Thursday, July 16, 2015

கவிதை என்பது உணர்வு கடத்தி....

" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது
கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில்
கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""
என்கிறான் கொஞ்சம் எரிச்சலுடன்

"அப்படியும் இருக்கலாம்

ஏனெனில்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை

கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை

இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை

தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பரச்  சாதனமும் இல்லை

தான் உணர்ந்ததை
பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே
கவிதையாய் இருக்க முடியும்

ஏனெனில்
கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல்
லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும்
அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது
 நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?

16 comments:

  1. இதுவே ஒரு கவிதைதானே. இருந்தாலும் நாம் புரிந்துகொண்டது சிலவே.

    ReplyDelete
  2. ////
    தான் உணர்ந்ததை
    பிறர் உணரச் செய்பவை எவையோ
    அவை மட்டுமே
    கவிதையாய் இருக்க முடியும்
    ////////

    100 சதவீதம் உண்மை

    ReplyDelete
  3. தான் மட்டும் உணர்ந்து என்ன பிரயோசனம்...? உணர்வு கடத்தி சரியே...

    ReplyDelete
  4. கவிதைக்கு மிகவும் பொருத்தமான வார்த்தை உணர்வு கடத்தி . இதை விட கவிதைக்கு விளக்கம் கூறுவது கடினம்

    ReplyDelete
  5. தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை,,,,,,,,,,,,
    அருமை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நல்ல கவிதை. பாராட்டுக்கள். தான் சந்தித்த அல்லது சிந்தித்த காட்சி அல்லது அனுபவத்தை தன் பார்வையில் அல்லது தான் பார்க்க விழைகிற அல்லது தானுணர்ந்த விதத்தில் நயம்பட உரைத்திடல் கவிதை; படிப்பவர் பெறுவது அவரவர் பக்குவ, அனுபவ அளவையும் அவர்தம் நிலைப்பாடுகளையும் பொறுத்தது என்று சொல்வார்கள்...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. தான் உணர்ந்ததை
    பிறர் உணரச் செய்பவை எவையோ
    அவை மட்டுமே
    கவிதையாய் இருக்க முடியும்

    ஏனெனில்
    கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

    புரிந்தது போல்
    லேசாகத் தலையாட்டிப் போகிறான்//

    புரிகின்றது ஆனால் எங்களுக்கு கவிதைதான் எழுத வரவில்லை...ஹ்ஹஹ்

    அருமையாகச் சொல்லி உள்ளீர்க்ள்

    ReplyDelete
  9. கவிதை ஒரு உணர்வு கடத்தி "//

    அருமை.

    ReplyDelete
  10. கவிதை ஓர் உணர்வுகடத்தி! அருமையாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. கவிதை ஒரு உணர்வு கடத்தி.....

    உண்மை தான். சில கவிதைகள் படிக்கும்போதே அக்கவிதை நமக்கும் சில சிந்தனைகளை தோற்றுவிக்கிறதே....

    த.ம. 6

    ReplyDelete
  12. "தரையில் சட்டென விழுந்து ஓடும்
    தை மாத மேகம் போல்
    சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது"

    மேகத்தின் நிழல் தரையில் விழுந்து கடப்பதை எவ்வளவு அழகாகச் சொல்லி யிருக்கிறீர்கள்.

    மிகவே ரசித்தேன்.

    God Bless You

    ReplyDelete
  13. கவிதை எழுதத் துடிப்பவருக்கு
    நல்ல தெளிவூட்டல் பதிவு
    கவிதை அமைப்புப் புரியாதவருக்கு
    நல்ல வழிகாட்டல் பதிவு
    எது கவிதை என
    எழுதியவர் மதிப்பீடு செய்ய
    நல்ல அறிவூட்டல் பதிவு
    ஆகையால் - நானும்
    என் தளத்தில் பகிர்ந்தேன் ஐயா!
    http://paapunaya.blogspot.com/2015/07/blog-post_18.html

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா

    சரியான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் ஐயா.
    தான் உணர்ந்ததை
    பிறர் உணரச் செய்பவை எவையோ
    அவை மட்டுமே
    கவிதையாய் இருக்க முடியும்...

    உண்மை....உண்மை....உண்மை...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. கவிதை எழுதத் துணிவோர்க்கான சிறந்த விளக்கம் கவிதை வடிவிலேயே.

    ReplyDelete