Saturday, July 18, 2015

வாலி நீ வாழீ

 நாளும்
பாமாலைச் சூடி
தமிழன்னை திருப்பாதம்
படைத்துக் களித்தலே
வாழ்வெனக் கொண்டவனே
உன்மறைவுக்கு
இரங்கற்பா பாட நேர்ந்ததும் அவலமே

என்றும்
மரபுக் கவிதையின்
சந்த அழகையும்
வசன கவிதையின்
இறுக்கத்தையும்
ஒன்றாக இணைத்துத் தந்த உன் கவித்துவம்
அனைவருக்கும் உவப்பாய் இருந்ததைப் போலவே

பழுத்த
ஆன்மீக வாதியாய்
பகுத்தறிவு மேடைகளிலும்
பகுத்தறிவாளனாய்
ஆன்மீகத் தளங்களிலும்
வேஷங்களின்றி ராஜ நடைபோட்டு நீ திரிந்ததும்
அனைவருக்கும் ஏற்கத் தக்கதாகத்தான் இருந்தது

கோரிக்கையாக அன்று நீ எழுதிய ஒரு பாடல்
பட்டிதொட்டியெல்லாம்
நாடு நகரமெல்லாம்
காலக்கணக்கற்று
ஆண்டவன் செவிகளைத் துளைக்க
இரண்டாவது முறையாகத்
தோற்க நேர்ந்தமைக்காக
 எமனவன் இன்று
பழிதீர்த்துக் கொண்டுள்ளான் பாவி

கல்லுக்குள் ஈரம்போல்
எருமை
உயிர்
மரணம்
பாசக்கயிறு என
எந்த நாளும் கடுமையாய்த் திரிந்து
மரத்துப் போன அவன் மனது
உன் இயைபுத் தொடையின் அழகிலும்
சிந்தனைச் செறிவின் உயர்விலும்
மயங்கிட
அவசரப்பட்டு விட்டான் மடையன்

ஆயினும்
மெய்யென்று  மேனியை
யார் சொன்னது எனச் சாடிய உனக்கு
புகழுடலே மெய்யெனப் புரியாதா இருக்கும் ?

கவியால்
தமிழோடு தமிழாகக் கலந்து
காலம் கடக்கும் உனக்கு
மரணமில்லை என்பது தெரியாதா இருக்கும் ?

வாலி நீ வாழீ

9 comments:

  1. அருமையான இரங்கற்பா!

    ReplyDelete
  2. எனக்கு(ம்) மிகப் பிடித்த கவிஞர்.

    ReplyDelete
  3. ஒரு சில பாடல்களைத் தவிர...நாங்கள் மிகவும் ரசித்த கவிஞர்...உங்கள் வரிகள் அவருக்குச் சிறப்பு!

    ReplyDelete
  4. அருமையான இரங்கற்பா என்றும் வாலி நாமம் வாழும் ஐயா .

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.

    அவர்கள் மறைந்தாலும் அவர்கள்விட்டுச்சென்ற தடயங்கள் வாழ்த்துகொண்டுதான் இருக்கு ஐயா.. இரங்கற்பா.. நன்று பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வாலியின் பூதவுடல் மறைந்தாலும் அவரது புகழுடம்பு தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கும். கவிஞர் புகழ் பாடிய கவிஞருக்கு நன்றி.

    த.ம

    ReplyDelete
  7. சிறப்பானதோர் இரங்கற்பா..... மீள் பதிவு - சரியான நாளில்....

    த.ம. +1

    ReplyDelete