Saturday, May 21, 2016

மயக்கும் கோடை மழை மாலை

மழை அழகு
கோடை மழை
பேரழகு
கோடை மழை மாலை
பெரும்பேரழகு

பார்ப்போருக்கு நனையாதபடி
ஆயினும் மிகச் சரியாய்
நனையும்படியான வாயிற்படியில்
பேத்தியும் நானும்..
அவள் பாட்டிக்குப் பயந்தபடி

நீண்ட வெள்ளி ஊசியாய்ப்  பொழியும்
மென் சாரலை
நெளித்து உடைத்துப் போகும்
குளிர்காற்று
எம் இருவரையும்  மெல்லச் சீண்டி
இரசித்துக் கடக்கிறது

நாங்களும் இமை இறுக்கிப்
பற்கள் கடித்துப்
பயந்தது போல்
நடுங்கிச் சிரிக்கிறோம்

சுவரோரம்
நனைந்து நடுங்கி நின்ற
சிட்டுக்குருவி
மெல்லப் பறக்க எத்தனிக்கிறது

நான் ஆறுதலாய்ச்  சப்தமாய்
"நாங்கள் சைவம் தான்
பயப்படாமல் இரு " என்கிறேன்
சிறுபிள்ளைத்தனமாய்

" அதுக்குத் தமிழ் தெரியுமா
லூஸ் தாத்தா " என
தலையில் அடித்துக் கொள்கிறாள் பேத்தி
பெரியமனிதத்தனமாய்

பேசியது புரிந்ததாலோ
தாங்க முடியாததாலோ
எங்களை நோக்கி மெல்ல நகருகிறது
மொத்தமாய் நனைந்த
அந்த அழகுக் குருவி

நாங்கள் சந்தோஷத்தில்
இன்னும் சப்தமாய்ச் சிரிக்கிறோம்

எங்களுக்குப் போட்டியாய்
மழையும்  வலுக்கத் துவங்குகிறது

நிச்சயமாக

மழை தான்
அழகு

கோடை மழை தான்
பேரழகு

கோடை மழை மாலை தான்
பெரும்பேரழகு

8 comments:

  1. உங்கள் கவிதையும் பேரழகு தான். மழையை ரசிப்பது போலவே உங்கள் கவிதையையும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. உண்மை ஐயா
    ரசித்தேன்
    மகிழ்ந்தேன்
    நன்றி
    தம +1

    ReplyDelete
  3. கவிதைச் சாரலில் சற்றே நனைந்தேன். நன்றி.

    ReplyDelete
  4. சில நேரங்களில் கோடை மழை இருக்கும் வெப்பத்தை அதிகரித்து விடுகிறது எந்தமழையானாலும் மழை அழகுதான்

    ReplyDelete
  5. பேத்தியுடன் இன்னொரு சிறு குழந்தையாக மழையை ரசித்த காட்சியை கவிதையாக்கியது அருமை.

    ReplyDelete
  6. மழையை ரசித்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கோடை மழையைப் பேத்தியுடன் கொண்டாடிய கவிஞர் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அரசியலின்
    அசுரக் காற்றில் இருந்து
    அன்பாக அழைத்து வந்த
    கோடை மழை
    உண்மையில்
    கோடை மழை.

    பண்பையும் பாசத்தையும்
    பரப்பும் மழை.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete