Sunday, August 2, 2015

கவிக்குக் காரணி

வாழ்வின் விளிம்பில்
மரணத்தின் சரிவில்

மெல்லிய நினைவும்
அடங்கும் மௌனமும்

ஏதுமின்மையெனும்
மாயக் கரைசலில்
கரைகிற நொடியில்

யார் யார் என் நினைவில்
தோன்றி மறையக் கூடும்
ஓய்ந்துச் சாய்ந்த நொடியில்
பட்டியலிட்டிப் பார்க்கிறேன்

பெற்று வளர்த்தவர்கள்
பேணிக் காத்தவர்கள்
பாதியாக ஆனவள்
என் மறுபதிப்பானவர்கள்
உயர்வுக்கு ஏணியானவர்கள்
தாழ்வுக்குக் காரணமானவர்கள்

அனைவருக்கும்
இடையிடையே
எப்படித் தவிர்க்க முயன்றபோதும்

நீரில் அமுக்க
விரைந்தெழும் தக்கையாய்

அவள் முகமே
முன்வந்துப் போகிறது

காரணமறியாது திகைக்கையில்
அவளே உரக்கச் சிரித்தபடிச் சொல்கிறாள்

"நீ மாறாது
என்றும் நீயாக இருக்க
கவியே காரணம் எனில்

அந்தக் கவிக்கு
காரணி
நான்தானே "என்கிறாள்
தன தாவணி முனையை  சுருட்டியபடி

பள்ளிப்பாடம் தவிர
எதுவுமே பேசியிராத

பள்ளி நாட்களுக்குப் பின்
கண்ணிலேயே படாத மீனலோட்சினி

ஏற்கவும் முடியாது
மறுக்கவும் முடியாது
தத்தளிக்கிற வேளையில்

எங்கோ ஏனோ
பள்ளி மணியோசை மட்டும்
தொடர்ந்து கேட்பதுபோல் படுகிறது 

10 comments:

  1. உங்களது இக்கவிதை ஒவ்வொருவரும் தம்மவரை நினைக்குமளவு ஆக்கிவிடுமபோலுள்ளது.

    ReplyDelete
  2. ஆம் ஆயிரம் உறவு இருந்துமென்ன!.....

    ReplyDelete
  3. அருமை....கவிக்குக் காரணி புரிந்தது!

    //அவளே உரக்கச் சிரித்தபடிச் சொல்கிறாய்// சொல்கிறாள் என்று இருக்க வேண்டுமோ

    ReplyDelete
  4. Thulasidharan V Thillaiakathu //

    .தவறினைச் சரி செய்துவிட்டேன்
    உரிமையுடன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  5. இனிய நினைவுகளோடு....

    ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
  6. ரசனையான புணைவு ரசித்தேன்
    தமிழ் மணம் 6

    ReplyDelete
  7. ரசித்தேன் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  8. ஒவ்வொருவர் ஒவ்வொரு மீனலோட்சனிகள் :)

    ReplyDelete
  9. ஒவ்வொருவருக்கும் இப்படி ஓர் ஊற்று இருக்கத்தான் செய்யும்! அருமை!

    ReplyDelete