Monday, June 1, 2020

எண்ணமே வாழ்வு...

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகள்  எதையும்
 மிக மிக எளிதாய் வெல்வோம்

7 comments:

  1. அருமை ஐயா... எண்ணங்களை சிறப்பிக்க எண்ணுவோம்...

    ReplyDelete
  2. எண்ணம் போல் வாழ்வு
    அருமை

    ReplyDelete
  3. 'எண்ணம் பொருத்தே மனதின் உயர்வு '
    அதனால்தான் போலும்
    'எண்ணம் போல் வாழ்வு ' என்றார்கள் .

    ReplyDelete
  4. அதுவும்என்னைப் போன்றொருக்கு எண்ண்ங்களே வாழ்வின் ஆக்ரமிப்பு சில நேரங்களில் ஆதாரம்

    ReplyDelete
  5. எண்ணங்களை சிறப்பாக வைத்துக்கொள்வோம்.

    ReplyDelete
  6. சிறந்த எண்ணங்கள் தேவை என்பதை சிறப்பாகச் சொன்ன பகிர்வு.

    ReplyDelete
  7. நல்லெண்ணங்களை நினைப்பதால்
    நல்ல செயற்பாடுகள் வெளிப்படும்

    ReplyDelete