Monday, December 22, 2014

சூட்சுமம் வெளியில் இல்லை

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
சொர்க்கமாய் தானே ஆகும் ?

16 comments:

  1. போதுமென்ற மனமே....

    ReplyDelete
  2. ''...நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
    சொர்க்கமாய் தானே ஆகும் ?..'''
    Vetha.Langathilakam.

    ReplyDelete
  3. அற்புதமான வாழ்வியல் உண்மை,,,
    தமிழ் மணம் 3
    கவிஞரே வலைச்சரத்தில் எனது கடைசி பதிவு மன்னிப்பு கோரல் காண்க நன்றி.

    ReplyDelete
  4. பொன் நகை அணிந்தால்தான் சிலருக்கு புன்னகையே வருகிறது ,உங்களின் தத்துவம் அவர்களுக்கு புரிந்தால் நல்லது :)

    ReplyDelete
  5. நன்மனை வாய்க்கப் பெற்று
    நலமுடன் வாழ்ந்து வந்தால்
    அரண்மனை சுகங்கள் கூட
    அலுப்பினைத் தானே கூட்டும் ?
    என்ன நயமான வரிகள்!

    ReplyDelete
  6. போதுமென்ற மனமே பொன் செய்யும், இல்லாததை நினைத்து வருந்துகிறான் மனிதன் எல்லாம் மனதுள் இருக்க இன்பம் என்கே என்றுத் வெளியில் தேடினால் கிடைக்குமா?!! அருமை....

    ReplyDelete
  7. அழகனா வாழ்வியல் ! வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  8. வாழ்வின் தத்துவங்கள்... அருமை ஐயா...

    ReplyDelete
  9. இருப்பது போதும் என்று வாழ்ந்தால் இன்னல்கள் ஏது ? வெகுசிறப்புங்க ஐயா.

    ReplyDelete
  10. ஆசையை அளவோடு வைத்துக் கொண்டால் எல்லாம் நலம்.
    அருமையான கவிதை.

    ReplyDelete
  11. "இருப்பதைக் கொண்டு வாழும்
    இலக்கணம் அறிந்து கொண்டால்
    பறப்பதைப் பிடிக்கும் மோகம்
    மறைந்திடத் தானே செய்யும் ?"

    உலகம் போற்றும் உன்னதமான
    உயரந்த வரிகள்!
    அருமை! வாழ்வியல் கவிதை.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  12. அருமையான கருத்துள்ள கவிதை இரமணி ஐயா.

    எனக்கும் ஆசையை அடக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது தான்...)

    ReplyDelete
  13. அருமையான வாழ்வியல் தத்துவம்....

    த.ம. +1

    ReplyDelete