Monday, February 29, 2016

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

சலனமின்றி  எப்போதும்போல்
காலம் நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
சவமாகிப்  போனது
அந்த மணிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

வார்த்தைகளற்ற
உன்னத இசையின் ஒலியில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாமே  நான்  என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனியாதிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்
"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள்
சுமைதாங்கிகள்
அளவீடுகளின்
எல்லையினை
சக்தியினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழ்வைப் புரிந்தவனாகிப் போக
அறியாதவனோ   அற்பனாகிப்போகிறான்

6 comments:

  1. தொலையுமா கர்வம்? அருமை.

    ReplyDelete
  2. உண்மையே ஐயா வாழ்வைப் புரியாமல் வாழ்பவன் அற்பனாகிறான் அருமையான வரிகள்.நன்றி.

    ReplyDelete
  3. // அற்பச் சுமைதாங்கி // அருமை ஐயா...

    ReplyDelete
  4. ஒரே நேர்கோட்டில் சொல்லிப் போகும் விதம் ரசிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையான வாழ்வியல் தத்துவங்கள் கவிஞரே...

    ReplyDelete