Sunday, November 8, 2015

இதழ்கள் இரண்டும் .....

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
பொங்கும்  இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
இன்பம் நிலைக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

14 comments:

  1. இதழ்கள் சிரிக்கவே..அருமை...சிரிக்க மறந்த ஜென்மங்கள் சிரிக்கட்டும்...

    ReplyDelete
  2. கண்ணில் நீரவர சிரிப்போம்:)) நன்றி அய்யா!

    ReplyDelete
  3. //இனி இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்//

    சிரித்துக்கொண்டே படித்த போது மீண்டும் நான் சிரித்......தேன். :)

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்.த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. குழந்தை இதழில் மெல்ல வழிந்து
    இல்லம் நிறைக்குமே...மருந்து
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  6. அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இதழ்கள் வலிக்க. ......!!!!!!

    எப்படி சிரித்தாலும் எனக்கு இதழ்கள் வலிக்க வில்லையே..... இரமணி ஐயா.
    ஒரு சமயம் நான் உண்மையாக சிரிக்கவில்லை. ..

    ReplyDelete
  8. இனிமையான கவிதை.
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
    த ம 4

    ReplyDelete
  9. உலகிலேயே சிரிக்கத்தெரிந்த உருவம் மானிட ஜாதியே அருமை கவிஞரே..
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  10. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. கவிதை இனிமை...
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா...

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/Mind-Stain-Flaws.html

    ReplyDelete
  12. இனிய இசையோடு இணைந்த பாடல் அருமை ஐயா ...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
    தமிழ்மணம் +1

    ReplyDelete
  13. சிரிப்பின் சிறப்பினை உணர்த்திய கவிதை
    இதழின், செவியின், புலன் சிறப்பை உயர்த்திய கவிதை
    அருமை அய்யா!
    "இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  14. அருமை.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete