Monday, March 9, 2020

டயம் பாஸுக்கு என புத்தகமே வந்த பின்...

உழைத்துக் களைத்தவன்
மீண்டும் துள்ளி எழ
புத்துணர்ச்சி பெற
என இருந்த கலைகள் எல்லாம்

ஓய்ந்து கிடப்பவனுக்கும்
உளறித் திரிபவனுக்கும்
ஊன்றுகோல் ஆகிப் போய்
வெகு நாளாகிவிட்டது

மனத்தளவில்
பள்ளத்தில் கிடப்பவனை மேட்டுக்கும்
மேட்டில் இருப்பவனை உச்சத்திற்கும்
ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்த
கலைகள் எல்லாம்

நிற்பவனைத் தள்ளாடச் செய்யவும்
தள்ளாடுபவனை வீழச் செய்யவுமான
சதுப்பு நிலமாகிப் போய்
வெகு காலமாகிவிட்டது

தேவையான உணவுக்கும்
பசிக்கும் இடையினில்
நொறுக்குத் தீனியாய் இருந்த
கலைகள் எல்லாம்

துரித உணவாகி
அதுவே முழு உணவாகி
சக்திக்குப் பதில்
விஷமேற்றும் பொருளாகி
வெகு காலமாகிவிட்டது

இந்நிலையில் கவி முலம்
அறம் கூறி அறிவுரை கூறி
காணாமல் போகாதே
"ஐய்யோ பாவமென்னும்" பட்டமேற்று
பரிதவித்துப் போகாதே

"டைம் பாஸுக்கென "
தனிப்புத்தகமே வந்தபின்
காலத்தின் அருமையைச்
சொல்ல முயலும்
முட்டாள்  நிலை  நமக்கெதற்கு  ?

விஷத்தின் மீது தேன்தடவி
விற்கிற கலையினைப்பயின்று
கவிதைகள் புனைவோம் வா
ஆடுகள் இடையில் சிங்கமென நாமும்
சிலிர்த்துத் திரிவோம் வா

5 comments:

  1. இப்படித்தான் ஆகி விட்டதோ... ம்....

    ReplyDelete
  2. அருமை. சிறப்பாக சொன்னீர்கள். வாழ்க்கையே டைம் பாஸ் என்பது போலல்லவா ஆகிவிட்டது?

    தங்கள் பதிவுகளில் Page Break தெரிவை பயன்படுத்தவும். கால்வாசி பதிவுக்குப் பின்னர் அதை பயன்படுத்துங்கள். அப்போது 'மேலும் வாசிக்க' எனும் தெரிவு தோன்றும். அத்துடன், அந்த தெரிவு இல்லாததால் தங்கள் பதிவு முழுமையாக வலைத்திரட்டியால் ஈர்க்கப்பட்டுவிடுகிறது.

    வலைத்திரட்டி உலகின் புதிய புரட்சி: வலை ஓலை .
    நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது டயம் பாஸுக்கு என புத்தகமே வந்த பின்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  3. விஷத்தின் மீது தேன் தடவி... :( இன்றைய ஊடகங்களின் நிலை - மோசம்...

    ReplyDelete
  4. ஆடுகள் இடையில் சிங்கமென...ரசித்தேன்.

    ReplyDelete
  5. அறிவுரைகளை யாரும் கேட்கத் தயாராக இருப்பதில்லை. வழங்க எல்லோரும் ரெடி!

    ReplyDelete