Monday, September 26, 2016

வலைத்தள மேடை

இந்த மேடை எனக்குப்  
போதுமானதாகவே இருக்கிறது
பொருத்தமானதாகவே இருக்கிறது

மேடை சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
படுதாக்களும்
பார்வையாளர்களும்
அதிகமில்லையெனினும்

எனக்கு  இந்த மேடை
மிகவும் பிடித்தமானதாகவே இருக்கிறது

ஆடை அலங்காரச்  சுமைகளின்றி
போலி முக வேஷங்களின்றி
எனது  குளியறையில் பாடுதல் போல்
எனது  தோட்டத்தில் ஆடுதல்  போல
இயல்பாகவே இருக்க  முடிவதாலே

எனக்கு  இந்த மேடை
மனம் கவர்ந்ததாகவே இருக்கிறது

நிழல்  உருவங்களாய் அல்லாது
பார்வையாளர்கள் பெரும்பாலோர்
பார்க்கும்படியாகவே இருப்பதாலே
பார்வையாளர்கள் அனைவரும்
என்னையும்   பார்க்கும்படியாக  இருப்பதாலே 

எனக்கு  இந்த மேடை
உத்வேகமளிப்பதாகவே  இருக்கிறது

கட்டுப்பாடுகளின்றி   என் இஷ்டம்போல்
மேடை ஏற முடிவதாலும்
பண்பட்ட பார்வையாளர்களின்
பாராட்டையோ விமர்சனத்தையோ
உடனுக்குடன் பெற்றுவிட முடிவதாலே

அதிக  உயரமும்வெளிச்சமும்
ஆரவார ரசிகர்களின் 
வான் முட்டும் சப்தமும் நிறைந்த
அந்த  அலங்கார மேடையினும்

அளவு சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்கள் கூட்டம்
அதிகமில்லையெனினும்

உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே

உயர்வானதாகவும்
உண்மையானதாகவும்
நிலையானதாகவும்
என்றென்றும் எனக்குள்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது
அதனால்
எனக்குள் நிலையாக
நங்கூரமிட்டுக்கொண்டும் இருக்கிறது

19 comments:

  1. 'என்னை' 'என்னை' என்று சொன்னாலும் இது நம் எல்லோருக்கும் பொருந்தும். போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து. இந்த மனநிலையே நம்மை எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  2. விசாலமாக ஓடி ஆடிக் களிக்க
    வீசி வீசி கையாட்டி பேசிக் களீக்க
    மனசின் உள் ஆழங்களைத் தோண்டி
    தீர்க்கமாக விண்டு எடுத்துரைக்க
    கற்பனைக் கனவில் உலா வந்த சேதிகளை
    கதையாய், கட்டுரையாய், கவிதையாய்
    நாலு நாற்காலி போட்டு நண்ப்ர்க்கு
    விதவிதமாய் விருந்து படைக்க
    G+ கொஞ்சம் சின்ன மேடை தான்.

    ReplyDelete
  3. //அளவு சிறிதெனினும், வெளிச்சம் குறைவெனினும் பார்வையாளர்கள் கூட்டம், அதிகமில்லையெனினும், உயிரோட்டமுள்ள இந்தச் சின்ன மேடையே உயர்வானதாகவும் உண்மையானதாகவும் நிலையானதாகவும்
    என்றென்றும் எனக்குள் நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது//

    சூப்பர் !

    அது விசாலமானதாக இல்லாதிருப்பினும் நம்மை இன்று விலாசமுள்ளவர்களாக ஆக்கியுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.

    அருமையான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. உங்களுக்கு என்ற நிலையில் நீங்கள் சொல்வது நண்பர்கள் அனைவருக்குமே பொருந்தும். நன்றி.

    ReplyDelete
  5. பழைய நினைவுகள் சுகமானவை

    ReplyDelete
  6. எனக்கு என்னவோ இந்தக் கருத்துகளோடு உடன்பாடில்லை இருந்தாலும் எழுத வந்து விட்ட பின் வேறு வழி .? போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும் இந்தப் புரிதலும் நிஜமானதா தெரியவில்லை.

    ReplyDelete
  7. எல்லோருக்கும் பொருத்தமான மேடையே.....

    ReplyDelete
  8. அருமை! உங்களுக்கு மட்டுமல்ல நண்பரே/சார் நம் எல்லோருக்குமே பொருந்திச் செல்கிறதோ?!!!!

    ReplyDelete
  9. அருமை. அனைவருக்கும் பொருந்தும் பதிவு. வலைத்தளத்தால் வளந்தவர்கள் தான் இன்று பேஸ்புக்கில் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  10. எப்படி இருப்பினும் வலைத்தல மேடை எனக்கும் பிடித்த மேடைதான்

    ReplyDelete
  11. நானும் உங்கள் வழியே.

    ReplyDelete
  12. மனது....
    போதும் போதும் என்று நினைப்பதினால்,
    நிறைய நிறைய என்று ஏக்கம் பெறுகுகிறதோ!
    நல்லவை கேட்பதும் நன்றே..
    நல்லார் நினைவும் நன்றே...
    அரங்கம் சிறிதெனினும் ஆன்றோர் உரை கேட்பதும் நன்றே.

    ReplyDelete
  13. மனது....
    போதும் போதும் என்று நினைப்பதினால்,
    நிறைய நிறைய என்று ஏக்கம் பெறுகுகிறதோ!
    நல்லவை கேட்பதும் நன்றே..
    நல்லார் நினைவும் நன்றே...
    அரங்கம் சிறிதெனினும் ஆன்றோர் உரை கேட்பதும் நன்றே.

    ReplyDelete
  14. yes you come across like minded people here

    ReplyDelete