Monday, February 8, 2016

சில உணர்வுப்பூர்வமான விஷயங்கள்

(ஆன்மீகப் பயணமாகப் புறப்பட்டிருக்கிற
மதிப்பிற்குரிய ஜி எம்.பி அவர்கள் மதம், கோவில் ,
அரசியல் தொடர்பாக சில விஷயங்களை
 பதிவிட்டிருப்பதைப் படித்தேன்
அதைத் தொட ர்ந்து என்னுள் எழுந்த
சில சிந்தனைகளை இங்கே பதிவு செய்துள்ளேன்
ஜி.எம். சி சாருக்கு   நன்றி )

என்னைப் பொருத்தவரை தமிழகத்தில்
மதப் பிரச்சனைக்குக் காரணமே நாத்திக வாதிகள்
ஆத்திகம் குறித்து அதிகம் பேசுவதும்
ஆத்திக வாதிகள் நாத்திக வாதிகள் குறித்து
அதிகம் கவலைப்படுவதும்தான்

அரசியலில் மதம் கூடாது  என்பது இங்கு
மதவாதிகளுக்கு மட்டும் சொல்லப்படுகிறதே ஒழிய
மத எதிர்பாளர்களைக் கணக்கில்
எடுத்துக் கொள்வதில்லை

அரசியலில் மதம் கூடாது என்பது
இருவருக்கும் பொருந்தும் தானே

அதைப் போலவே  கட்சிக் கொள்கையாக
மத எதிர்ப்பை வைத்துக் கொண்டு
 கோவில் கோவிலாக
குடும்பத்தினரை அனுப்பிவைப்பதை யாரும்
பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

குடும்பத்தினரைக் கூட மாற்ற இயலாத இவர்கள்
இது விஷயத்தில் சமூகத்தை மாற்ற போராடுவதைக்
கண்டும் காணாது இருக்கிற சமூகத்தை
என்ன சொல்வது ?

 மதத்தை எதிர்ப்பதன் மூலமே
தனது ஓட்டுவங்கியைக் காக்க முடியும் என சில
கட்சிகள் நினைக்கிறபோது....

மதத்தை  மிகவும் ஆதரிப்பதாக காட்டிக்
கொள்வதன் மூலமே தனது ஓட்டுவங்கித்
தக்கவைத்துக் கொள்ள முடியும்
என சில கட்சிகள் நினைக்கின்றன

அது சரி என்றால் இதுவும் சரி
அது தவறென்றால் இதுவும் தவறு

நமக்கு மத அரசியலும் வேண்டாம்
அரசியல் மதமும் வேண்டாம்

நம்பிக்கை இருக்கிறவர்கள் தொடரட்டும்
இல்லாதவர்கள் விலகட்டும்

மாற்ற முயற்சிப்பதே அவர் சரி
அடுத்தவர் சரியில்லை எனச் சொல்வது
போலத்தானே

கடவுள் ஒருவரே என அனைத்து மதத்தினரும்
சொல்லிக் கொள்வது சரி
அவர் இவர் மட்டுமே என்பதில் எனக்கும்
உடன்பாடில்லை

சில உணர்வுப்பூர்வமான   விஷயங்களில்
அறிவுப் பூர்வமாகவும்
அறிவுப் பூர்வமான விஷயங்களில்
உணர்வுப்பூர்வமாகவும்  யோசிப்பது
குழப்பமே விளைவிக்கும்

(ஆகையால்

ஜி.எம் பி சார் ஆன்மீகப் பயணத்தை
மிகச் சரியாக அனுபவிக்கவேண்டுமெனில்
ஆன்மீக வாதியாகவே பயணத்தைத் தொடருங்கள்

பயணத்தில் நெருடுகிற விஷயத்தை
வந்து விமர்சித்துக் கொள்ளலாம்

வாழ்த்துக்களுடன்...... )

8 comments:

  1. சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். மதங்களோ, ஜாதிகளோ அரசியல்வாதிக்களால்தான் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது - வாக்குகளுக்காக.

