelete
  3. காத்திருக்கிறோம் தொடருக்காக. இருந்தாலும் கும்பிடபோன தெய்வம் குறுக்க வந்தது போல் ரூமும் கிடைத்தது விட்டது. கொசுக்கடியில் இருந்தும் தப்பித்து விட்டீர்கள்.
    தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  4. தொடர்ந்து வருகிறேன்.

    ReplyDelete
  5. கொசுக்கடியில் இருந்து,மர்ம் வலையில் சிக்கிக் கொண்டீர்கள் போலிருக்கிறது.
    தொடர்கிறோம் ஐயா

    ReplyDelete
  6. மர்மத்தை அறிய ஆவலுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete
  7. சுவாரசியமான தொடக்கம், சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்கள்

    ReplyDelete
  8. என்னடா தொடரும் என்று சொல்லி எந்த பதிவும் உங்கள் தளத்தில் வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனது நினைவு நிஜமாகிவிட்டது

    ReplyDelete
  9. மர்மங்கள் தொடருமா?தொட்டுத்தொடர்கிற மனித வாழ்வின் அங்கமாய் வசதியும் அதுஅல்லாமலும் இருக்கிறதனம் எப்பொழுதுமே மனிதனை நுகர்ந்து பார்க்கச்செய்து கொண்டே/

    ReplyDelete
  10. தொடர்கிறேன்... மர்மம் என்ன என தெரிந்து கொள்ள......

    ReplyDelete
  11. தொடரும் போட்டு தவிக்க வைத்து விட்டீர்களே !
    த ம 11

    ReplyDelete
  12. ஆஹா! இப்படித் தொடரும் போட்டுக் காக்க வைத்து விட்டீர்களே! மூடுபனியைக் சீக்கிரம் திறந்து விடுங்கள்!

    த.ம.

    ReplyDelete
  13. மர்மம் சுவாரஸ்யமாக இருக்கிறது..!

    ReplyDelete
  14. சிறப்பான தொடர் மேலும் சிறப்பாகத் தொடரவும் வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  15. சுவாரஸ்யமாக செல்கிறது! தொடர்கிறேன்!

    ReplyDelete
  16. தொடர்கிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  17. என்னங்க, நம்பளுக்கு போட்டியா நீங்களும் கதை எழுத வந்தட்டீங்க ?

    ReplyDelete
  18. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களிடமிருந்து சுவையான ஒரு சஸ்பென்ஸ் தொடர். தொடர்கின்றேன்!

    ReplyDelete
  19. தலைப்பைப்பார்த்தால் பனி விலகினால் காட்சி தெரியும் என்பது போல் உங்கள் சந்தேக மூடுபனி அகன்றால் உண்மை காட்சி கிடைக்கும் காத்து இருக்கிறேன்.
    மூடுபனி விலக.

    ReplyDelete
  20. ஆவலுடன் தொடர்கிறேன். கொசுக்கடி அனுபவங்களை நினைவு படுத்திவிட்டத்து இந்தப் பதிவு.

    ReplyDelete
  21. மூடுபனின்னு தலைப்பு வைக்கும்போதே தெரிந்துக்கொண்டே.. மர்மக்குகையில் எங்களை நிற்க வைக்க போகிறீர்கள் என்று...

    சாப்பிடாம கூட இருந்துடமுடியும் ஆனால் உறக்கம் இல்லாமல் மனிதன் பித்துப்பிடித்தவன் போலாவான் என்பது சரியான வார்த்தை...

    கொசுக்கடி மனிதனிடம் தன் பசிக்கு ரத்தம் எடுத்துக்கொண்டு விட்டிருந்தால் பிரச்சனை இல்லை. நோயை பரப்புவது, அது கடித்து முடித்தப்பின் தான் நமக்கு முழிப்பு வந்து தட்டுமுன் பறந்துவிடும் நாம் சொறிந்துக்கொண்டே இருக்கும் நிலை. தூக்கம் கலைந்த எரிச்சல் இருந்துக்கொண்டே இருக்கும்...

    சோமுப்பற்றிய விவரங்கள் படித்து எனக்கும் அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறது...

    வறிய நிலையில் இருந்த மனிதன் நேர்மையான முறையில் சம்பாதித்திருந்தால் இத்தனை சீக்கிரம் நடக்கும் காரியம் இல்லை.. சினிமாவா இது சடார்னு பணம் வந்து கொட்ட...

    இத்தனை வசதிகளுடன் லாட்ஜா....

    என்ன நடக்கப்போகிறதோ பார்ப்போம்...

    அருமையா எழுதுறீங்க ரமணி சார்...

    த.ம.16

    ReplyDelete
  22. அதானே திடீரென எப்படி வசதி அறியும் ஆவலில்.

    ReplyDelete