Monday, January 16, 2017

காலத்தை வென்றவரை காவியமானவரை...

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான்,
 தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை  நம்முள்
விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை
காவியமானவரை
இந்த நூற்றாண்டுப்   பிறந்த நாளில்
 நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்திப் பெருமிதம் கொள்வோம்

7 comments:

  1. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    நீங்கள் எல்லா பதிவுகளையும் வாட்சப்பில் இணைப்பதில்லையா நண்பரே? தயவாய் இணையுங்கள். எங்களுக்கு உடன் பார்த்திட முடியும் இல்லையா...

    ReplyDelete
  2. புரட்சி செய்திருக்கிறார். அவரை நினைத்தால் மழையில் நனையும் ரிக்‌ஷா ஓட்டிக்கு மழைக் கோட் வழங்கி கட்டிப்பிடித்திருக்கும் படம்தான் நினைவுக்கு வரும் அவரது புகழுக்கு காரணம் அவரது முகராசியாயும் இருக்கலாம்

    ReplyDelete
  3. சரியான நாளில் சிறப்பான பதிவு.....

    ReplyDelete
  4. அன்று மக்களை எம்ஜியார் வணங்கினார். பதவி கிடைத்தது. இன்று சின்னம்மாவை வணங்குகிறார்கள். பதவி நிலைக்கிறது. அடுத்த தேர்தல்வரை பொறுப்போம், காலம் மாறிக்கொண்டே வருகிறதே! இராய செல்லப்பா நியூ ஜெர்சி

    ReplyDelete