Sunday, June 12, 2016

பிறவிச் சுழற்சி

அண்டத்திலும் பிண்டத்திலும்
பஞ்ச  பூதங்கள்
மாறி மாறி ஆடும்  ஆட்டமே
இறப்பா பிறப்பா ?

பிராண நெருப்பின்
ஊதுலைக் காற்றின்
ஒருங்கிணைப்பு உடைபட

வெப்பக் காற்றாய்
மேல் நோக்கிக் கிளம்பும் ஜீவன்

வெளுத்துப்பின் கருத்துக்
குளிர்காற்றின்
அணைப்பினில் இழுப்பினில்

எங்கோ மழையாய்
மண் நனைத்துப் பொழிய

புதைந்து கிடந்த
விதைத்து வைத்த

விதையது  உயிர்ப்பெற
வளர்ந்து பயன் தர

விளைந்ததை உண்ட
விலங்கினில் மனிதனில்

இரத்தம் ஊறிப் பெருக
அதுவே விந்துவாய் இறுக

விந்தின் சேகரம்
உடலை முறுக்க

அது கொள்ளும் உடல்
கருவதும் உயிரதும் கொள்ள

பிராண நெருப்பும்
பிராண வாயுவும்

மீண்டும் இணைந்து
உடல் வளர்க்க உயிர் வளர்க்க

காலதேவன் கட்டளை
அல்லது கண்ணசைவு

வரும்வரை ஆடவிட
வந்தவுடன் நோய்ப்பட

மீண்டும்

பிராண நெருப்பின்
ஊதுலைக் காற்றின்
ஒருங்கிணைப்பு உடைபட....

மீண்டும்....மீண்டும்

இப்படி...

அண்டத்திலும் பிண்டத்திலும்
பஞ்ச பூதங்கள்
மாறி மாறி ஆடும்  ஆட்டமே
இறப்பா பிறப்பா ?

7 comments:

  1. கவிஞர் அய்யா, உங்கள் சிந்தனை. எங்கோ போய் விட்டீர்கள்.

    ReplyDelete
  2. விஸ்தாரமான சிந்தனை பகிர்வுக்கு நன்றி கவிஞரே..
    த.ம. 5

    ReplyDelete
  3. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்.
    அருமையான கவிதை.

    ReplyDelete
  4. சிந்தனையின் உச்சத்தினைஅடைந்து எழுதப்பட்ட படைப்பு! அருமை!

    ReplyDelete