    ReplyDelete
  2. ரமணி சருக்கு என் சுற்றுலாப் பதிவுகள் உங்களுக்கு ஒரு பதிவெழுதக் காரணமாயிருந்தது மகிழ்ச்சி. என் பதிவுகளைப் படிக்கிறவர்களுக்கு நன்கு தெரியும் நான் எப்போதுமே என் பயணம் ஒரு ஆன்மீகப் பயணம் என்று சொல்லிக் கொண்டதில்லை. ஒரு சுற்றுலா என்றுதான் கிளம்பினோம் அதில் கோவிலும் கோவில் சார்ந்த இடங்களும் இருப்பதால் மேற்கொண்ட பயணம் ஆன்மீகப் பயணம் என்று தவறாகவே எண்ணி யிருக்கிறீர்கள் எங்குமே நான் ஆத்திகம் பற்றியோ நாத்திகம் பற்றியோ எழுதவில்லை.பயணத்தின் போது எனக்கு நெருடுகிற சில விஷயங்களை எழுதி இருப்பேன் என் முகநூல் ஸ்டேடஸ் பதிவிலும் அம்மாதிரி நெருடிய விஷயத்தைத்தான் விளக்கி இருக்கிறேன் காணும் உணரும் விஷயத்தை கூடிய வரை நடுநிலை தவறாமல் எழுத முயற்சித்திருக்கிறேன்அறிவுக்கும் உணர்வுக்கும் ஏற்படுகிற மோதலில் பெரும்பாலும் அறிவு தோற்கிறது. அடிமைத்தனம் பற்றி நான் எழுதி இருப்பவை அறிவு பூர்வமானவை உணர்வு பூர்வமாக பலரும் ஒப்பினாலும் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் விஷயங்களே இந்தப் பதிவுகளெல்லாம் சுற்றுலா முடித்து வந்தபின் எழுதுபவையே ஆத்திகம் நாத்திகம் என்று கூறி ஆன்மீகவாதியாகத் தொடருங்கள் என்று முடித்திருக்கிறீர்கள். இத்தனை விரிவாக நான் பின்னூட்டம் எழுதுவதே என் பதிவுகளைப் படிக்காமல் இதைமட்டும் படிப்பவர் என்னைப் பற்றித் தவறாக அனுமானிக்கக் கூடும் என்பதாலேயே

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. G.M Balasubramaniam //
    விரிவான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
    நாம் எழுதுபவர்கள் நினைத்து எழுதுவதற்கும்
    அதைப் படிப்பவர்களுக்கு புரியச் செய்வதற்குமான
    வித்தியாசத்தில் தங்கள் பதிவு
    இருப்பதாக உணர்கிறேன்

    தங்கள் பதிவில் கோவில் சம்பந்தப்பட்ட
    விஷயங்களே அதிகம் இடம் பெற்றிருக்கின்றன
    அது சம்பந்தமான அலசல்களும்
    இடம் பெற்றிருக்கின்றன

    சுற்றுலாவினை ,இன்பச் சுற்றுலா ,
    ஆன்மீகச் சுற்றுலா
    மருத்துவச் சுற்றுலா கல்விச் சுற்றுலா,
    எனவெல்லாம் பிரித்துப்
    பார்ப்பவர்களுக்கு தங்கள் பதிவுகள்
    ஆன்மிகச் சுற்றுலா என்பதுபோலத்தான்
    படும்.படுகிறது

    அதனாலேயே எழுதினேன்.விரிவான
    விளக்கத்திற்குப் பின் புரிந்து கொண்டேன்

    சுற்றுலா இனிதே தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. .விரிவான
    விளக்கத்திற்குப் பின் புரிந்து கொண்டேன். நன்றி!

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    நல்ல கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அருமையான பதிவு அய்யா!
    சுற்றுலாவில் இருந்து ஆன்மிகத்தை நீக்கிவிட்டால் சுற்றுலாவே படுத்துவிடும். ஏனென்றால் சுற்றுலாவில் 65% ஆன்மிக சுற்றுலாதான். நாம் அதிகம் சென்றிருப்பது கூட கோவிலுக்குதான். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்! அதனால் சுற்றுலாவில் ஆன்மிகத்தை தவிர்க்க முடியாது.
    த ம 3

    ReplyDelete
  8. நல்லதோர் பகிர்வு. மதமும் அரசியலும் கலந்து விட்டது - ஆதாயத்திற்காகவே....

    ReplyDelete