Monday, March 30, 2020

கர்ணனும் சித்தாள் முனியம்மாவும்..

கருவண்டாகிச்
சதிகாரக் கண்ணன்
தன் தொடை துளைத்த போதும்
இரத்தம் ஆறாய்ப்
பெருக்கடுக்க
வலி தீயாய்ப்
பொசுக்கியபோதும்
அலுப்பில் அயர்ந்த
குரு நாதரின் துயில்
கலையக் கூடாதென
கற்சிலையாய் இருக்கிறான்
பாரதக் கர்ணன்

வறுமை தந்த
சோர்வும் நோவும்
மெல்லப் படுத்தியெடுக்க
அதன் காரணமாய்
அடிவயிற்றிலிருந்து கிளம்பும்
அடக்கவொணா இருமலை
அரைவயிற்றுப் பசியில்
மார்பில் அயர்ந்த குழந்தை
விழித்துவிடக் கூடாதென
உதடு கடித்து விழுங்கித்
தாய்மைக்கு இலக்கணமாகிறாள்
சித்தாள் முனியம்மா

ஒப்பு நோக்கின்
இரண்டில் ஒன்றுக்கொன்று
சளைத்ததில்லையாயினும்

என்றோ ஒருமுறை
நடப்பதற்கும்
அன்றாடம் நடப்பதற்குமான
வித்தியாசத்தில்

கர்ணனையும் மீறி
என் மனத்தில் உயர்கிறாள்
சித்தாள் முனியம்மா

9 comments:

  1. wநிகழ்வுகளுக்கும் கதைக்கும் உள்ள வித்தியாசம்

    ReplyDelete
  2. மிகைப்படுத்தல் புனைவுகளில்...   நிஜங்கள் நிகழ்வுகளில்...

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே

    உண்மைதான். குரு பக்திக்காக இன்னலை தாங்கிய போது கற்ற வித்தை பலனற்று போயிற்று.

    வித்தைகள் ஏதுமின்றி வலி பொறுத்த போது பாசம் வென்று நிற்கிறது. தாயின் பாசத்திற்கு விலையேது.. அழகான கவிதை. ரசித்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. கர்ணன் தாங்கியது ஒரு முறை... முனியம்மா தினம் தினம் அல்லவா இதைத் தாங்குகிறார்.

    அழகான ஒப்பீடு!

    ReplyDelete
  5. கர்ணன் முனியம்மாளின் குறியீடு. தாய்மைக்கு இணையாக உலகத்தில் எதுவுமே இல்லை.

    ReplyDelete
  6. அழகிய ஒப்பீடு.. அருமையான கவிவரிகள்.

    ReplyDelete
  7. நிஜமாகவே இந்த ஒப்பீடு அருமை

    ReplyDelete
  8. அருமையான தெளிவுபடுத்தல்

    ReplyDelete