Tuesday, September 27, 2016

உங்களுக்கு நேரமிருக்க வாய்ப்பில்லை

உங்களுக்கு நினைவிருக்க
நிச்சயம் வாய்ப்பில்லை
ஏனெனில் அப்போதுதான்
தவழுதலை முடித்து
நீங்கள் சுயமாய்
நிற்கக் கற்றுக் கொண்டிருந்தீர்கள்

அன்றைய நாட்களில்
உங்கள் தாய்த்தந்தையரின்
மாலை நிகழ்வுகளில்
உங்களுடனான
மல்யுத்தம் நிச்சயம் இருந்தது

ஒவ்வொரு முறையும்
நீங்கள் உங்கள்
உச்சப் பட்ச
சக்தியினைத் திரட்டி
அவர்களை வீழ்த்த முயல..

ஒவ்வொரு முறையும்
அவர்கள் உங்களிடம்
உட்சப் பட்ச
சக்தியினைத் திரட்டி
வீழ்வதுப்  போல் நடிக்க...

நீ கைகொட்டி
முழுவாய்ப் பிளந்துச் சிரிக்க
அவர்கள் உங்கள் மகிழ்வினில்
உலகை மறந்து கிடந்ததும்
கவலை மறந்து களித்ததும்..

உங்களுக்கு நினைவிருக்க
நிச்ச்யம் வாய்ப்பில்லை
ஏனெனில் அப்போது
நீங்கள் ஏதுமறியாக்
குழந்தையாய் இருந்தீர்கள்

இப்போது உங்களுக்கு
நேரமிருக்க வாய்ப்பில்லை
ஏனெனில் இப்போது நீங்கள்
பதவியில் வசதிவாய்ப்பில்
உச்சத்தில் இருக்கிறீர்கள்

இன்றைய நாட்களில்
உங்கள் தாய் தந்தையரின்
அன்றாட நினைப்புகளில்
உங்களுடைய நினைவுகளே
அதிகம் ஆக்கிரமித்துக் கிடக்கிறது

அன்றாடம் ஏதுமில்லையாயினும்
எதையாவது மனம் திறந்து
பேசிவிட எத்தனிக்கையில்
"எதுவும் முக்கியமா ?" என
பேச்சினை முறிக்கையில்...

ஒவ்வொரு முறை நெருங்க  முயலுகையிலும்
அவசர வேலை இருப்பதாய்
செயலில் காட்டி
கையடக்கச் சனியனில்
முகம் புதைக்கையில்...

மனம் மிக நொந்தபடி
ஆயினும் மிக சந்தோஷமாய்
இருப்பதுப் போலப்போக்குக் காட்டி
இப்போதும் அவ்ர்கள்
நடித்துக் கொண்டிருக்கிறார்கள்

இப்போது இதை உணரும் மனமிருக்க
உங்களுக்கு நிச்சயம்  வாய்ப்பில்லை
ஏனெனில்
பதவியில் வசதி வாய்ப்பில் மட்டுமல்ல
நடிப்பில்   நீங்களும் 
இப்போது உச்சத்தில் இருக்கிறீர்கள்


(கண்ணீருடன்  கரு தந்த நண்பருக்கு
சமர்ப்பணம் )

21 comments:

  1. நல்லதொரு ஆக்கம். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    -=-=-=-

    இதே கருத்தினையேதான் என் வலைத்தளத்தின் முதல் பதிவான ‘இனி துயரம் இல்லை’ என்பதில் ஓர் சிறுகதையாகச் சொல்லி இருந்தேன்.

    https://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html

    ReplyDelete
  2. மனம் கனத்து விட்டது கவிஞரே....

    ReplyDelete
  3. நடைமுறை உண்மை!நல்லதொரு ஆக்கம். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. இது யதார்த்தம் ஆனால் மனதை நெகிழ்த்துவிட்டது..கண்களில் நீர் நிரைந்துவிட்டது..

    ReplyDelete
  5. கண்களை குளமாக்கிவிட்டது கவிதை!
    த ம 4

    ReplyDelete
  6. வார்த்தைகள் மூலமாக உணர்வுகளைத் தெளித்துவிட்டு மனதை நெகிழவைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  7. ஆமாம். உண்மை.
    குறுகுறுக்கிறது மனசு.

    ReplyDelete
  8. நெகிழ வைக்கும் கவிதை பாராட்டுகள்

    ReplyDelete
  9. அருமை
    சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

    ReplyDelete
  10. கையடக்க சனியன் . ஆஹா என்ன ஒரு உவமை!
    உண்மைகள் அச்சத்தை தோற்றுவிக்கின்றன

    ReplyDelete
  11. கையடக்க சனியன் . ஆஹா என்ன ஒரு உவமை!
    உண்மைகள் அச்சத்தை தோற்றுவிக்கின்றன

    ReplyDelete
  12. கையடக்கச் சனியன்......

    நெகிழ வைத்த கவிதை. கசப்பான உண்மையைச் சொன்ன கவிதை.

    ReplyDelete
  13. வாசிக்கும் போது மனதினுள் ஒரு நெருடல், கவலையாக இருந்தது

    ReplyDelete
  14. கையடக்கச் சனியன்...
    நல்ல கவிதை...
    நெகிழ வைத்தது...

    ReplyDelete
  15. true ji
    we do not care our parents

    ReplyDelete
  16. As ill luck would have it I am having no parents to consider and compare

    ReplyDelete
  17. நீண்ட கவிதை!இன்றைய நிலை! உண்மைதான்!

    ReplyDelete