Saturday, July 31, 2021

முன்னதும் பின்னதும்

உணவில்லாது

தவிப்பவன் தவிப்பு

மிகப் பெரிதாகத் தெரிந்தது


உணவிருந்தும்

உண்ணமுடியாதிருப்பவன்

நிலை அறிகிறவரையில்...


திறனிருந்திருந்தும்

உயர்வில்லாதவன் கொதிப்பு

சரியெனவே பட்டது


திறனில்லாது

உயர்வு பெற்றவன்

தவிப்பு அறிகிறவரையில்


சக்தியிருந்தும்

அனுபவிக்காதவன் நிலைமை

கொடுமையானதாகவே பட்டது


வாய்ப்பிருந்தும்

அனுபவிக்கமுடியாதவன்

அவஸ்தைஅறிகிற வரையில்


வாழ்வதற்காக

அன்றாடம் செத்துப் பிழைப்பவன்

பாவியெனவே தெரிந்தான்


சாவதற்காக

அன்றாடம் வாழ்ந்து தொலைப்பவன்

வாழ்வறிகிற வரையில்


முன்னதுவும் பின்னதுவும்

நம் வாழ்வில்

இருவோர எல்லைகளே


சமநிலை பேணும்

சூட்சுமம் அறிந்திடின்

இல்லை இத்தொல்லைகளே

7 comments:

  1. வணக்கம் சகோதரரே

    அருமையான தத்துவ பதிவு.

    /முன்னதுவும் பின்னதுவும்

    நம் வாழ்வில்

    இருவோர எல்லைகளே

    சமநிலை பேணும்

    சூட்சுமம் அறிந்திடின்

    இல்லை இத்தொல்லைகளே/

    விளக்கமான விபரமான வரிகள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. இருவேறு எல்லைகள்.  இருவேறு காரணங்கள்.  ப"சிவர அங்கே மாத்திரைகள்; பட்டினியால் இங்கு யாத்திரைகள்..  இருவேறுலகம் இதுவென்றால் இறைவன் என்பவன் எதற்காக" என்று கவியரசர் பாடியது போல...

    ReplyDelete
  3. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

    ReplyDelete
  4. சாவதற்காக வாழ்ந்து தொலைப்பவன்.. உறுத்தும் கருத்து. அசை போட்டுக்கொண்டிருக்கிறது மன மாடு.

    ReplyDelete
  5. சாவதற்காக வாழ்ந்து தொலைப்பவன்.. உறுத்தும் கருத்து. அசை போட்டுக்கொண்டிருக்கிறது மன மாடு.

    ReplyDelete
  6. சாவதற்காக வாழ்ந்து தொலைப்பவன்.. உறுத்தும் கருத்து. அசை போட்டுக்கொண்டிருக்கிறது மன மாடு.

    ReplyDelete