Saturday, September 23, 2017

என்றென்றும் புகழ்மங்கா எம்மதுரை வாழியவே....

மஞ்சளோடு குங்குமமும்
மணக்கின்ற சந்தனமும்
மங்களமாய் ஊரெங்கும்
மணக்கின்ற மாமதுரை

சுந்தரனாம் சொக்கனோடு
சரிபாதி எனஆகி
எங்களன்னை மீனாட்சி
எமையாளும் சீர்மதுரை

அன்னைமடித் தவழ்ந்துதினம்
அகம்மகிழும் குழந்தையாக
மண்தொட்டு மகிழ்ந்தோடும்
வைகைநதித் தண்மதுரை

மணக்கின்ற மல்லியதன்
மணம்போல நிறம்போல
குணம்கொண்ட நிறைமாந்தர்
நிறைந்திருக்கும் நன்மதுரை

நகரெல்லாம் விழாக்கோலம்
நாளெல்லாம் கொண்டாட்டம்
தவறாதுக் காண்கின்ற
தவச்சீலம் தென்மதுரை

தூங்காதப் பெருநகரம்
கோவில்சூழ் மாநகரம்
ஓங்குபுகழ் தமிழ்வளர்த்த
ஒப்பில்லாத் திருமதுரை

தென்மதுரை தண்மதுரை
சீர்மதுரை வாழியவே
என்றென்றும் புகழ்மங்கா
எம்மதுரை வாழியவே







6 comments:

  1. அருமை அருமை. வாழ்க கவிஞரின் தமிழ்.

    ReplyDelete
  2. சென்னைக்கு அப்புறம் நான் பொறாமைக்கொள்ளும் நகரம் மதுரை.

    ReplyDelete
  3. மதுரைக்குப் பெருமை. பாராட்டுகள். நான் ரசிப்பவை நான் பிறந்த மண்ணான கும்பகோணமும், அடுத்து நான் பணியாற்றிய ஊர்களில் ஒன்றான கோயம்புத்தூருமே.

    ReplyDelete
  4. சங்கம் வளர்த்த திரு மதுரை நகர் வளரும் இங்கிதம் பொங்க வரும் எழில்தரும்மீனாட்ச்சியே என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  5. அருமையான வரிகள். நான் மதுரைக்கு அருகில் பிறந்து வளர்ந்து இளங்கலை வரை மதுரையில் படித்து என்று மதுரையை என் பழைய நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டீர்கள்...

    கீதா: அருமை சகோ வரிகள் அனைத்தையும் ரசித்தோம். மதுரைக்குப் பல முறை சென்றிருக்கிறேன். தூங்கா நகரம் என்று மிகவும் பிடிக்கும்...

    ReplyDelete