Thursday, October 23, 2014

பதிவர் சந்திப்பு,

தாமரைப் பூத்த தடாகம்
பார்க்கையில் கொள்ளை அழகுதான்
ஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை
அதனினும் மிக அருமையானது
அது பார்வைக்குப் பிடிபடாதது
அந்த சொல்லுக்கு அடங்கா இனிமை
குளத்தினுள்  இறங்கிடத் துணிபவருக்குமட்டுமே
நிறைவாய் கிடைத்திட என்றும் சாத்தியம்

தத்தித் தவழும் குழந்தை
பார்க்கப் பார்க்க  அழகுதான்
ஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்
தெய்வீக மகிழ்வுப் பிரவாகம்
பார்வைக்குப் பிடிபடாதது
அதன் அருமை பெருமை
அதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே
முழுதாய் அனுபவத் தறியச் சாத்தியம்

சன்னதிக்குள் காட்சிதரும் தெய்வம்
கண்கொள்ளா அருமைக் காட்சிதான்
அதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்
அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது
ஆயினும் அதன் அருளும் சக்தி
மாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே
அறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்

எழுத்தில் அறிந்த பதிவர்களை
எதிரில் காணுதல் மகிழ்வுதான்
அதனினும் அவர்தம் பண்பு நலம்
நட்புக்கென உயிர்தரும் உயர்குணம்
பதிவில் அறிய முடியாததே
விளக்கியும் புரிய முடியாததே
ஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து  மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய்  முழுதாய் புரியச் சாத்தியம்

எனவே
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்

7 comments:

  1. பதிவர் சந்திப்பின் அவசியத்தை உணர்த்திய கவிஞரின் வரிகள்!
    கவிஞர் ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    மதுரையில் சந்திப்போம்!
    த.ம.2

    ReplyDelete
  2. பதிவர் சந்திப்பு சிறப்பு கவிதை மிக அருமை.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பதிவர் சந்திப்பு
    இனிதே இடம்பெற
    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அருமை.

    பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. சந்திப்பு பற்றிய முக்கியத்துவத்தை அழகான கவியில் தந்தீர்கள் அருமை அருமை ! நீண்ட நாட்களின் பின் நலம் தானே சகோ ! நோய் நொடியின்றி நீடு வாழ என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை! சென்ற சந்திப்பில் உங்களுடன் அளவளாவியது நினைவில் நிற்கிறது! இந்த முறை வரமுடியாத சூழல்! வருந்துகிறேன்! நன்றி!

    ReplyDelete