Thursday, August 16, 2018

"தமிழனென்பேன் கன்னடியன் என்பேன்...

கையில் காசு குறைகிறதெனில்
வீட்டில்
சட்டிப் பானை உருட்டி
ஆர்ப்பாட்டம் செய்து...

காசு வ்ந்தவுடன்
அதனை
மதுக்கடையில் கொண்டு சேர்ப்பவனை
என்னவென்பாய் " என்றது
கருத்துப் பெருத்திருந்த
அந்தக் கார் மேகம்

"இதிலென்ன சந்தேகம்
குடிகாரன் என்பேன்
கூறு கெட்டவன் என்பேன்
இன்னும் சரியாகச் சொன்னால்
வாழத் தகுதியற்றவன் என்பேன்"
என்றேன்

இகழ்ச்சியாய் மின்னலாய்ச்
சிரித்த மேகம்...

"அது சரி
அப்படியானால்
குறைவாய்க் கொடுக்கையில்
அதன் அருமை புரிந்து
பகிர்ந்துவாழப் பழகாது
அரசியல் செய்பவனை

அதிகமாய்க் கொடுக்கையில்
சேமிக்கத்  தெரியாது
அதனை வீணாய்க்
கடலில் சேர்ப்பவனை
என்னவென்பாய் " என்றது நக்கலாய்..

சுருக்கென்றது

"தமிழனென்பேன்
கன்னடியன் என்பேன்
இன்னும் சரியாகச் சொன்னால்
இந்தியன் என்பேன் "
எனத் தான் சொல்லத் தோன்றியது

ஆனாலும்
இனப்பற்றும் நாட்டுப்பற்றும்
இடையிலிருந்துத் தடுக்க
மௌனமானேன்

மௌனத்தில் எரிச்சல் கொண்ட மேகம்
இடியெனச் சிரித்து
இன்னும் கருத்துக் கனக்கத் துவங்கியது

கோபத்தில் அது
இன்னமும் "கொட்டித்" தீர்க்கலாம்
எனப்படுகிறது எனக்கு

10 comments:

  1. மனிதம் நான்கு திசை நோக்கியும் பயணிக்கிறது...

    பொறுப்பின்றி

    ReplyDelete
  2. தவறுகளிலிருந்து இந்த அரசுகள் பாடம் கற்பதே இல்லை.

    ReplyDelete
  3. இயற்கையை சீண்டினால், இயற்கை கொடுக்கும் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்...

    ReplyDelete
  4. இயற்கைக்கு கொடுக்கவும் தெரியும். இறுமாப்பு கொண்டவர்களை கெடுக்கவும் தெரியும். சிவன் உலகம் வாழ நடனமும் ஆடுவான். ஊழி தாண்டவம் புரிந்து அழிக்கவும் செய்வான்.

    ReplyDelete
  5. //மௌனத்தில் எரிச்சல் கொண்ட மேகம்
    இடியெனச் சிரித்து இன்னும் கருத்துக் கனக்கத் துவங்கியது//

    ’இடியெனச் சிரித்து’ .... அழகிய சொல்லாடல் ! :)

    //கோபத்தில் அது இன்னமும் "கொட்டித்" தீர்க்கலாம் எனப்படுகிறது எனக்கு //

    கொட்டட்டும் ....
    கொட்டித் தீர்க்கட்டும் ....

    வெட்டிப் பேச்சு வீரர்களின்
    கொட்டத்தை அடக்கி
    புத்தி புகட்டட்டும்.

    ஜாதி, இன, நிற, மொழி பேதங்களை
    மழை வெள்ளமாய் ஓடி வந்து ........
    வேரோடு வெட்டி சாய்க்கட்டும்.

    ReplyDelete
  6. கோபத்தின் வேகத்தை உணரமுடிகிறது.

    ReplyDelete
  7. இயற்கை தரும் பாடங்கள் - இந்த அரசியல்வாதிகளுக்குப் புரிவதில்லை.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. இயற்கை கொடுப்பதை விட்டு விட்டு, முனோர்கள் தோண்டி வைத்த நீர் நிலைகளை தூர்த்து விட்டு, அடுத்தவரிடம் கையேந்தி என்ன பயன்

    ReplyDelete
  9. இயற்கையிடம் யாரும் போட்டியிட முடியாது என்பதை அருமையாக விளக்கி உள்ளீர்கள்

    ReplyDelete
  10. /தமிழனென்பேன்
    கன்னடியன் என்பேன்
    இன்னும் சரியாகச் சொன்னால்
    இந்தியன் என்பேன் "/ இனப்பற்று உண்மையச் சொல்ல மறுக்கிறது

    ReplyDelete