Saturday, June 10, 2017

கம்பனும் கடவுள் வாழ்த்தும்...

எல்லோருக்கும் எப்போதும்
மாலை நேரத்தில் மயக்கம்தான் வரும்
எனக்கென்னவோ சில நாட்களாய்
குழப்பம்தான் வருகிறது

துவங்கிய நிகழ்வு
தடங்கலின்றி முடிய
கடவுள்வாழ்த்து அவசியமென
எல்லோரும் நம்புகிறோம்
தவறாதும் சொல்லுகிறோம்

ஆனாலும்
கவிச்சக்கரவர்த்தி கம்பன்மகன் வாழ்வில்
அது ஏன் தவறாகிப் போனது?


அம்பிகாபதி பாடிய நூறு பாடல்களில்
கடவுள் வாழ்த்தினைக்
கணக்கில் கொள்வதா?
கொள்ளாமல் விடுவதா?
என்று எழுந்த கேள்வியே


கவிஞனைக் கொல்வதா?
கொல்லாமல் விடுவதா? என்ற
குழப்பத்தினை உண்டாக்கி
முடிவில்
கடவுள்வாழ்த்துக் கணக்கே
அவனைக் கொன்றும் போட்டதால்.....

தடங்களின்றிக்  காரியம் முடிய
கடவுள்வாழ்த்து
அவசியத் தேவையா?
அல்லது
அனாவசியச்  சேர்க்கையா?
என்கின்ற பெருங்கேள்வி என்னை
குழப்பிக்கொண்டே இருந்தது

குழப்பத்தின் உச்சத்தில் நான்
ஓய்ந்துபோய் உறங்கிப் போக
கவிச்சக்கரவர்த்தி கம்பனே என்
கனவில் வந்து நின்றான்.

அவன்
கமலப்பாதங்களைத் தொட்டு வணங்கி
என் கேள்வியை நான் கேட்கும் முன்பே
கையமர்த்தி என்னை அமரச்சொல்லி
கண்கலங்க இப்படி சொன்னான்

"கடவுள்வாழ்த்துக் கணக்கில் நான்
என் கண்மணியை இழந்தாலும்
ராம காதையில்
நானதைச் சொல்ல மறந்தேனா?
கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்


அம்பிகாபதியின் அவல மரணம்
அனைவருக்கும் சொல்லும் செய்தி இது"

எனக் கண்கலங்கச் சொல்லிப் போனான் கம்பன்

நான் அதிர்ந்து விழித்து எழுந்தபோது
விடிந்தும் இருந்தது


என்னை வாட்டி எடுத்த குழப்பமெங்கோ
தொலைந்தும் இருந்தது

11 comments:

  1. அப்பாதுரை said...
    காரியத்தில் கவனமிருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்ற அருமையான, கண் திறக்கும் கருத்து. பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  2. துரைடேனியல் said...
    //கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
    கவனமாய் இருந்து
    காரியத்தில் கவனமின்மையேல்
    கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
    அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்//

    - உண்மைதான் ரமணி சார். சோம்பேறிகள் கடவுளிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பது பெரும் தவறு. பைபிளில் ஒரு வசனம் வரும்.

    ' குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும். ஜெயமோ கர்த்தரால் வரும்'

    குதிரையை நாம்தான் ஆயத்தப்படுத்த வேண்டும். வெற்றியைக் கடவுள் தருவார். இதைத்தான் உங்கள் கவிதை ஞாபகப்படுத்தியது. அருமையான கவிதை. அம்பிகாபதி பாவம்தான். ராஜகரம் நசுக்கிய ரோஜாப்பூ அவன். தொடருங்கள்.

    ReplyDelete
  3. கான்சன்டிரேஷன் ஜஸ்ட் மிஸ்ட்!
    :))

    ReplyDelete
  4. தொலைந்த கனவுகள் மீண்டும் தொடரட்டும் கேள்விக்கணைகளோடு...
    த.ம.3

    ReplyDelete
  5. பூக்கடைக்கு விளம்பரமும் ,கடவுளுக்கு வாழ்த்தும் தேவையா :)

    ReplyDelete
  6. கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
    கவனமாய் இருந்து
    காரியத்தில் கவனமின்மையேல்
    கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
    அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்//

    கனவில் வந்த கம்பன் சொன்னதாகத் தாங்கள் சொல்லும் இந்தக் கற்பனையை மிகவும் நான் ரஸித்தேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. //காரியத்தில் கவனமின்மையேல்
    கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
    அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்//
    ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே! என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
    எந்த ஒரு செயலையும் கவனத்துடன் செய்ய வேண்டும் என்பதை கம்பர் சொல்வதாய் அமைந்த கவிதை அருமை.

    ReplyDelete
  8. வரலாறு ஒன்று பா வடிவில்
    கடவுள் வாழ்த்தைக் கழித்தால்
    தொன்னூற்று ஒன்பது - எங்கே
    நூறாவது பாடல் - இந்தா
    தலை பறக்கிறது பாரென
    நன்றே விளக்கும் கவிதை இது!

    ReplyDelete
  9. //காரியத்தில் கவனமின்மையேல்
    கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
    அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்//

    கம்பனே உயிர்பெற்று வந்தாலும் மறுக்கமாட்டான். கடவுள் இருந்தால்...அவரும் மறுப்புச் சொல்ல மாட்டார்.

    ReplyDelete
  10. /கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
    கவனமாய் இருந்து
    காரியத்தில் கவனமின்மையேல்
    கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
    அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்/ மிகச்சரி

    ReplyDelete