Tuesday, May 6, 2014

கவிமூலம்

சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
தாண்டிப் போகும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா ?

இனிய நினைவு உன்னில் பெருக 
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
பறக்க நினைக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா ?

வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வார்த்தை
நீயும் பேச மாட்டியா ?

கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-நீயும்  
அந்த  ராமா னுஜனைப் போல
உரத்துக்  கதற மாட்டியா ?

விதையாய் கவிதை அனவரி டத்தும்
நிறைந்து தானே  கிடக்கு
விரைந்து வெளியே  விளைந்து வரவே
தவித்துத் தானே  கிடக்கு
முறையாய் இதனைப்  புரிந்து  கொண்டால்
மட்டும்  போதும் போதுமே--உன்னுள்  
நிறைவாய்க்  கவிதை நூறு  கோடி
தானாய்ப்  பெருகிக் கொட்டுமே  ! 

17 comments:

  1. // அந்த ராமானுஜனைப் போல... //

    கவிதை அருவியாய் பொங்குகிறது ஐயா...

    ReplyDelete
  2. ''..விரைந்து வெளியே விளைந்து வரவே
    தவித்துத் தானே கிடக்கு
    முறையாய் இதனைப் புரிந்து கொண்டால்
    மட்டும் போதும் போதுமே..'' கவிதை 100 கொட்டுமே.....
    தங்கள் சிந்தனைகள் போல.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

  3. வணக்கம்!

    சந்தம் ஒலிர்கின்ற சிந்து படைத்துள்ளீா்
    முந்தும் சுவையை மொழிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. கவிதை உருவாகும் கணங்களை எல்லாம் ரசித்தேன். அருமை.

    ReplyDelete
  5. #விதையாய் கவிதை அனவரி டத்தும்
    நிறைந்து தானே கிடக்கு#
    எங்கே எல்லோரிடமும் இருக்கு ?,காதலர்களிடம் வேண்டுமானால் இருக்கும் !
    த ம 6

    ReplyDelete
  6. கண்ணில் காணும் காட்சி எல்லாம்
    கனவு போலத் தானே
    தண்ணீர் மேலே போட்ட கோலம்
    தானே வாழ்வு தானே

    முதிர்ச்சியாய்
    முகிழ்த்த வரிகள்.அருமை..!

    ReplyDelete
  7. முறையாய் இதனைப் புரிந்து கொண்டால்
    மட்டும் போதும் போதுமே--உன்னுள்
    நிறைவாய்க் கவிதை நூறு கோடி
    தானாய்ப் பெருகிக் கொட்டுமே ! //

    முறையாக புரிந்து கொண்டதால் தான் கவிதை தானாய் கொட்டுகிறது உங்களிடமிருந்து.
    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. என்னவோ போங்கள்....

    நான் சில நேரங்களில் எவ்வளவு யோசித்தாலும்.... ஊஹீம்.... உள்ளத்திலிருந்து வெளியே வரமாட்டேங்கிறது.
    நான் உண்மையைத் தான் சொல்கிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  9. கொட்டும் கவிதை மழையில் நனையக் காத்திருக்கிறோம்! நன்றி ஐயா!

    ReplyDelete
  10. அருணா செல்வம் said...
    என்னவோ போங்கள்....

    நான் சில நேரங்களில் எவ்வளவு யோசித்தாலும்.... ஊஹீம்.... உள்ளத்திலிருந்து வெளியே வரமாட்டேங்கிறது.
    நான் உண்மையைத் தான் சொல்கிறேன் இரமணி ஐயா.

    நீங்கள் முதன் முதலாய்
    பொய் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்
    காரணம் தங்கள் கவிதைகள்
    தங்கள் படைப்புத் திறனை மிகத் தெளிவாகச்
    சொல்லிப் போய்விடுகின்றன

    ReplyDelete
  11. அழகான கவிதை. அனைவருக்குள்ளும் கவிதை கொட்டிக் கிடக்கு என்று நீங்கள் சொன்னாலும் கவிதை எழுத உங்களைப் போன்ற கவிஞர்களால் தான் முடிகிறது!

    ReplyDelete
  12. சந்தம் மோத சிந்தை ஓத
    வந்த கவிதை இன்று -நீர்
    தந்த முறையும் நன்று

    உள்ளம் மகிழ உணர்வு திகழ
    வெள்ள மாகப் பெங்கும்-மனப்
    பள்ளம் தன்னில் தங்கும்

    ReplyDelete
  13. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. உள்ளிருக்கும் கவிதையை வெளிக் கொணர்வதே பாடு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. "விதையாய் கவிதை அனவரி டத்தும்
    நிறைந்து தானே கிடக்கு
    விரைந்து வெளியே விளைந்து வரவே
    தவித்துத் தானே கிடக்கு" என்ற
    உண்மையை வரவேற்கிறேன்!

    ReplyDelete