Thursday, August 4, 2016

சமைத்தலும் ,படைத்தலும்

என்ன எழுதுவது என
யோசித்துக் கொண்டிருப்பேன் நான்

என்ன சமைக்கலாம்
என யோசித்துக் கொண்டிருப்பாள் மனைவி

மன அறைத் திறந்து
கரு எது சரியாய் வரும் எனத்
தேடத் துவங்குவேன் நான்

குளிர்சாதனப் பெட்டித் திறந்துக்
காய்எது சரியாக இருக்கும் என
தேர்ந்தெடுக்கத் துவங்குவாள் அவள்

என் தேர்வில் கூடுமானவரைக்
 கூறியது கூறாமல் இருக்கக்
கூடுதல் கவனம் இருக்கும்

அவளும் கூடுமானவரையில்
 சமைத்ததுச்  சமைக்காமல் இருக்க
கூடுதல் கவனம் கொள்வாள்

தேடுகையில் எனக்கு
சட்டென ஏதோ ஒன்று கூடுதல்
கவனம்  கொள்ளச் செய்யும்

அது அன்றைய செய்திப்  பொறுத்தோ
பாதித்த நிகழ்வு குறித்தோ இருக்க
 கூடுதல் சாத்தியம் உண்டு

தேடுகையில் அவளுக்கும்
சட்டென ஏதோ ஒன்று
கூடுதல் அக்கறை கொள்ளச் செய்யும்

அது அன்றைய நாள், திதி குறித்தோ
அல்லது உடல் நிலைக் குறித்தோ இருக்க
கூடுதல் சாத்தியம் நிச்சயம்

கரு ஒன்று கிடைக்கும் வரைத்தான்
எனக்குள் ஒரு மதமதப்பு  இருக்கும்

எது என்று முடுவெடுக்கும் வரைத்தான்
அவளுள்ளும் ஒரு மெத்தனம் இருக்கும்

பின் எழுதி முடிக்கும் வரை நான்
வேறெதிலும் கவனம் கொள்ள மாட்டேன்

பின் சமைத்து முடிக்கும் வரை அவளும்
வேறேதிலும் நினைவைத் திருப்பமாட்டாள்

ருசியிலும்  சத்திலும் குறைவிருக்க
அவள்  ஒருபோதும் சம்மதிப்பதில்லை

கருவிலும் எளிமையிலும் குறைவிருக்க
ஒருபோதும் சம்மதிப்பதில்லை  நானும்

 எல்லாவற்றிலும்

உணவது  சமைத்தலும்
கவியது படைத்தலும்
ஒன்றாய் இருந்தபோதும்
தொடர்ந்து நடந்தபோதும்

"ஆயிரம் சொல்லுங்க
எங்க அம்மா கைப்பக்குவம்
எனக்கில்லை  "என்கிற
சலிப்பு அவளிடமும்

"ஆயிரம் கடந்தாலும்
 எழுத்து  இன்னும்  எனக்கு
வசப்படவில்லை "என்னும்
ஆதங்கம் என்னிடமும்

நீங்காது தொடர்வதால் ...

 என்ன எழுதுவது புதிதாய்  என
யோசித்துக் கொண்டிருக்கிறேன்  நான்

என்ன சமைக்கலாம் புதிதாக
என யோசித்துக் கொண்இருக்கிறாள் என்  மனைவி

10 comments:

  1. சமைத்தல் + படைத்தல் ... ஒப்பீடுகள் மிகவும் அருமை.

    படைப்பாளியின் இம்மாதிரியான சலிப்பும் ஆதங்கமுமே அவர்களை மேலும் மேலும் செதுக்கி, உன்னதமானதோர் நிலைக்குக் கொண்டுவரும் உளிகள் போன்றவை.

    பாராட்டுகள். வாழ்த்துகள். மனம் திறந்து கொடுத்துள்ள அழகான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நானும் வை.கோ சார் சொன்னதை வழி மொழிகிறேன். சார் அருமையாக சொல்லி விட்டார்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஆஹா!!! ஆஹா! ஒரு ஒப்பீடுதலும் அருமை...அருமை...ஆதங்கமும் தேடல்களும் தான் நம்மைப் படைக்க வைக்கின்றன...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. குருவே இவ்வளவு தெளிவாக சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது...


    ஆ ஒன்று சொல்ல மறந்திட்டேன் நான் முதலில் என்ன சமைக்கலாம் என்று யோசித்துவிட்டு அதன் பிறகு சமைக்கும் போது என்ன எழுதலாம் என்று யோசிப்பேன்.. எழுதுவதில் பிரச்சனை இல்லை என்ன எழுதினாலும் அதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது ஆனால் சமைப்பதில் சொதப்பினால் உடனடிபலனாக பூரிக்கட்டை பூஜை நடந்துவிடும் பரிகாரமாக...


    குரு கொடுத்துவைச்சவர் எழுத்து படைப்பை படித்துவிட்டு நிம்மதியாக அடுத்த படைப்பை பற்றி சிந்திக்க சென்றுவிடுகிறா

    ReplyDelete
  6. Avargal Unmaigal //

    (ஆயிரம் அடிகண்ட சரியா, தந்த சரியா ? )
    அந்த அற்புத பூரிக்கட்டைதானே
    எழுத்துக்கு அடியெடுத்துத் தரும் போதிமரம்
    அச்சாணி ,ஆணிவேர்,அஸ்திவாரம்

    அதற்கு இன்னமும் அங்கீகாரம் தந்து
    அந்த சிம்பலை பதிவின் முன்பக்கம் போடாததும்
    பிராண்ட் சிம்பலாக இன்னும் அங்கீகாரம்
    பெறாமலிருப்பதும் ஏன் எனத் தான் பலருக்கும்
    புரியவில்லை. எனக்கும்தான்

    ReplyDelete
  7. உங்களுக்கே இப்படி என்றால் பிரம்மாவுக்கு எப்படி ஒவ்வொரு மனிதனையும் வித்தியாசமாக படைப்பது என்பது பற்றி எவ்வளவு குழப்பம் வரும்!!

    --
    Jayakumar

    ReplyDelete
  8. நீங்களும் உங்கள் மனைவியும் இடம் மாறினால் எப்படி இருக்கும் ஒருவருக்கு கை வந்தது இன்னொருவருக்கு இருக்குமா

    ReplyDelete
  9. எப்பவும் முதல் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில்
    அப்பா பேப்பர் படிக்கிறார், அம்மா சகைக்கிறார் என்று படம் போட்டு பாடம் சொல்லும் கதை தான்!

    ReplyDelete