Monday, July 17, 2017

ஒரு நீர்க்குமிழியே கூட....

பிரிவுத் துயரை
அனுபவித்து அறிய
பிரிய வேண்டியதுதான்
கட்டாயம் என்பதில்லை

அவ்வப்போது
கடந்து செல்ல நேரும்
புகைவண்டி நிலையமே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

வலியின் வலுவினை
நோய்வாய்ப்பட்டே
அறிய வேண்டியதுதான்
அவசியம் என்பதில்லை

அவ்வப்போது
ஆறுதல் சொல்லச் சென்றுவரும்
மருத்துவமனையே கூடப்
அதனை உணர்த்திவிடுகிறது

வாழ்வின் முடிவினைப்
புரிந்து கொள்ள
இறந்துதான் ஆகவேண்டும்
என  அவசியமில்லை

அவ்வப்போது
தவிர்க்க இயலாது சென்றுவரும்
சாவு வீடுகளே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

உலக வாழ்வின் நிலையாமை
குறித்துத் தெளிய
 நூறு  நூல்கள்
வேண்டும் என்பதில்லை

வண்ண்ங்களைப் பிரதிபலித்து
மயக்கித் தெறிக்கும்
 மிகச் சிறு நீர்க்குமிழியே  கூட
போதுமென்றாகிப் போகிறது

  

10 comments:

  1. நீர்க்குமிழி என்றதும் ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடல் நினைவுக்கு வந்தது ,உங்கள் கவிதைக்குப் பொருத்தமாய் :)

    ReplyDelete
  2. சின்ன விஷயங்கள் பெரிய பாடங்கள்!

    ReplyDelete
  3. வாழ்வின் முடிவினை அறிய இறந்துதான் ஆகவேண்டும் என்பதில்லை... நிறைய பக்குவப்பட்ட வரிகள்.

    ReplyDelete
  4. அனுபவங்கள் அனுபவித்துதான் தெரிய வேண்டும் என்றில்லை நெருப்பு சுடும் என்னும் அறிவே போதும்

    ReplyDelete
  5. தத்துவம் பேசும் கவிதை

    ReplyDelete
  6. அவ்வப்போது
    தவிர்க்க இயலாது சென்றுவரும்
    சாவு வீடுகளே கூடப்
    போதுமானதாய் இருக்கிறது//

    உண்மை.

    இரண்டு மூன்று தினமாய் பிரிவின் வலியை சொல்லும் அனுபவங்களைதான் கேட்டு வருகிறேன். துணையை பிரிந்தவர், தாயை இழந்தவர் என்று.

    ReplyDelete
  7. மிக ஆழ்ந்த தத்துவம்! மிகச் சிறிய நடைமுறை விஷயங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியும் என்பதை மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்

    துளசி, கீதா

    ReplyDelete