Saturday, March 5, 2016

பண்டித விளையாட்டா படைப்பு ?


. "இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
போகிற போக்கில்
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.
அவனுக்கு எப்படிப் புரியச் சொல்வது ?

கொத்துகிறத்  தூரத்தில்
சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும்
கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும்
என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக
அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
அவைகளைச் சொற்களுக்குள் அடைக்க முயல
அவைகள் அடங்காது சீறிக் கொத்த
ஒவ்வொரு கணமும்
நான் நொந்து வீழ்வதும்
ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும்
எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமெனச்
சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளம்போல்
உணர்வுகள் பொங்கிப் பெருக
நிலை தடுமாறிப் போக
தலையணைக்குள் மெத்தையினைத்
திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
திணிக்க முயன்று தோற்கிறக்  கணங்களை
வார்த்தைகள் கிழிந்து சிரிக்கிற அவலங்களை
எப்படி அவனுக்கு விளக்கித் தொலைப்பது ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?

இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
இணைவாகச் சேரும் காலத்தையும் கணத்தையும்
எது நிர்ணயம் செய்யக்கூடும்?

பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனைக் கலைத்துவிட்டுப் போவதும்

எங்கோ தலைதெறிக்கப் போகும்
ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும்

விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
இணைகிற இணைப்பு வீணாகிப்போக
வேண்டா வெறுப்பாகப் புணரும் நாளின்
கரு தங்கிச் சிரிப்பதையும்

எப்படி எனப் புரிந்து  சொல்வது  ?
எப்படி அவனுக்குப் புரியச் சொல்வது  ?

12 comments:

  1. Sir ,
    Sorry to hear you are hurt by the people.World is like that .Move on sir Do you good best work continuously.May god bless .

    ReplyDelete
  2. ///தலையணைக்குள் மெத்தையினைத்
    திணிக்கமுயலும் முட்டாள்போல்
    உண்ர்வுகளை வார்த்தைக்குள்
    திணிக்க முயன்று தோற்கிறக் கணங்களை
    வார்த்தைகள் கிழிந்து சிரிக்கிற அவலங்களை
    எப்படி அவனுக்கு விளக்கித் தொலைப்பது ?
    ///

    உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை ஐயா.. வாழ்த்துகள்.. தொடருங்கள்....!!

    ReplyDelete
  3. அருமை ஐயா.

    மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. "வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
    பண்டித விளையாட்டு " -மிக அற்புதமாகவே
    நிகழ்ந்திருக்கிறது !
    மாலி

    ReplyDelete
  5. எனக்கும் அவ்வப்போது தோன்றுவதுதான் ரசித்துப் படித்தேன்

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. எங்களுக்கும் இப்படித் தோன்றுவதுண்ணு அவ்வப்போது. எனவே ரசித்தோம் பதிவை...அருமை!

    ReplyDelete
  8. மிகஅற்புதம்

    ReplyDelete
  9. புரிகிறது..
    ஏன் எழுதவில்லை என்பதற்கே ..ஒரு கவிதை எழுதும் அற்புதம் புரிகிறது..

    ReplyDelete
  10. பிரமாதம் நண்பரே!

    சொற்கள் திமிறக் கொண்டு கட்டுடைத்து வெளிப் போந்துள்ளன. இலக்கியம் சார்ந்த தேர்ந்த சமூகப் போராளிகளின் நித்ய உணர்வுகளைத் தரிசிக்கச் செய்த தங்கள் கவிதைச் சீற்றம் மனசை ஆக்கிரமித்துக் கொண்டது. தொடர்ந்து சங்கிலியாய் பிணைத்துக் கொள்வோம்.

    மனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  11. "ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு"-
    தாங்களுக்கு தெரியாதது அல்ல ; லாகவம் ( லகு -லாகவம் )
    என்பதே சரி ( லாவகம் அல்ல.)

    மாலி

    ReplyDelete