Friday, February 26, 2016

சிரிப்பின் பலமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

9 comments:

  1. வாய் விட்டுச் சிரித்தால் வாழ்வு சிறக்கும்.

    ReplyDelete
  2. இந்த புரிதல் என்றும் வேண்டும் ஐயா...

    ReplyDelete
  3. அருமை ஐயா! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. எல்லா உயிரும் சிரிக்கின்றன
    மனிதன் தன் சிரிப்பை உணர்வது போல் பிறவுயிர் சிரிப்பையும் அழுகையையும் உணர வேண்டும்.

    ReplyDelete
  5. அருமையான தகவல்

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    தாங்கள் சொல்லியது உண்மைதான் சிரித்து வாழ்வோம்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. சிரித்துவாழ்வோம் அருமையான கவி ஐயா!

    ReplyDelete
  8. அருமையான கவிதை.
    த ம 4

    ReplyDelete
  9. இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்-இதை
    உலகு அறியச் சொல்லி நாமும்
    உயர்வு கொள்ளுவோம்

    ReplyDelete