Wednesday, May 17, 2017

மானஸீக உறவு

பால்மணம் மாறாத
பச்சிளம் குழ்ந்தையை
மடியில் கிடத்தி
ஏதோ பழங்கதையைச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
குடிசை வாசலில் தாய் ஒருத்தி

"இதென்ன கேலிக் கூத்து
இவள் சொல்வது
குழந்தைக்குப் புரியவா போகிறது ?
ஏன் அவளும் கஷ்டப்பட்டு
குழந்தையையும் கஸ்டப்படுத்துகிறாள் ?"
எரிச்சல்படுகிறான்  உடன் வந்த நண்பன்

"தாய்மை உணர்விருந்தால்
புரியும் என்பது
உனக்கும் புரியும்'
இல்லையேல் வாய்ப்பில்லை"
என்கிறேன்

அவன் அலட்சியமாய்ச் சிரிக்கிறான்

வரும் வழியில்
கோவில் வாசலில்
கண்ணீர் மல்க
என்ன என்னமோ
வேண்டிக் கொண்டிருக்கிறான்
பக்தன் ஒருவன்

"இத்தனைப் பக்தர்களையும் தாண்டி
இவன் வேண்டுதல்
ஆண்டவனுக்குத் தெரியப் போகிறதா ?
ஏன் இப்படி
இவனும் கஸ்டப்பட்டு
ஆண்டவனையும் கஷ்டப்படுத்துகிறான் ?"
மீண்டும் ஆதங்கப்பட்டான் நண்பன்

"பக்தி உணர்விருந்தால்
தெரியும் என்பது
உனக்கும் தெரியும்
இல்லையேல் வாய்ப்பில்லை "
என்கிறேன் மீண்டும்

தொடர்ந்து
"இவை இரண்டுக்கும்
ஆதாரமாய்இருக்கும்
ஒரு விஷயம்
கவிதைக்கும் கவிஞனுக்கும் உண்டு
அது குறித்து ஒரு கவிதை
எழுதும் உத்தேசமிருக்கிறது " என்கிறேன்

அவன் சிரிக்கிறான்
"இரண்டுமே அர்த்தமற்றது என்கிறேன்
அதை அர்த்தப்படுத்தும் விதமாய்
ஒரு கவிதை வேறா
அதுவாவது புரிய வாய்ப்புண்டா? "என்கிறான்

"கவி மனம் கொண்டால்
உனக்கும் புரிய வாய்ப்புண்டு
இல்லையேல்  அவைகள் போல்
நிச்சயம் இதற்கும் வாய்ப்பில்லை "
என்கிறேன்

பிரியும் இடம் வர
மெல்ல என்னை விட்டு
விலகத் துவங்குகிறான் அவன்

10 comments:

  1. தாய்மை உணர்விருந்தால் புரியும் ....
    பக்தி உணர்விருந்தால் தெரியும் ....
    கவி மனம் கொண்டால் புரியும் ....

    என சிலவற்றை ஒப்பிட்டுச் சொன்னதும், பிறகு நிறைவாக ....

    ’பிரியும் இடம் வர, மெல்ல என்னை விட்டு, விலகத் துவங்குகிறான் அவன்’ என்ற மிகவும் யதார்த்தமான வரிகளும் அருமை.

    பாராட்டுகள். நல்லதொரு ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. மிகச் சிறப்பான கவிதை வரிகள். 'பேரழகிருந்தென்ன ஓர் ரசிகன் இல்லாமல்?' என்று ஷீலா பாடுவார், 'இதயக்கமலம்' படத்தில்.

    ReplyDelete
  3. மானஸீக உறவு
    உள்ளத்தில் ஊற வேண்டும்!

    ReplyDelete
  4. புரியவில்லை என்றால் விலகியது நல்லது...

    ReplyDelete
  5. பல பதிவுகளின் கதி இதுதான் ரசனை இல்லையா புரிவதில்லையா

    ReplyDelete

  6. G.M Balasubramaniam //

    ...தலைப்புடன் இணைத்துப் பார்க்க
    சரியாகப் புரிய சாத்தியம் உண்டே

    ReplyDelete
  7. அருமை சார்...தாய்மை உணர்வும் பக்தி உணர்வும் போல, கவி உணர்வும் இருந்தால்தான் கவிதையும் புரியும்.. கவிஞனையும் புரிந்து கொள்ளலாம்

    ReplyDelete