Tuesday, April 11, 2017

வானம் பார்த்து மண்ணில் நடக்கும் கற்பனை மனோபாவம்...

நகத்தால் கீறி
முடிக்க வேண்டியவைகள் எல்லாம்

இப்போது

கோடாரியினைக் கொண்டு
முடிக்கவேண்டி இருப்பது எதனால் ?

சாக்கடை அடைப்பென்றால்
சட்டசபையிலும்

பாதாள சாக்கடை அடைப்பெனில்
பாராளுமன்றத்திலும்

நம் தெரு மதுக்கடை மூடவேண்டுமெனில்
உச்ச நீதி மன்றத்திலும்

முறையிட்டு முடிக்கும்படி
நம் தலையெழுத்து ஆனது ஏன் ?

வேரில்
மண்ணில்
நீரூற்றி
மரம் வளர்க்க நினையாது

இலையில்
கிளையில்
நீரூற்றி
வளர்க்க நினைப்பது போல்

நம்மில்
நம் பகுதியில்
நம் தலைவனைத்
நாமே தேட முயலாது

தலைவர் குடும்பம் மூலம்
பிரபலஸ்தர்களின்  மூலம்
 நம் தலைவர்களைத்  தேடுவதாலா ?

நினைவில் எப்போதும்
நம் பகுதிக்குறித்த
சிந்தனையது
சிறிதும் இல்லாது

ஐ. நா சபைகுறித்தும்
அமெரிக்க ஜனாதிபதி குறித்தும்
அதிகம் பேசி
அறிவாளிபோல் அலட்டி கொள்வதாலா ?

மொத்தத்தில்
அண்ணா சொன்னது போல்

"கூரையேறி
கோழி பிடிக்க இயலாதவன்
வானமேறி
வைகுண்டம் ஏக நினைப்பதுபோல்

வானம் பார்த்து
மண்ணில் நடக்கும்
கற்பனை மனோபாவம்
நம்முள் வளர்ந்துத் தொலைத்ததாலா ?

முன்புபோல் அல்லாது
இப்போதெல்லாம்

நகத்தால் கீறி
முடிக்க வேண்டியவைகளை  எல்லாம்

ஏன்

கோடாரியினைக் கொண்டு
வெட்டித்தொலைக்க வேண்டி இருக்கிறது  ?


5 comments:

  1. எல்லாம் நேரம் தான்... (கெட்ட நேரம்...!)

    ReplyDelete
  2. காலம் தலைகீழாகப் போய்விட்டதல்லவா?

    ReplyDelete
  3. Kangal irunthum kurudargalaga... Iruka palagivittom... Vilithiru thamila endru soll enna payan....

    ReplyDelete
  4. எல்லாம் காலத்தின் கோலம்....

    ReplyDelete
  5. நகத்தால் கீறி முடிக்க முடிந்தால் கோடரி எதற்கு

    ReplyDelete