Monday, June 5, 2017

மணத்தோடு மனமும் கொண்ட ...

உலகின் பார்வைக்கு
உன்னுடன்வாழ்வதானப்
போர்வையினைப்போர்த்தியபடி
உன்னுடன் ஒன்றாய்
இருந்து கொண்டிருக்கிறேன் நான்

ஒரு பொழுது கடப்பது
சில வருடங்கள் கடப்பதாய்
ஒரு நாள் கடப்பது
சில யுகங்கள் கடப்பதாய்
ஊர்ந்துக்  கொண்டிருக்கிறது

வலிமையுள்ளதே
வாழத் தகுந்ததான
காட்டு விதிகளின்படி
ஆணெனப்பட்டவனே
ஆளத் தகுந்தவனான
மமதைக் கொண்ட உன்னுடன்
நான் பதுங்கியபடியே
ஜீவித்திருக்கிறேன்

சம்போகத்தில்
வன்முறை ஒரு தனிச்சுகம்
என எண்ணும் நீ
சரச சல்லாபங்களின்
சங்கீதச் சுகங்களைச்
சுகித்தறிய வாய்ப்பே இல்லை

புல்லாங்குழலில்
துளையில்லாதிருப்பின்
அடுப்பூத   உதவும் என்ற  உன்னுடன்
நட்சத்திரங்கள் சொல்லும்
சங்கேத உணர்வுகள் குறித்து
எப்படிச்  சம்பாஷிக்க முடியும்  ?

 அதிகம் கொடுத்து
அதிகம் பெறுதலின்றி
எடுத்தல் ஒன்றே நோக்கமெனக்
கொண்ட உன்னுடன்
என் மன உணர்வுகளை
எப்படி விரித்து வைக்க முடியும்  ?

இப்போது கூட
என் கவிதைகளுக்கு  ஊற்றான
நித்திய இரசிகர்களான
தோட்டத்து ரோஜாக்களை
 
"இன்றாவது  பறித்துவை .
குல்கந்துக்காகும் "
எனச் சொல்லிச் செல்கிறாய்
கூடுதல் சப்தமாகவே

விடிதலை
வாய்ப்பாக உணரத்
தயாரிக்கப்பட்ட நீ 

மலர்களுக்குக்  கேட்டிருக்குமோ
பதறுமே ,பதட்டமுறுமே
என அச்சமுற்றபடி
தோட்டம் விரைகிறேன்
  
விடிதலை
மலர்தலாக  உணரப்
பயிற்றுவிக்கப் பட்ட  நான்

பறிக்காமலே
உதிர்க்காமலே
ஒவ்வொரு மலராய்
என மடி விழத் துவங்குகிறது
மணத்தோடு மனமும் கொண்ட
அந்த செந்நிற மலர்கள்

என் கண்கள்
கலங்கத் துவங்குகிறது

13 comments:

  1. "வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத்தான்
    ராகம் பிடிபடுகிறது
    நேசிக்கத் தெரிந்த மனங்களுக்குத்தான்
    என் இதயம் புரிகிறது
    உனக்கெங்கே புரிய போகிறது?"

    என்னும் மு மேத்தாவின் கவிதை நினைவுக்கு வருகிறது. அருமை.

    ReplyDelete
  2. சம்போகத்தில்
    வன்முறை ஒரு தனிச்சுகம்
    என எண்ணும் நீ
    சரச சல்லாபங்களின்
    சங்கீதச் சுகங்களைச்
    சுகித்தறிய வாய்ப்பே இல்லை

    புல்லாங்குழலில்
    துளையில்லாதிருப்பின்
    அடுப்பூத உதவும் என்ற உன்னுடன்
    நட்சத்திரங்கள் சொல்லும்
    சங்கேத உணர்வுகள் குறித்து
    எப்படிச் சம்பாஷிக்க முடியும் ?//

    அவளின் வலி மிகுந்த ஒவ்வொரு வரியினையும் பலமுறை ஊன்றி ரஸித்துப் படித்தேன். மிகவும் யோசித்து எழுதப்பட்ட மிக அருமையானதொரு ஆக்கம். நீங்க .... நீங்கதான்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. என்ன செய்வது ,ரசனை இல்லா ஜென்மங்களுடன் வாழ்ந்து தானே ஆகணும் :)

    ReplyDelete
  4. பெண்ணின் மனது சொல்லும் கவிதை அருமை.

    ReplyDelete
  5. எல்லாம் கடந்து செல்வதே மனித வாழ்வு
    த.ம.

    ReplyDelete
  6. தோட்டத்தூஊஊஊ, ரோஜா., களை அல்ல. ரோஜா தோட்டத்தில் உள்ள களையது..! நானே ராஜா?😢 நான்தான் ராஜா எனக்கூவு து கண்டீரோ!?.☺.

    ReplyDelete
  7. எல்லாஆண்களுமே அப்படியாசார்

    ReplyDelete

  8. G.M Balasubramaniam //

    அவருடைய ஆண் அப்படி

    ReplyDelete